அந்த அலுவலகத்தை நடத்தியவர் வேறு யாருமல்ல, ஜீ.ஜீ.பொன்னம்பலத்தால் “வன்னி நாம்பன்” என அழைக்கப்பட்டவரும், அவரது தமிழ் காங்கிரஸ் கட்சியின் வவுனியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான தா.சிவசிதம்பரம். (தமிழ் காங்கிரசில் உடுப்பிட்டி தொகுதி எம்.பியான மு.சிவசிதம்பரமும் இருந்தார். அவரை பொன்னம்பலம் “உடுப்பிட்டி சிங்கம்” என அழைப்பார்)
இந்த தா.சிவசிதம்பரம் வவுனியா பாராளுமன்ற உறுப்பினரானதே ஒரு தனிக் கதை. 1956 தேர்தலில் வவுனியா தொகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் கணிதப் பேராசிரியரும் (இவர் எலிசபெத் மாகாராணிக்கு கணக்குப் படிப்பித்தவர் என்ற ஒரு போலிக்கதையும் நம்மவர் மத்தியில் உலா வருவதுண்டு), பிற்காலத்தில் ‘அடங்காத் தமிழர் முன்னணி’ என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்தவருமான சி.சுந்தரலிங்கம் வெற்றி பெற்று எம்.பியானார். இந்த அடங்காத் தமிழர் வவுனியாவில் எம்.பியாக இருந்த காலத்தில் அங்கு பல நூறு ஏக்கர் காணிகளையும், ஒரு சில குளங்களையும் தனதுடமையாக்கியும் இருக்கிறார். அது தனிக்கதை. (இந்த ‘கணித மேதை” சுந்தரலிங்கம்தான் 1960களில் மாவிட்டபுரம் ஆலயப்பிரவேசப் போராட்டத்தின் போது சாதி வெறியர்களுக்காக ஆட்டம் போட்டவர்)
இந்தச் சுந்தரலிங்கத்தைத் தோற்கடித்து தான் வவுனியா எம்.பியாக வந்துவிட வேண்டும் என்பது தா.சிவசிதம்பரத்தின் தணியாத தாகமாக இருந்தது. அதற்கான சந்தர்ப்பத்தை சுந்தரலிங்கமே ஏற்படுத்திக் கொடுத்தார். 1960இல் நடைபெற்ற தேர்தலில் (மார்ச் - யூலை என இரண்டு தேர்தல்கள்) சுந்தரலிங்கமும் சிவசிதம்பரமும் எதிரெதிராகப் போட்டியிட்டனர். சிவசிதம்பரம் ‘ஒறியினல்’ வன்னியான் (அவரது பூர்வீகம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணீரூற்று கிராமம். அங்குள்ள புற்றளையார் குடும்ப பரம்பரையைச் சேர்ந்தவர்) என்றபடியால் சுந்தரலிங்கத்தைவிட சிவசிதம்பரத்துக்கு ஆதரவு அதிகமாக இருந்தது.
இதைப் பொறுக்காத சுந்தரலிங்கம், “வன்னியாங்கள் வைக்கல் கத்தையைக் கண்ட மாடுகள் போல சிவசிதம்பரத்தின் சாராயத்துக்காக அவர் பின்னால் ஓடுறாங்கள்” என ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டார்.
கிடைத்தது சிவசிதம்பரத்துக்குப் பிடி. அவர் உடனே, “வன்னியானை மாடுகள் எனச் சொன்ன யாழ்ப்பாணத்தான் சுந்தரலிங்கத்துக்கா வாக்குப் போடப்போகிறீர்கள்?, மானமுள்ள வன்னி மக்களே?” எனக் கேள்வி கேட்டுப் பதிலடி கொடுத்தார்.
அவ்வளவுதான் சுந்தரலிங்கம் வவுனியாவிலிருந்து ‘அவுட்’. பின்னர் 1965 தேர்தலிலும் சுந்தரலிங்கம் அங்கு போட்டியிட்டு சிவசிதம்பரத்திடம் மண் கவ்வினார். (அதன் பின்னர் இன்றுவரை யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எவரும் வவுனியாவில் வெற்றி பெறவில்லை என நினைக்கிறேன்) அந்த நேரத்தில்தான் வன்னி மக்களுக்கு தொடர்ந்து யாழ்ப்பாண எதிர்ப்பு உணர்வை ஊட்டுவதற்காக இந்த ‘யாழகற்று சங்க’ அலுவலகத்தை வவுனியா பஸ் நிலையத்தில் ‘வன்னி நாம்பன்’ திறந்து வைத்தார். நான் 1970 – 71 காலகட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள சுமார் 25 கிராமங்களில் அரசியல் வேலை செய்த பொழுது, அந்தக் கிராமத்தவர்கள் மத்தியில் யாழ்ப்பாண எதிர்ப்பு உணர்வு மறைமுகமாக இருந்ததை அவதானித்துள்ளேன்.
யாழ்ப்பாணத்தவர்களுக்கு மட்டக்களப்பில் மட்டுமின்றி, வன்னி, மலையகம், தென்னிலங்கை என எல்லா இடங்களிலும் எதிர்ப்பு இருப்பதற்கு அவர்களது கடந்தகால வரலாறுதான் காரணம். இலங்கையை ஆண்ட பிரித்தானியர் சிங்களவர்களையும் தமிழர்களையும் திட்டமிட்டுப் பிரிப்பதற்காக தமிழர்களுக்கு அதிக கல்வி வாய்ப்பைக் கொடுத்தனர். அதனால் இலங்கை முழுவதும் யாழ்ப்பாணத் தமிழர்களே சகல துறைகளிலும் அரசாங்க அதிகாரிகள் ஆனார்கள். மற்றப் பக்கத்தில் யாழ் மாவட்டத்தில் நிலவிய வளப்பற்றாக்குறை காரணமாக பிழைப்புக்காக பலர் தென்னிலங்கைக்குச் சென்று வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள்.
அதாவது, நாட்டின் ஏனைய பகுதி மக்கள் யாழ்ப்பாணத்தவர்களில் ஒரு பகுதியினரை அதிகாரம் செலுத்துபவர்களாகவும், இன்னொரு பகுதியினரைத் தம்மைச் சுரண்ட வந்தவர்களாகவும்தான் பார்த்தனர். அதனால் எழுந்த வெறுப்புத்தான் யாழ்ப்பாணியர் எதிர்ப்பாகப் பின்னர் பரிணாமம் அடைந்தது.
அதுமட்டுமின்றி, அந்தக் காலத்தில் தென்னிலங்கையில் உத்தியோகம் பார்த்த, வியாபாரம் செய்த பல யாழ்ப்பாணத்தவர்களின் வீடுகளில் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒரு அப்புகாமியோ அல்லது பொடி மெனிக்காவோதான் வேலைக்காரர்களாக கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர். 1956இல் பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்ததும் அந்த நிலைமை மாறியது. பின்னர் அந்தச் சிங்கள வேலைக்காரர்களின் இடத்தில் மலையகத்தைச் சேர்ந்த இராமசாமியோ அல்லது மீனாட்சியோ வேலைக்கு அழைத்து வரப்பட்டனர். இப்பொழுது அந்த நிலையும் மாறிவிட்டது.
இவையெல்லாம் உள்ளடங்கி இருப்பதுதான் “ஆண்ட தமிழினம் மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் தவறென்ன?” என்ற கோசம். எனவே, விருப்பு வெறுப்புகளை ஒருபக்கம் தள்ளி வைத்துவிட்டு, எமது கடந்தகால வரலாற்றை சுய விமர்சன ரீதியாகப் பரிசீலனை செய்வதே இன்றைய தேவையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக