nakkheeran.in - அண்ணல் : தி.மு.க.வின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை தி.மு.க.வில் இணைப்பது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க. கட்சியின் மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, மதுரையில் இன்று (08/02/2021) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அதற்கிடையே மதுரை அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள தனியார்
உணவு விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.;அப்போது பேசிய கனிமொழி, "அ.தி.மு.க. அரசின்
மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. ஆகையால், அவர்கள் ஆட்சி
மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இன்று மதுரையில் பல்வேறு தரப்பினரை
சந்தித்துப் பேசியபோது இதைத்தான் உணர முடிந்தது. பத்தாண்டுகளாக எந்தவித
நல்ல திட்டங்களையும் இவர்கள் கொண்டு வரவில்லை என மக்கள் குற்றம்
சாட்டுகின்றனர். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் எனக் கடந்த ஜனவரி
மாதம் முதலே ஸ்டாலின் கூறி வருகிறார். சசிகலாவை அ.தி.மு.க.வினர் தான்
'சின்னம்மா' என்றெல்லாம் பாராட்டி பேசினார்கள். இன்று தி.மு.க.வின் 'பி'
டீம் என்று கூறுவது நகைப்பாக உள்ளது. தி.மு.க. என்றும் நேரடி அரசியல்தான்
செய்யும்.
இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடம் சொல்கின்ற அதே நேரத்தில், கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட பல நல்ல திட்டங்களை நாங்கள் சொல்லியே மக்களைச் சந்திக்கிறோம். 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஆனால் அதனைச் செயல்படுத்துவது இல்லை என்பதுதான் உண்மை.
தி.மு.க.வின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து ஸ்டாலின்தான் முடிவெடுப்பார். இதுகுறித்து கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கையில் தி.மு.க. தற்போது வரை உறுதியாக உள்ளது. தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு தமிழகத்தின் தென்மாவட்ட வளர்ச்சிக்கு உரிய தொழில் வாய்ப்புகளை நிச்சயம் உருவாக்கும்.
ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ப்பேன் என்று மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதுபோன்று கருணாநிதி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி தருவேன் என்று கூறியபோது நிறைய பேர் விமர்சனம் செய்தார்கள் நிறைவேற்றினாரா? இல்லையா? அதுபோல் தி.மு.க. தலைவரும் பிரச்சினைகளைத் தீர்ப்பார்.
பொள்ளாச்சியில் நடந்த அநீதிகளுக்கு இன்றுவரை நியாயம் கிடைக்கவில்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள், குறிப்பாக பெண்கள் பிரச்சினைகள் அ.தி.மு.க. அரசால் தீர்க்கப்படவில்லை. காவல்துறையில் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கையும் மு.க.ஸ்டாலினும்தான் கதாநாயகர்கள்" என்றார்.
தமிழகப் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவது குறித்த கேள்விக்கு, "இதுகுறித்து நாடாளுமன்றத்திலேயே நாங்கள் எங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ளோம், அதில் எந்தவித மாற்றமும் இல்லை" எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக