திங்கள், 20 ஏப்ரல், 2015

விழிகளால் பேசிய ஸ்ரீ வித்யாவின் காதலும் வாழ்க்கையும்

கமலஹாசன் அந்த ஒரு மணி நேரமும் கலங்கிப் போயிருந்தார். சராசரி மனிதர்களுக்கேயான எந்தவித செண்டிமென்டும் இல்லாத இரும்பு மனிதர் என்றுதான் அவரை அறிந்தவர்கள் சொல்வார்கள்.
ஆனால்- அந்த சந்திப்பு மட்டும் விதிவிலக்கு திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திர திருநாள் மருத்துவமனை. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார் ஸ்ரீவித்யா. தன்னுடைய நோய் யாருக்கும் தெரியக்கூடாது என்று நண்பர்களோ, உறவினர்களோ, மற்ற பிரபலங்களோ தன்னை வந்து பார்ப்பதை தவிர்த்தார். கமல்ஹாசனை மட்டுமே சந்திக்க அனுமதித்தார். ஏனெனில்- கமலஹாசன், ஸ்ரீவித்யாவுக்கு எப்போதுமே ஸ்பெஷல். இருவரும் காதலிக்கிறார்கள் என்று எழுபதுகளின் மத்தியில் தமிழ் – மலையாள ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதின. இத்தனைக்கும் கமலஹாசனைவிட ஸ்ரீவித்யா ஒரு வயது பெரியவர். இரு குடும்பத்தாரிடமும் போராடி திருமணத்துக்கு அவர்கள் சம்மதம் வாங்கிவிட்டதாகவும் செய்திகள் வந்தன.


நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஸ்ரீவித்யாவின் இறுதிக்காலம் இத்தனை சோகமாக இருந்திருக்காது. கமலஹாசன் – ஸ்ரீவித்யா இருவரும் ஏன் பிரிந்தார்கள் என்றெல்லாம் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்குப் பிறகு இப்போது புலனாய்வு செய்யவேண்டிய அவசியமில்லை. இருவரும் காதலித்தார்களா என்றுகூட இன்று உறுதிப்படுத்திக் கொள்ளவும் தேவையில்லை. ஏனென்றால், இருவரும் தனித்தனி பாதையை தேர்ந்தெடுத்தார்கள். ஈடுபட்ட துறையில் உச்சத்தை எட்டினார்கள்.

கடைசி நாட்களில் ஸ்ரீவித்யாவை கவனித்துக் கொண்டவர் மலையாள நடிகரும், கேரளாவின் முன்னாள் அமைச்சருமான கே.பி.கணேஷ்குமார். “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. சிகிச்சைக்காக உலகின் எந்த நாட்டுக்கு அனுப்பினால், நோய் தீருமோ அங்கு அனுப்புங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவரிடம் கமல் உறுதியளித்தாராம்.

இருவருக்கும் இடையே நடந்த அந்த கடைசி சந்திப்புதான் ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியது என்கிறார் இயக்குனர் ரஞ்சித். அவர் எடுத்து 2008ல் வெளிவந்த ‘திரக்கதா’ திரைப்படத்தின் போஸ்டரிலேயே பெரியதாக மறைந்துவிட்ட ஸ்ரீவித்யாவின் படத்தை அச்சிட்டார்கள். ரசிகர்களும், விமர்சகர்களும் ‘திரக்கதா’வை கொண்டாடினார்கள். ஸ்ரீவித்யா பாத்திரத்தில் நடித்த பிரியாமணிக்கு, அந்த ஆண்டு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.

அக்டோபர் 19, 2006ல் காலமானபோது ஸ்ரீவித்யாவுக்கு வயது 53. அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் அவருக்கு ‘ஸ்பைன் கேன்சர்’ இருப்பது கண்டறியப்பட்டது. ‘கீமோ தெரபி’ சிகிச்சைக்கு செல்லும்போதெல்லாம் இதனால் தன் தோற்றம் பாதிக்கப்படுமோ, அதனால் நடிப்பு வாய்ப்பு குறைந்துவிடுமோ என்று அவர் அச்சப்பட்டதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஸ்ரீவித்யாவுக்கு அவரது வாழ்வும், நடிப்பும் வேறு வேறல்ல. நடிப்பினை உயிருக்கும் மேலாக நேசித்ததால்தான் இன்னும் சிறிது காலம் வாழ விரும்பினார்.

இத்தனைக்கும் ஸ்ரீவித்யா நடிக்க வந்ததே கூட யதேச்சையாக நடந்த விஷயம்தான்.
அம்மா எம்.எல்.வசந்தகுமாரி மிகப்பிரபலமான கர்நாடகப் பாடகி. அப்பா கிருஷ்ணமூர்த்தியும் பிரபலமான நடிகர்தான். 1953ல் ஸ்ரீவித்யா பிறந்தபோது உடல்நலக்குறைவு காரணமாக அவரது அப்பா நடிப்பதை நிறுத்தியிருந்தார். குடும்பம் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் இருந்தது. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ஒப்புக்கொண்டு மேடை மேடையாக பாடிக் கொண்டிருந்தார் அம்மா. “கைக்குழந்தையான எனக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூட நேரமில்லாமல் அம்மா குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருந்தார்” என்று பிற்பாடு ஒரு பேட்டியில் சொன்னார் ஸ்ரீவித்யா.

பெற்றோர் சூட்டிய பெயர் மீனாட்சிதான். ஆனால், இவர் பிறந்ததை கேள்விப்பட்ட சிருங்கேரி மடத்தின் தேத்தியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், ‘ஸ்ரீவித்யா’ என்று பெயரிட்டு அழைக்கும்படி கேட்டுக் கொண்டாராம். ஸ்ரீவித்யா உபாசகரான அவரது ஆசையை தவிர்க்கமுடியாமல் மீனாட்சி, ஸ்ரீவித்யா ஆனார்.

வித்யாவின் சிறுவயதின் போது குடும்ப பொருளாதாரம் காரணமாக பெற்றோருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருந்தது. தாத்தா அய்யசாமி அய்யர்தான் வித்யாவுக்கு ஆறுதல். தினமும் சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து லஸ் கார்னரில் இருக்கும் தண்ணீர்த்துறை மார்க்கெட்டுக்கு தாத்தாவும், பேத்தியும் காய்கறி வாங்க ரிக்‌ஷாவில் வருவார்கள்.

இசைமேதையான தாத்தா ரிக்‌ஷா பயணத்தின் போது கீர்த்தனைகளை பாடியபடியே வருவாராம். பேத்திக்கு புரிகிறதோ இல்லையோ, தான் பாடிய பாடலின் ராகம், தாளம் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பாராம். இதனால் ஐந்து வயதிலேயே ராகங்களை அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய திறமை ஸ்ரீவித்யாவுக்கு வாய்த்தது.

வித்யாவுக்கு பத்து வயதாக இருக்கும்போது, அவரது குரு டி.கிருஷ்ணமூர்த்தி, “இவள் கச்சேரி செய்யுமளவுக்கு கற்றுத் தேர்ந்துவிட்டாள்” என்று சான்று கொடுத்தார்.

ஆனால்-

ஸ்ரீவித்யாவுக்கு சங்கீதத்தைவிட நாட்டியத்தில்தான் குழந்தையாக இருந்ததிலிருந்தே ஆர்வம். பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் இந்தியாவிலேயே நாட்டியத்தில் புகழ்பெற்ற திருவாங்கூர் சகோதரிகள் அல்லவா? நாட்டியப் பேரொளி பத்மினியின் நாட்டியம் என்றால் ஸ்ரீவித்யாவுக்கு அவ்வளவு உயிர். அவர்தான் குரு தண்டாயுதபாணி பிள்ளையிடம் ஸ்ரீவித்யாவை சேர்த்து வைத்தவர். அவருக்கு ஆறு வயதாக இருந்தபோதே பத்மினி-ராகினி நடத்திய நாட்டிய நாடகத்தில் பாலசீதாவாக தோன்றினார். பதினோரு வயதில் அரங்கேற்றம்.

அத்தனை சிறுவயதிலேயே இந்தியா முழுக்க ஸ்ரீவித்யா நடனத்தில் பிரபலமானார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திராகாந்தி, ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மேடையேறினார்.
அம்மாவுக்கு சங்கீதம், மகளுக்கு நாட்டியம் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். அப்படியிருக்கையில், அந்த மாலைப்பொழுது ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையையே மாற்றியது. பள்ளியில் இருந்து திரும்பியிருந்தார். வீட்டு வாசலிலேயே பரபரப்பாக காத்திருந்தார் பத்மினி.

“வித்யா, சீக்கிரம் ரெடி ஆகு. உனக்கு இன்னைக்கு மேக்கப் டெஸ்ட்”

“எதுக்குக்கா?”

“நீ சினிமாவில் நடிக்கப் போறே”

வித்யா அப்போதுதான் டீனேஜிலேயே நுழைந்திருந்தார். “வேணாம் அக்கா. எனக்கு டேன்ஸுதான் பிடிச்சிருக்கு”

“அடிப்பாவி. தமிழ்நாட்டுலே அத்தனைப் பொண்ணுங்களும் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுற எம்.ஜி.ஆரே கூப்பிட்டிருக்காரு. வேணாம்னு சொல்றீயே?”

“எம்.ஜி.ஆரா?” கிட்டத்தட்ட மயங்கிவிழப் போன வித்யாவை, பத்மினிதான் தாங்கிப் பிடித்தார். எம்.ஜி.ஆரின் பெயரை சொன்னபிறகும் மறுக்க முடியுமா என்ன. அந்த காலத்தில் அவரை யார்தான் ரசிக்காமல் இருந்திருக்க முடியும்?

பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய ‘ரகசிய போலிஸ் 115’ படத்துக்குதான் வித்யாவுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. ஆனால் புடவையில் இவரைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை. “ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கு. இன்னும் கொஞ்சம் வளரட்டும். நானே வாய்ப்பு கொடுக்கறேன்” என்றார். ஸ்ரீவித்யா நடிக்க இருந்த வேடத்தில்தான் ஜெயலலிதா அந்த படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த மேக்கப் டெஸ்டெல்லாம் எடுப்பதற்கு முன்பாகவே ஏ.பி.நாகராஜன், வித்யாவின் அம்மாவிடம் இவரை நடிக்கவைக்க கேட்டுக் கொண்டுதான் இருந்தார். ஆனால், அப்போது எம்.எல்.வசந்தகுமாரிக்கும் சரி, வித்யாவுக்கும் சரி. நடிப்பைப் பற்றி ஐடியா எதுவுமில்லை. ‘ரகசியப் போலிஸ்’ விஷயத்தில் ஏமாற்றம் அடைந்திருந்த வித்யாவுக்கு இப்போது நடிப்பை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று வீம்பு ஏற்பட்டு விட்டது. ஏ.பி.என்.னுக்கு சம்மதம் தெரிவித்து செய்தி அனுப்பினார்கள்.

‘திருவருட்செல்வர்’ படத்தில் நடனம் ஆடினார் ஸ்ரீவித்யா. தொடர்ச்சியாக படங்களில் நடனமும், சிறிய வேடங்களும் கிடைத்தன. ‘காரைக்கால் அம்மையார்’ திரைப்படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘தகதகதகதகவென ஆடவா’ பாடலுக்கு தகதகவென ஸ்ரீவித்யா ஆடியிருந்த வேகத்தில் தமிழ்நாடே அசந்துப் போனது.

மலையாளத்தில் ஸ்ரீவித்யா ‘சட்டம்பிக்காவலா’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஹீரோ சத்யனுக்கு வயது அப்போது ஐம்பத்து ஏழு. தன்னைவிட நாற்பது வயது மூத்த ஹீரோவுக்கு ஈடுகொடுத்து நடித்த இவரது துணிச்சல் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

தமிழில் பாலச்சந்தர் புயல் வீச ஆரம்பித்த காலம். அவரது ‘வெள்ளிவிழா’, ‘நூற்றுக்கு நூறு’ படங்களில் வித்யா தலை காட்டியிருந்தார். பாலச்சந்தரின் ஃபேவரைட் நடிகையாக மெதுவாக உருவாகத் தொடங்கினார். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, கமலுக்கும், ஸ்ரீவித்யாவுக்கும் பெரிய பிரேக்காக அமைந்தது. நடனம் தெரிந்த ஸ்ரீவித்யாவின் பெரிய கண்கள் அவரது நடிப்புக்கு ப்ளஸ்பாயிண்ட்.
வித்தியாசத்துக்கு பெயர்போன பாலச்சந்தர், ஸ்ரீவித்யாவை ஒரு ட்ரீம்கேர்ளாக இல்லாமல் திறமையான நடிகையாக வளர்த்தெடுத்தார். இருபத்தி இரண்டு வயது ஸ்ரீவித்யா, இருபது வயது பெண்ணுக்கு அம்மாவாக ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடித்தபோது ஆச்சரியப்படாத ஆளே இல்லை. அந்த படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவித்யாவின் ‘பைரவி’ கேரக்டர், தமிழ் சினிமாவில் சாகாவரம் பெற்ற பாத்திரம். ரஜினிகாந்தின் முதல் ஜோடி ஆயிற்றே? படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவி, கமலுக்கு காதலி.

ரஜினி, கமல் மட்டுமல்ல. எழுபதுகளின் பிற்பாதியில் கோலோச்சிய தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களுடனும் ஸ்ரீவித்யா நடித்தார். தான் பிறப்பதற்கு முன்பே தமிழ் சினிமாவில் ஹீரோவாகிவிட்ட சிவாஜியுடனும் ‘நாம் இருவர்’, ‘நாங்கள்’, ‘நீதியின் நிழல்’ மாதிரி படங்களில் ஜோடி சேர்ந்தார்.

முதன்முதலாக வாய்ப்பு தர முன்வந்த எம்.ஜி.ஆரோடு மட்டும் ஜோடி சேரமுடியவில்லை. ஆனால், அதற்கு பரிகாரமாக எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதுமே ஸ்ரீவித்யாவுக்கு ‘கலைமாமணி விருது’ கிடைத்தது. மட்டுமல்ல, 1977-78ஆம் ஆண்டின் சிறந்த நடிகையாக தமிழக அரசு விருதையும் பெற்றார்.

தமிழ் – மலையாளம் இரு மொழிகளுக்குமே முக்கியத்துவம் தந்தவர் கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களிலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். அதனால்தான் ஒட்டுமொத்தமாக அவரால் 900 படங்கள் நடிக்க முடிந்தது.

அவரது சினிமா வாழ்க்கை சிறப்பாக இருந்தபோதே இல்லற வாழ்வினை தேர்ந்தெடுத்தார். உண்மையை சொல்லப் போனால் சொர்க்கத்திலிருந்து நரகத்துக்கு போய் சேர்ந்த உணர்வினை அடைந்தார். தன் வாழ்க்கைத் துணைவராக ஜார்ஜ் தாமஸை அவர் தேர்ந்தெடுத்ததுதான் அவர் செய்த பெரிய தவறு. அடுத்த ஒன்பது ஆண்டுகளில் ஒருநாள் கூட ஸ்ரீவித்யா நிம்மதியாக உறங்கியதே இல்லை.

வித்யாவின் அம்மாவும், நண்பர்களும் ஆரம்பத்திலேயே இத்திருமணத்துக்கு எதிராகதான் இருந்திருக்கிறார்கள். தன்னுடைய சொந்த தேர்வு தவறானதுமே, அதை வெளிப்படுத்திக்கொள்ள முடியாமல் தவித்தார். இவருடைய சொத்துக்களை எல்லாம் தன்னுடைய உல்லாச வாழ்வுக்காக அழிக்கத் தொடங்கினார் ஜார்ஜ். ஏகப்பட்ட கடன். எல்லாவற்றுக்கும் ஸ்ரீவித்யாவே ஜவாப்தாரி. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்ட ஸ்ரீவித்யாவால் திருமணம்தாண்டிய ஜார்ஜின் பெண் உறவை மட்டும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விவாகரத்து வாங்கினார்.

ஆனால், ஸ்ரீவித்யா தன் சொந்த உழைப்பில் சேர்த்த வீட்டைகூட ஜார்ஜ் அபகரித்துக் கொண்டார். நீண்டகால சட்டப் போராட்டம் நடத்தியே அதை மீண்டும் பெற முடிந்தது. இந்த போராட்டமான காலத்தில் நடிகர் செந்தாமரை, இயக்குனர் ஆர்.சி.சக்தி போன்ற நண்பர்கள்தான் ஸ்ரீவித்யாவுக்கு துணையாக இருந்தார்கள் (ஆர்.சி.சக்தி கமலின் உள்வட்ட நண்பர் எனும் தனிக்குறிப்பு இங்கே தேவையில்லாதது என்றாலும் குறிப்பிடத்தக்கது).

யோசித்துப் பார்த்தால் ஸ்ரீவித்யாவின் இந்த தவறான தேர்வுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. “நான் முதன்முதலாக அம்மாவின் மடி மீது தலைசாய்ந்து படுத்தபோது எனக்கு வயது 34 ஆகிவிட்டிருந்தது” என்று வித்யா ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். தாயன்பினை தரிசிக்கவே முப்பது ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார் என்பது எவ்வளவு கொடுமை? சிறுவயதில் இருந்தே அன்புக்கு ஏங்கியவராகதான் இருந்திருக்கிறார்.

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கருத்து வேறுபாடு என்பதால் அப்பாவின் அன்பு அவருக்கு கிடைக்கவேயில்லை. பதிலாக தாத்தாவிடமிருந்து கிடைத்த நேசிப்பும் பத்து வயது வரை மட்டுமே -தாத்தாவின் திடீர் மரணம் காரணமாக- நீடித்தது.

திரையுலகில் எதிர்பாராமல் கிடைத்த கமலின் நட்பும், அன்பும் அவரை தேற்றியிருக்கும். ஆனாலும் அந்த பந்தம் திருமணத்தில் முடியாததாலேயே, அவசர அவசரமாக ஓர் ஆண் பாதுகாப்பினை நாடி ஜார்ஜை தேர்ந்தெடுத்துவிட்டார். உச்சநீதிமன்றம் வரை போய் தனக்கு உரிமையான சொத்துகளை ஜார்ஜிடமிருந்து திரும்பப் பெற்றவருக்கு சென்னையில் வாழும் ஆசையே அற்றுப்போனது. திருவனந்தபுரத்துக்கு இடப்பெயர்ச்சி செய்தார்.

இடையில் திருமணம் மாதிரியான பிரச்சினைகளால் அவரது நடிப்பு வாழ்க்கையிலும் சில பாதிப்பு. நிறைய புதுநடிகைகள் இவரது இடத்தில் அமர்ந்து விட்டார்கள். எழுபதுகளின் இறுதிவரை கோலோச்சிக் கொண்டிருந்தவர் எண்பதுகளின் துவக்கத்திலேயே அம்மா, அண்ணி பாத்திரங்களை ஏற்கவேண்டியதாயிற்று. 1982ல் வெளிவந்த ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ படத்தில் நாயகி அருணாவுக்கு அம்மாவாக நடிக்கும்போது ஸ்ரீவித்யாவின் வயது முப்பதைகூட எட்டவில்லை.
ரஜினியின் முதல் ஜோடியான ஸ்ரீவித்யா அவருக்கு அக்காவாக ‘மனிதன்’, ‘உழைப்பாளி’ படங்களிலும், மாமியாராக ‘மாப்பிள்ளை’, அம்மாவாக ‘தளபதி’ படங்களிலும் நடித்தார். ஊரே திருஷ்டிபோட்ட ஜோடிப்பொருத்தம் கமல்-ஸ்ரீவித்யா ஜோடிக்கு. அதே கமலுக்கு அம்மாவாக ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நடித்தார். ‘என் ராசாவின் மனசிலே’ போன்ற படங்களில் வயதுமுதிர்ந்த கிழவியாகவும் நடித்தார். வேடங்களை ஏற்பதில் அவருக்கு எந்த ஈகோவும் இல்லை என்பதுதான் முக்கியமானது. புதுமுக நடிகர், தன்னைவிட வயது மூத்தவர்கள் பாகுபாடு இல்லாமல் ‘நடிப்பு’ என்கிற தொழிலுக்கு விசுவாசமாக இருந்தார். கடைசிக் காலத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது தமிழ், மலையாளம் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஸ்ரீவித்யாவின் மரணத்தை கேரளா பெரும் இழப்பாக எடுத்துக் கொண்டது. அம்மாநில முதல்வர் அச்சுதானந்தன், “ஸ்ரீவித்யா பிறப்பால் தமிழராக இருக்கலாம், ஆனால் அவரை கேரளா மகளாக தத்தெடுத்துக் கொண்டது” என்றுகூறி இருபத்தோரு குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு தகனம் நடத்த ஏற்பாடு செய்தார்.

ஒரு நடிகையின் மறைவுக்கு அரசு மரியாதை என்கிற மாபெரும் கவுரவத்தை தான் சார்ந்த தொழிலுக்கு செத்த பிறகும் பெற்றுத் தந்தவர் ஸ்ரீவித்யா.

(நன்றி : தினகரன் வசந்தம்)

கருத்துகள் இல்லை: