திங்கள், 6 நவம்பர், 2017

கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா?

thetimestamil.com : கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கேலிச்சித்திரங்களை வரையும் ஓவியர் ‘கார்டூனிஸ்ட்’ பாலாவைத் தமிழகக் காவல்துறை திடீரென கைது செய்துள்ளது. அவர் தனது கேலிச்சித்திரங்களின் மூலம் ஆபாசத்தை பரப்பினார் என வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
அண்மையில் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் விமர்சித்து அவர் தீட்டிய கேலிச்சித்திரம் இலட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், பொதுமக்களிடையே வெகுவாக அம்பலப்பட்டுள்ளனர்.
கடந்த 23.10.2017 அன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே நடந்த கொடூர சம்பவம், பார்த்தோர் நெஞ்சை பதறவைத்தது. உள்ளத்தை அதிர்ச்சியில் உறையவைத்தது. இசக்கிமுத்து என்னும் கூலித்தொழிலாளியின் குடும்பமே பட்டப்பகலில் தீவைத்து உயிரை மாய்த்துக்கொண்டது. இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் இரு பிஞ்சுக்குழந்தைகள் என நான்குபேரும் தீயில் கருகி மண்ணில் சாய்த்து வீழ்ந்தனர். இந்தக் கொடூரம் கந்துவட்டி கொடுமைகளின் தாக்கம்தான் என்பதை தங்களின் சாவின் மூலம் உலகுக்கு உணர்த்தினர்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் இசக்கிமுத்து கந்துவட்டி கொடுமைகள் குறித்து மீண்டும் மீண்டும் முறையிட்டும் கூட அவரால் அதிகார வர்க்கத்தைச் சிறிதும் அசைக்க முடியவில்லை. உழைக்கும் மக்களின் குருதியை உறிஞ்சும் கந்துவட்டிக் கும்பலுக்கு அதிகார வர்க்கம் துணை போகிறது என்பதை அறிந்து விரக்தியின் விளிம்புக்கு சென்றதன் விளைவாகவே இசக்கிமுத்துவின் குடும்பம் இந்தக் கொடூரமான முடிவிற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
அந்த துயரத்தைக் காட்ட கேலிச்சித்திர ஓவியர் பாலா தனது ஆற்றாமையையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தீட்டிய கோட்டோவியம் இலட்சக்கணக்கான மக்களுக்குச் சற்று ஆறுதல் அளிப்பதாகவே அமைந்தது. அது நாகரீக வரம்புகளை மீறியதாகவும் ஆபாசம் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது என்று கருதினாலும், அந்த நான்கு உயிர்களும் கருகியக் கொடுமைக்கு வேறு எப்படி எதிர்வினை ஆற்ற முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. அதுவும் வன்முறை தவிர்த்து அறவழியில் தமது கண்டனத்தை வெளிப்படுத்த, அடிவயிற்றில் பற்றி எரியும் ஆவேசத் தீயை அணைத்திட, வேறு என்ன வடிவம் தான் உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கந்துவட்டிக் கொடுமைகளை ஒழிப்பதற்கு துளியளவும் முயற்சிக்காதது மட்டுமின்றி, அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது அவர்தம் புத்தியில் உறைக்கும்படி நியாயத்தை உணர்த்துவதற்கு வேறென்ன தான் வழியிருக்கிறது?
ஓவியர் பாலாவின் கோட்டோவியம் ஆபாசமானது என்றால், இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் பிஞ்சு குழந்தைகள் வைத்துக்கொண்ட தீயில் அவர்களின் உடைகள் எரிந்து- உடல்கள் வெந்து நிர்வாணமாய் மண்ணில் வீழ்ந்து கிடந்தார்களே, அது ஆபாசமில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. சட்டப்படியான தமது கடைமைகளையாற்றத் தவறிவிட்டோம் என்றும் அதனால் தான் இத்தகைய விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறோம் என்றும் உணர்ந்து வெட்கப்பட வேண்டியவர்கள், அதற்கு நேர்மாறாக ஆத்திரப்படுகிறார்கள் என்பது வேடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், ஓவியர் பாலாவைக் கைது செய்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் மீதான பொய் வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.”

கருத்துகள் இல்லை: