செவ்வாய், 21 ஏப்ரல், 2015

200 தமிழ்படங்களை காணவில்லை! Negatives lost MGR சிவாஜி ஜெமினி ஹிட் படங்களைகூட ...?

மூன்று முதலமைச்சர்களை உருவாக்கிய நம் தமிழ் திரைத் தொழிலின் வரலாறு நமக்கு மட்டுமல்ல... உலகத்துக்கே பொக்கிஷம்! கடந்த ஆண்டு வரை தமிழில் சுமார் 6 ஆயிரத்து சொச்சம் படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவற்றில் மிக முக்கியமான பல படங்கள் மிஸ்ஸிங் என்கிறார்கள் சினிமா வல்லுநர்கள். இதில், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற சகாப்தங்கள் நடித்த படங்களும் அடக்கம். ஏன், 80களுக்குப் பின் வந்த சில படங்களே இப்போது காணாமல் போனவை லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டனவாம்! ‘‘அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட படச் சுருள்களில் நைட்ரேட் என்ற ரசாயனம் கலந்திருக்கும். நைட்ரேட்டில் இருக்கும் வெள்ளியை விற்றுக் காசாக்க நினைத்தவர்களால் அந்தக் காலப் படங்கள் அழிந்திருக்கலாம்!’’ என்கிறார் தமிழ்த் திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன். ‘‘தமிழில் பேசும் படங்கள் வரத் துவங்கியது 1930களில்தான். அப்போது வந்த ஏராளமான படங்களில் இரண்டே படங்கள்தான் நாம் பார்க்கஎஞ்சியுள்ளன. மற்றவை காணவில்லை. இதுதவிர, நாற்பதுகளின்போது பல தமிழ்ப் படங்கள் சிங்கப்பூர், மலேசியாவில் எல்லாம் ஓடிக்கொண்டிருந்தன. இரண்டாம் உலகப் போரினால் அந்தப் படப் பெட்டிகள் மீண்டும் தமிழகம் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதில் அழிந்துபோன படங்களும் அதிகம். அப்படி கடல் கடந்து தொலைந்த சில படங்கள் அங்கேயே டி.வி.டி ஆக்கப்பட்டு இங்கே விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. ‘பர்மா ராணி’, எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘சகுந்தலை’ போன்றவை அப்படி மீட்டெடுக்கப்பட்டுள்ளன.


ஆனால், காணாமல் போன படங்களின் பட்டியல் மிகப் பெரிது. கே.சுப்ரமணியம் இயக்கிய ‘மான சம்ரட்ஷணம்’ என்ற படம் அவற்றில் முக்கியமானது. இரண்டாம் உலகப் போரில் தமிழர்கள் கால்நடையாகவே பர்மாவிலிருந்து வந்த துன்பத்தை இந்தப் படம் சொல்லும். அடுத்து, சினிமா மேதை கே.ராம்நாத் இயக்கிய ‘மனிதன்’. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பிம்பங்களை எல்லாம் அந்தக்காலத்திலேயே தூக்கிப் போட்ட புரட்சிகரப் படம் அது. வெளிநாட்டில் முதன்முறையாக படம் பிடிக்கப்பட்ட தமிழ்ப் படம் ‘நவயுவன்’. லண்டனில் ஷூட் செய்யப்பட்ட இந்தப் படத்தையும் காணவில்லை.

அன்றைய கவர்ச்சிக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி, நாகையா நடித்தது ‘வாழப்பிறந்தவள்’ என்ற படம். விதவை மறுமணம் தொடர்பாக புரட்சிகரமான கருத்தைச் சொன்ன இந்தப் படமும் இப்போது இல்லை. 1938ல் எல்லிஸ் ஆர்.டங்கன் என்ற பிரபல இயக்குனர் இயக்கிய ‘அபூர்வ சகோதரர்களை’யும் தொலைத்துவிட்டோம்.

ராஜாஜியின் கதை ஒன்று ‘திக்கற்ற பார்வதி’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. அதுவும் காணவில்லை! இந்தப் பழைய படங்களோடு பல புதிய படங்களும் இன்னும் கிடைக்காத நிலையில்தான் உள்ளன. உதாரணமாக எடிட்டர் லெனின் இயக்கிய ‘ஊருக்கு நூறு பேர்’, எழுத்தாளர் ஜெயகாந்தனே இயக்கிய ‘உன்னைப்போல் ஒருவன்’ படங்களைக் காணவில்லை’’ என்கிறார் அவர் கவலையாக!

சரி, யாருடைய அசட்டையால் இந்த சினிமாக்கள் கை நழுவின? ‘‘காலத்தின் கோலம்!’’ என்கிறார் சினிமா தகவல் பெட்டகமான ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். ‘‘ஒரு தயாரிப்பாளர் தன் படத்தை வெளியிடும்போது, படத்தின் ஒரிஜினல் காப்பி... அதாவது, மாஸ்டர் நெகட்டிவ் தயாரிப்பாளரிடமே இருக்கும். காப்பி எனும் பிரின்ட்கள்தான் விநியோகஸ்தரிடம் கொடுக்கப்படும்.

ஒரு விநியோகஸ்தருக்கு அந்தப் படத்தை வைத்து பணம் சம்பாதிக்க பத்து வருடம் வரை உரிமை உண்டு. அதற்குப் பிறகு பிரின்ட் காப்பியை தயாரிப்பாளரிடம் திருப்பித் தர வேண்டும். அதன் பிறகும் அந்தப் படத்தை மீண்டும் வாங்கித் திரையிட ஆட்கள் வந்தால், தயாரிப்பாளர் தன்னிடமுள்ள ஒரிஜினலில் இருந்தோ அல்லது விநியோகஸ்தர் கொடுத்த பிரின்டிலிருந்தோ மீண்டும் பிரின்ட் போடுவார்.

நெகடிவ், பிரின்டுகளைப் பாதுகாப்பதில் பெரிய சிக்கல் உண்டு. அவற்றை அப்படியே போட்டு வைத்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும். அடிக்கடி எடிட்டிங் ரூமில் ஓட்டிப் பார்க்க வேண்டும். ஏ.சி. அறையில்தான் வெகுநாள் கெடாமல் வைத்திருக்க முடியும். அந்தக் காலத்தில் ஸ்டூடியோக்கள் தவிர, தனிப்பட்ட நபர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களாக இருந்தார்கள்.

ஸ்டூடியோக்கள் தயாரித்த படங்களே காணாமல் போகும் நிலையில், தனிப்பட்ட தயாரிப்பாளர்களிடம் படச்சுருளை பாதுகாக்க இவ்வளவு வசதி எங்கிருந்து வரும்?’’ என்கிறவர், ‘‘இன்று டி.வி.டிக்களாக சில படங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் ஒரிஜினலும் பிரின்ட்டும் அழிந்து போயிருக்கலாம்.

டி.வி.டிக்களின் ஆயுள் எப்படி என்று சொல்ல முடியாது. அந்த வகையில் படங்கள் தொலைவது இனியும் தொடர்கதையாகலாம்!’’ என அதிர்ச்சி தருகிறார். அப்படித் தொலைந்துகொண்டிருக்கும் படங்கள் என்னென்ன? அந்தப் பட்டியலைத் தருகிறார் ஏ.வி.எம் நிறுவனம் நடத்தும் டி.வி.டி கடை ஊழியரான கருணாகரன்.‘‘எம்.ஜி.ஆர் நடித்த சுமார் 15 படங்களைக் காணவில்லை என்கிறார்கள் சேகரிப்பாளர்கள்.

உதாரணமாக, அவர் கெஸ்ட் ரோலில் போலீஸ் கான்ஸ்டபிளாக அறிமுகமாகிய ‘சதிலீலாவதி’ மிஸ்ஸிங். அப்புறம் ‘நாம்’, ‘சாலிவாகனன்’, ‘குமாரி’, ‘பணக்காரி’ போன்ற படங்களையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சிவாஜி நடித்த ‘மனிதனும் மிருகமும்’, ‘பூங்கோதை’, ‘நல்லவீடு’, ‘செந்தாமரை’, ‘கண்கள்’ உள்ளிட்ட சுமார் 22 படங்களைக் காணவில்லை என்கிறார்கள். அண்ணா கதை, வசனமெழுதிய ‘சொர்க்கவாசல்’, ஜெமினி இரட்டை வேடத்தில் நடித்த ‘மனம்போல் மாங்கல்யம்’, ‘மல்லிகா’... சூப்பர் ஹிட் பாடல்களோடு நூறு நாட்கள் ஓடிய இந்தப் படங்களும் இப்போது கிடைப்பதில்லை.

ஜெய்சங்கர் நடித்த காமெடி படமான ‘சிரித்த முகம்’, ‘ரத்தத்தின் ரத்தமே’, ‘ஒரு கொடியில் இருமலர்கள்’, ‘ஆசை மனைவி’, ‘சவாலுக்கு சவால்’ போன்ற படங்களும் இல்லை.

முத்துராமன், எஸ்.எஸ்.ஆர்., ஏவி.எம் ராஜன், சிவகுமார் நடித்த அநேக படங்கள் இப்போது கிடைப்பதில்லை. 80க்குப் பிறகு வந்த படங்களில் விஜயன் நடித்த ‘தெருவிளக்கு’, காந்த் நடித்த ‘யாருக்கு யார் காவல்’ மற்றும் ‘பணம் பகை பாசம்’, சரத்பாபு நடித்த ‘எங்க ஊர் கண்ணகி’, சரிதா, சுதாகர் நடித்த ‘குருவிக்கூடு’,

‘ஆடுகள் நனைகின்றன’ என இப்படியே பட்டியலிட்டால் சுமார் 200 படங்களையாவது சொல்லலாம்!’’ என அதிர்ச்சி தருகிறார் அவர்.வரலாறுகளைத் தொலைப்பதில் நம்மை மிஞ்ச யாருமில்லை!

எம்.ஜி.ஆர் நடித்த இருநூற்று சொச்ச படங்களில் சுமார் 15 படங்களைக் காணவில்லை. அவர் கெஸ்ட் ரோலில் போலீஸ் கான்ஸ்டபிளாக அறிமுகமாகிய ‘சதிலீலாவதி’ மிஸ்ஸிங்.

நன்றி: குங்குமம்

கருத்துகள் இல்லை: