திங்கள், 6 நவம்பர், 2017

வெள்ளம் ..அக்கறை இல்லாத ஆட்சியாளர்கள்!

அக்கறை இல்லாத ஆட்சியாளர்கள்!மின்னம்பலம் :சென்னையில் 8 நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளது என்பது நகரின் பெருமையை சிதைத்துவிடும், ஆனால் இதுகுறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டள்ளது. மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் சார்பில் முதல்வரும், அமைச்சர்களும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற்றுவரும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துவருகின்றனர்.

இது குறித்து இன்று ( நவம்பர் 6) பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் 8 நாட்களாகியும் இன்னும் அகற்றப்படவில்லை. தமிழக அரசின் செயல்படாத தன்மையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாட்களாகத் தேங்கியுள்ள தண்ணீரிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதே நிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் சென்னையின் புறநகர் பகுதிகளில் மிகப் பெரிய அளவில் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்துள்ளது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சரும், அமைச்சர்களும் பார்வையிடும் நிகழ்வுகள் வெறும் சடங்குகளாகவே நடைபெற்று வருகின்றன. உலக வரைபடத்தில் மிக முக்கிய இடம் பிடித்துள்ள சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில் மழையால் தேங்கிய நீர் 8 நாட்களாக அகற்றப்படவில்லை என்பது உலக அரங்கில் சென்னையின் பெருமையைச் சிதைத்துவிடும். ஆனால், இது குறித்த எவ்வித அக்கறையும், புரிதலும், அக்கறையும் இல்லாமல் தமிழக ஆட்சியாளர்கள் அலட்சியமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது" என்றுள்ள அவர்,சென்னையில் மீண்டும் இதேபோன்ற சூழல் ஏற்படாமல் தடுக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, இயல்பு நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: