திங்கள், 8 பிப்ரவரி, 2021

சசிகலாவின் ஓப்பனிங் ஸ்பீச்.. அடிபணிய மாட்டேன் - சசிகலா ஆவேசம்!

May be an image of fire and outdoors
சசிகலாவுக்கு வரவேற்பு வெடி வெடித்தபோது தீப்பற்றி 2 கார்கள் நாசம்!
nakkheerannewseditor - நக்கீரன் செய்திப்பிரிவு : சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, தனது தண்டனை காலத்தை நிறைவு செய்த நிலையில், இன்று (08/02/2021) காலை சென்னை திரும்ப, பெங்களூருவிலிருந்து கிளம்பினார். காலை 07.30 மணி அளவில் அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தைத் தொடங்கிய அவர், 10.30 மணி அளவில் தமிழக எல்லையை வந்தடைந்தார். தமிழக எல்லைக்குள் அ.தி.மு.க. கொடியுடன் வந்தால், சசிகலா மீது நடவடிக்கை எடுப்பது உறுதி எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் தமிழக கர்நாடக எல்லையில், காரில் உள்ள அ.தி.மு.க. கொடியை அகற்ற அவகாசம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கிருஷ்ணகிரி பகுதியில் சசிகலா, அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரின் காரில் மாறி, அந்த காரில் சென்னை நோக்கி வந்தார். பின் வரும் வழியில் சில இடங்களில் கோவிலில் தரிசனமும் நடந்தது.
 SASIKALA SPEECH ADMK EPS

அதேபோல் அவர் விடுதலையானதும் சென்னைக்கு வந்து ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்துவார் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், அதற்குமுன்பாக கடந்த வாரமே ஜெயலலிதா நினைவிடத்தில் பல்வேறு பணிகள் நடக்கவிருப்பதால், தமிழக அரசு ஜெ. நினைவிடத்தை மூடியது. அதேபோல் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலாதான் என அவர் ஆதரவாளர்கள் கூறிவந்த நிலையில், சென்னை ராயபேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், இன்று காலை சசிகலா பெங்களூருவிலிருந்து புறப்பட்டதும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவரின் பேனர்கள் அகற்றப்பட்டது. அதேபோல் அவரை வரவேற்க நின்றிருந்த ஆதரவாளர்களையும் அதிமுக தொண்டர்களையும் கலைந்துசெல்ல அறிவுறுத்தினர். மேலும் காவல்துறையின் கெடுபிடி அதிகமாகவே இருந்தது. 
 

SASIKALA SPEECH ADMK EPS

இந்தநிலையில், இன்று (08/02/2021) மாலை 05.50 மணி அளவில், காரில் இருந்தபடியே செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, "கழகம் எத்தனையோ முறை சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டு வந்திருக்கிறது. புரட்சித் தலைவி வழிவந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம். விரைவில் அனைவரையும் சந்திப்பேன்; நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை. உங்கள் அன்புக்கு நான் அடிமை. அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன். விரைவில் செய்தியாளர்களைச் சந்திப்பேன். ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். கொடியை நான் பயன்படுத்தியது குறித்து அமைச்சர்கள் புகாரளித்தது அவர்களின் பயத்தையே காட்டியது" என்றார்.

இந்தப் பேச்சு அங்கு கூடியிருந்த மக்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் உற்சாகப்படுத்தியது. இதனை மக்கள் வெகுவாக ரசிக்கவும் செய்தனர். மேலும் இந்தப் பேச்சு அ.தி.மு.க.வின் தலைமை வரை ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. அதேநேரம் இந்தப் பேச்சுக்குப் பிறகு அவரை வரவேற்க மற்ற இடங்களில் கூடியிருந்த தொண்டர்களிடத்தில் காவல்துறையினரின் கெடுபிடி சற்று குறைந்தே இருந்தது.

கருத்துகள் இல்லை: