புதன், 14 அக்டோபர், 2015

ஆஸ்திரேலியா 20 லட்சம் காட்டுப்பூனைகளைக் கொல்ல தீர்மானம்!

ஆஸ்திரேலியாவில் உள்ள காட்டுப்பூனைகளில் சுமார் 20 லட்சம் பூனைகளைக் கொல்ல அரசு எடுத்திருக்கும் முடிவை ஆஸ்திரேலிய அரசு நியாயப்படுத்தியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சுமார் 2 கோடி காட்டுப்பூனைகள் இருக்கின்றன. இவைகள் நாட்டிற்கு சொந்தமான, அழிவின் அபாயத்திலிருக்கும் சுமார் 120க்கும் மேற்பட்ட விலங்கினங்களை அச்சுறுத்துவதாகவும் அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசு கூறுகிறது.
பிரெஞ்சு நடிகை பிரிஜிட் பார்தோவும் பிரிட்டிஷ் பாடகர் மோரிசியும் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு ஒரு "விலங்கினப் படுகொலை" என்று பிரிஜிட் பார்தோ வர்ணித்திருந்தார்.
இந்த பூனைகளைக் கொல்லும் முடிவு ஒரு "முட்டாள்தனமானது" என்று கூறிய மோரிசி, இந்த பூனைகள் ஜிம்பாப்வேயில் சமீபத்தில் அமெரிக்க வேட்டைக்காரர் ஒருவரால் கொல்லப்பட்ட செசில் என்ற சிங்கத்தின் குட்டி வகை விலங்கினம்தான் என்று கூறியிருந்தார்.

இந்த இருவருக்கும் ஆஸ்திரேலிய அரசு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் தங்களது முடிவுக்கான கொள்கை அடிப்படை குறித்து விளக்கியிருக்கின்றது.
ஆஸ்திரேலியாவின் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் உயிரினங்கள் ஆணையர், கிரெகொரி ஆண்ட்ரூஸ், இந்த இருவருக்கும் எழுதியிருக்கும் கடிதத்தில், இந்த காட்டுப்பூனைகள் ஆஸ்திரேலியாவுக்குள் ஊடுருவி வந்தவை, அவை ஆஸ்திரேலியாவில் உருவான சொந்த விலங்கினம் அல்ல, மேலும் அவை ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இருந்த குறைந்தது 27 பாலூட்டி விலங்கினங்களை அழித்துவிட்டன என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வாறு காட்டுப்பூனைகளால் அழிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பாலூட்டிகளில் பாலைவனப் பெருச்சாளி, நீண்ட காது கொண்ட தத்தித்தாவும் எலி உள்ளிட்டவை அடங்கும் bbc.tamil.com

கருத்துகள் இல்லை: