nakkeeran :மதுரை மாவட்டம், கே.கே. நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் இந்திய ஜனநாயகக் கூட்டணியின் தென் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு இந்திய ஜனநாயகக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சுலைமான் சேட் தலைமை தாங்கினார். அதேபோல், தலைவர் அப்துல் நாசர் ஜமாலி, மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகமது ரஃபிக், முகமது பிலால், திண்டுக்கல் அணஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை, சேலம், கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பொதுச்செயலாளர் சுலைமான் சேட், "இந்திய ஜனநாயகக் கூட்டணி ஒட்டுமொத்த முஸ்லிம்களை ஒருங்கிணைத்தும், பிளவுபட்டு இருக்கின்ற இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் கட்சிகளை ஒன்றிணைத்தும் பலம் வாய்ந்த அமைப்பாக உருவாக்கப்படும்.முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற 22 தொகுதிகளில் போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளோம்.
இதனை ஆதரிக்கின்ற (பாரதிய ஜனதா கூட்டணி தவிர) கூட்டணிக் கட்சிகளுக்கு 212 தொகுதிகளில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வெற்றிபெறச் செய்வோம்.
தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றோம். 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தொடர்ந்து களப்பணி செய்து வருகின்றோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், இந்திய ஜனநாயகக் கூட்டணிக்கு முக்கியமான தேர்தல். இஸ்லாமியர்களையும் இஸ்லாத்தையும் ஒழித்துக் கட்டுவதற்காக சில சகோதரர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு வருவது, தமிழகத்தில் மட்டுமின்றி உலக மக்களும் கவனிக்கின்ற விஷயம்தான்.
இந்தத் தேர்தலில் இஸ்லாமியர்கள் வலிமையாகப்
போட்டியிட்டு வெற்றி பெறாவிட்டால் அடுத்த தேர்தலிலும் வெற்றிபெற முடியாது.
ஆகையால், இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழக்கூடிய 22 தொகுதிகளைத்
தேர்ந்தெடுத்துப் போட்டியிட்டு வெற்றிபெறுவோம். தி.மு.க. ஆதரவு தந்தால் அதை
வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக