செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

சோனியா : தவறிழைத்த வசுந்தரா சுஷ்மா ஸௌகான் ஆகியோர் ராஜினாமா செய்யும் வரை பார்லிமென்டை செயல்பட

புதுடில்லி: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில், பார்லிமென்டின் இரு சபைகளிலும், காங்கிரசார் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கும் வகையில், கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டத்தில், அக்குழுவின் தலைவரான சோனியா பேசும் போது, பிரதமர் மோடியை எந்த அளவுக்கு தாழ்த்தி பேச முடியுமோ, அந்த அளவுக்கு பேசியதோடு, பா.ஜ., அமைச்சர் உள்ளிட்ட மூவர் ராஜினாமா செய்யும் வரை, பார்லிமென்டை செயல்பட அனுமதிக்க மாட்டேன் என, உறுதியாகவும் கூறினார்.   ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பாஜக ஐந்து முறைக்கும் மேலாக, ராஜினாமா முதலில் விவாதம் பின்னர் எனப் பிடிவாதமாக இருந்திருக்கிறது. அன்று பாஜக செய்ததை இன்று காங்கிரஸ்...


'பார்லிமென்டை சுமுகமாக செயல்பட அனுமதிக்க முடியாது' என தெரிவித்து, சோனியா பேசியதாவது:
வெளிப்படையாகவே தவறிழைத்த, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகு தான், பார்லிமென்டை சுமுகமாக செயல்பட அனுமதிப்போம்; விவாதங்கள் நடத்த அனுமதிப்போம்.எதிர்க்கட்சியாக இருந்த போது, சாதாரண விவகாரங்களுக்கு கூட, பார்லிமென்டை ஸ்தம்பிக்கச் செய்த, பா.ஜ., நமக்கு, பார்லிமென்டில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என, அறிவுரை கூறுவது, சாத்தானே வேதம் ஓதுவது போல உள்ளது.

பார்லிமென்டில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு, பொதுமக்களின் அபிப்ராயம் குறித்து தெரியாமல் இருக்கும் பிரதமர் மோடி அரசின் தன்மை தான் முக்கிய காரணம். இமாலய ஊழல்கள் நடந்துள்ள நிலையிலும், வேண்டுமென்றே விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதும், சட்டத்தை தங்கள் இஷ்டத்திற்கு வளைத்துள்ள பாங்கும் தான் காரணம்.எங்களுக்கும், பார்லிமென்ட் சுமுகமாக செயல்பட வேண்டும்; விவாதங்கள் நடக்க வேண்டும்; மசோதாக்கள் நிறைவேற வேண்டும் என்ற விருப்பம் இருக்கத்தான் செய்கிறது.

எனினும், லோக்சபாவில் அதிக பலம் இருக்கிறது என்பதற்காக, முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் மோடி அரசு, பார்லிமென்டை பின்னுக்குத் தள்ளி, அவசர சட்டங்களை பிறப்பித்துள்ளது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். காலம் காலமாக கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்த மனிதவள மேம்பாட்டுத்துறை, சில குறிப்பிட்ட கொள்கையை பாராட்டும் கூடாரமாக மாறிப் போய்விட்டது. சமூக பாதுகாப்பு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகள் ஆரோக்கியம், குஜராத் மாநிலத்தில் மிகவும் குறைவாக இருக்கிறது என, 'யுனிசெப்' வெளியிட்ட அறிக்கையை, மத்திய அரசு வெளியிட மறுக்கிறது.வட கிழக்கு மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, வாபஸ் பெறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளின் பிடியில், நாட்டின் கிராமப்புறங்கள் சிக்கிக் கொண்டுள்ளன. எங்கள் ஆட்சிக் காலத்தில் உயர்த்தப்பட்டது போல, விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலை உயர்த்தப்படவில்லை.ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள், இந்த அரசால் செயலிழந்து போயுள்ளன. செயல்படும் ஒன்றிரண்டும், மிரட்டலுக்கு ஆளாகியுள்ளன. இவ்வாறு, சோனியா பேசினார்.


பழசை புதுசு போல மாற்றுவதில் மோடி கில்லாடி:


பிரதமர் மோடி குறித்து அவர் கூறியதாவது:
*ஆழ்ந்த அமைதி காக்கிறார்
*மனதில் உள்ளதை பேசுகிறேன் என, வானொலியில் பேசுபவர், வெளியே மவுன விரதம் இருக்கிறார்
*முந்தைய காலங்களில் பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டவர்கள்; இப்போது அமைதி துாதுவர்களாக மாறிவிட்டனர்
*பா.ஜ., அளவுக்கு காங்கிரஸ் பார்லிமென்டை இன்னும் ஸ்தம்பிக்கச் செய்யவில்லை
*லோக்சபாவில் பெரும்பான்மை இருப்பதால் மட்டும், பொறுப்பிலிருந்து மோடி அரசு தப்பித்து விட முடியுமா
*பழசையே புதுசு போல மாற்றுவதில் மோடி வல்லவர்
* திறமையான வியாபாரி
* பத்திரிகைகளில் தலைப்பு செய்தியை ஆக்கிரமிப்பதில் கெட்டிக்காரர்
* திறமையான செய்தி மேலாளர்
* திறமையாக பேசி, வாய்க்கு வந்ததை எல்லாம் அறிவிப்பாக வெளியிட்டவர், அவற்றை நிறைவேற்ற முடியாமல் ஓராண்டிலேயே திணறுகிறார்.இவ்வாறு, மோடியை, சோனியா, வசைபாடினார் தினமலர் com 

கருத்துகள் இல்லை: