பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து வந்து நீண்ட காலமாக
இந்தியாவில் வாழும் ஹிந்துக்கள் ஆதார் அட்டை, நிரந்தரக் கணக்கு (பான்) எண்,
வங்கிக் கணக்கு போன்ற சேவைகளைப் பெறவும், சொத்துகளை வாங்கவும்
அனுமதியளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியக் குடிமக்களாக பாகிஸ்தான்
ஹிந்துக்கள் பதிவு செய்து கொள்வதற்கான கட்டணத்தை 15,000 ரூபாயில் இருந்து
மிக, மிகக் குறைத்து 100 ரூபாயாக நிர்ணயிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம்
நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, அதன் பின்னர் இந்தியாவில்
குடியேறியுள்ள ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் மொத்த எண்ணிக்கை
குறித்து துல்லியமான விவரங்கள் தெரியவில்லை. எனினும், 2 லட்சம் பேர்
இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர்களில் ஹிந்துக்களே அதிகமானவர்கள்.
அண்டை நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வரும்
ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், இந்தியாவில் நீண்டகால விசாக்களைப்
பெற்று தங்கியுள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிந்துக்கள்
தொடர்ச்சியாக சந்திக்கும் துயரங்களைக் கணக்கில் கொண்டு அவர்களுக்கு
சலுகைகளை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல், குறிப்பிட்ட
நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும்,
சுயதொழில் புரியும் நோக்கில் ஓட்டுநர் உரிமம், பான் அட்டை போன்ற சேவைகளைப்
பெறவும் அனுமதியளிப்பது தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட ஓர் மாநிலத்தில் அல்லது யூனியன்
பிரதேசங்களில் அகதிகளாகத் தங்கியுள்ள பாகிஸ்தான் ஹிந்துக்கள் மற்ற
இடங்களுக்கு சுதந்திரமாக சென்று வர விதிக்கப்பட்டிருந்த தடைகளைத்
தளர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத் போன்ற
மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட சில மாவட்டங்களில், பாகிஸ்தான் ஹிந்துக்கள்
இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர், மாவட்ட
நீதிபதி போன்றோர் அந்த விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிப்பர். தினமணி.கம
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக