ஞாயிறு, 5 நவம்பர், 2017

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது! அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்ததால்....

bala
vikatan -பிரதீப்.த.ரே ::நெல்லை  தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கார்ட்டூனிஸ்ட் பாலா வரைந்த கேலி சித்திரம் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து கார்ட்டூனிஸ்ட் பாலா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த அக்டோபர் 23ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கி முத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அட்சயா ஆகியோர் உயிர் இழந்தனர்.
இது தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக,  'லைன்ஸ் மீடியா 'என்னும் இணையதளம் நடத்தி வரும் கார்ட்டூனிஸ்ட் பாலா , முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை காவல் ஆணையர் ஆகியோரை விமர்சித்து கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்திருந்தார்.
அதை லைன்ஸ் மீடியா தளத்திலும், தன் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். அந்தக் கேலிச்சித்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்ட்டூனிஸ்ட் பாலா மீது நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் சென்னை வந்த நெல்லை காவல்துறையினர் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தனர். மாறுவேடத்தில் வந்த 4 காவலர்கள் சென்னை கோவூரில் உள்ள கார்ட்டூனிஸ்ட் பாலாவின் வீட்டில் இருந்து அவரை கைது செய்து தரதரவென இழுத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் எங்கு கொண்டுச் செல்லப்படுகிறார் என்ற விவரம் தெரியவில்லை

Lulu Deva Jamla : பாலாவின் மேல் இந்த தருணத்தில் வைக்கப்படும் விமர்சனங்கள் பலரின் முதிர்ச்சியின்மையையே வெளிப்படுத்துகிறது. அந்த கார்ட்டூன் ஒரு கலைஞனின் ரௌத்திரத்தின் வெளிப்பாடு. அதை அவரே அந்த கார்ட்டூனில் குறிப்பிட்டும் இருக்கும் பட்சத்தில், தனிப்பட்ட மனிதர்களின் நிர்வாணத்தை படம்போட்டுவிட்டார் எனும் பொங்கல்கள் அர்த்தமற்றவையாகவே தோன்றுகிறது. பாலாவின் மீது தனிப்பட்ட முறையில் அல்லது கருத்தியல் வேறுபாடுகளால் யாருக்கு எத்தனை காழ்ப்புணர்ச்சி இருப்பினும் அதை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல. இந்த பாசிச இந்துத்துவ ஆதரவு அரசை எதிர்த்து கேள்வி எழுப்புபவர்களை கைது செய்வதும், சுட்டுக் கொல்வதும் ஒன்றும் இது முதல் முறையல்ல என்பதை மனதில் இருத்திக்கொண்டு இந்த கைது நடவடிக்கைக்கு எதிராய் குரல் கொடுப்பதா இல்லை மௌனம் சாதிப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
கட்டுப்பாடற்ற கருத்துச்சுதந்திரம் Vs வரையறைகளுக்குட்பட்ட கருத்துச்சுதந்திரம் குறித்த விவாதங்களை முன்வைப்பதால் மட்டும் இந்த நிலைமையில் முன்னேற்றம் ஏற்படப்போவது இல்லை. விமர்சனக் கருத்துக்களை, உணர்ச்சி வெளிப்பாடுகளை எல்லோரும் ஒரே போல எல்லா சமயத்திலும் வெளிப்படுத்த இயலாது. எனவே பாதிக்கப்படுபவர், இன்று அவன், நாளை நீயாய் கூட இருக்கலாம், அது யாராயினும்...

கருத்துகள் இல்லை: