வியாழன், 11 பிப்ரவரி, 2021

சசிகலாவின் 300 கோடி சொத்து அரசுடமை .. இளவரசி, சுதாகரன் சொத்துகளை தொடர்ந்து ... தமிழக அரசு நடவடிக்கை

dhinakaran :  திருவாரூர்: சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி சசிகலாவின் 300 கோடி சொத்துகளை தமிழக அரசு நேற்று அதிரடியாக அரசுடமையாக்கியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலா, அண்ணன் மனைவி இளவரசி, வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இவர்களில், ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, மற்ற 3 பேரும் 2017 பிப்ரவரியில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். 3 பேரில் சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையாகி நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.



இந்தநிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இளவரசி மற்றும் சிறையில் உள்ள சுதாகரன் ஆகியோரின் சொத்துக்களை அரசுடமையாக்கி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சென்னையில் ஆயிரம்விளக்கு வாலஸ்கார்டன் பகுதியில் உள்ள கட்டிடங்கள், ராம் நகரில் உள்ள பல கோடி மதிப்புள்ள கட்டிடங்களை சென்னை மாவட்ட நிர்வாகம் அரசுக்கு சொந்தமாக்கி அறிவித்தது. மறுநாள், காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு, கிதிரிப்பேட்டை பகுதிகளில் இளவரசி, சுதாகரன் பங்குதாரர்களாக உள்ள சுமார் 141.75 ஏக்கர் பரப்பளவுடைய நிலத்தை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்து அரசுடமையாக்கியது. இதன் மதிப்பு சுமார் ₹300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 6 இடங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சிக்னோரா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 15.26 ஏக்கர் நிலம் மற்றும் தஞ்சாவூரில் 26,740 சதுர அடி பரப்பளவு கொண்ட 3 காலிமனைகள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1050 ஏக்கர் நிலங்கள் ஆகியவற்றையும் மாவட்ட நிர்வாகம் அரசுடைமையாக்கி அறிவித்தது. ஆனால், இந்த சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 2வது குற்றவாளியான சசிகலா ஆகியோரின் சொத்துக்களை தமிழக அரசு இன்னும் அரசுடைமையாக்கப்படாதது சர்ச்சை எழுந்தது.  

இந்தநிலையில், திருவாரூர் மாவட்டத்தில்  சசிகலாவுக்கு சொந்தமான சொத்துக்களை தமிழக அரசு நேற்று அதிரடியாக அரசுடமையாக்கியது. திருவாரூர் அருகே வண்டாம்பாளையத்தில் 34 ஏக்கர் 24 சென்ட் பரப்பளவில் ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த மாடர்ன் ரைஸ் மில் கடந்த 1995ம் ஆண்டில் சசிகலா மூலம் வாங்கப்பட்டது. இந்த ரைஸ்மில்லில் இளவரசி, சுதாகரன் மற்றும் பலர் பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர். தற்போது ரூ.300 கோடி மதிப்பிலான இந்த மாடன் ரைஸ் மில் கட்டிடம் மற்றும் அதனை சுற்றி இருக்கும் காலி இடங்கள் என அனைத்தும் அரசுடமையாக்கப்படுவதாகவும், இனி இந்த சொத்திலிருந்து பெறப்படும் வாடகை வருவாய் உள்ளிட்ட அனைத்தும் அரசுக்கு பாத்தியப்பட்டது எனவும் கலெக்டர் சாந்தா நேற்று தெரிவித்துள்ளார்.

'சொத்து விபரம்'
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கொரடாச்சேரி ஒன்றியம், வண்டாம்பாளையம் ஊராட்சி மற்றும் திருவாரூர் ஒன்றியம் கீலகாவாதுகுடி ஊராட்சி ஆகிய 2 ஊராட்சி பகுதிகளில் 34 ஏக்கர் 24 சென்ட் இடம் இருந்து வருகிறது. வடசென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 11.1.1995ம் தேதி ஆவண எண் 25 முதல் 29 வரையிலான சொத்துகள் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. அதேமாதம் 31ம் தேதி ஒரு பத்திர பதிவும், 1994-96 ஆண்டுகளுக்கிடையே கூடுதல் கட்டிடத்திற்கான பத்திர பதிவும் நடைபெற்றுள்ளது.

இதில் தற்போது தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட 5 குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு கட்டிடம் 10, விருந்தினர் கட்டிடம் மற்றும் நிர்வாக இயக்குனர் பங்களா என பல்வேறு கட்டிடங்கள் பராமரிப்பின்றி உள்ளது. இந்த மாடர்ன் ரைஸ் மில் வளாகத்தில் கடந்த 3ஆண்டுகளுக்கு முன் வரையில் அரசு கொள்முதல் நிலையம் வாடகை அடிப்படையில் இயங்கி வந்தது. தற்போது அதுவும் அந்த இடத்திலிருந்து காலி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: