வியாழன், 23 ஏப்ரல், 2015

பாஜக: இணையத்தையும் கையகப்படுத்தி காபரெட் கைகளில் கொடுப்போம்? முதல்ல நிலம் இப்போ இன்டர்நெட் அடுத்து ....

புதுடில்லி: ''நிலங்களை அப்பாவி விவசாயிகளிடம் இருந்து பறித்து, தொழிலதிபர்களிடம் கொடுக்க விரும்புவது போல, பிரதமர் மோடி அரசு, இலவசமாக இருக்கும் இணையத்தையும், தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்க நினைக்கிறது,'' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கூறினார். இரண்டு நாட்களுக்கு முன், நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து, லோக்சபாவில் காரசாரமாக பேசிய ராகுல், நேற்று, 'நெட் நியூட்ராலிட்டி' எனப்படும், இணைய சமநிலை குறித்து விலாவாரியாக பேசினார்.எந்த காரணத்தை கொண்டும், இணைய சமநிலை பறிபோகக் கூடாது என, அவர் குரல் கொடுத்தார்.பின், பார்லிமென்டுக்கு வெளியே, பத்திரிகையாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:
இணைய சமநிலையை சீர்குலைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடிக்கு, இணையதளங்களைப் பயன்படுத்தும் இளைஞர்கள் தான் ஓட்டளித்தனர் என கூறப்படுகிறது. அது உண்மை எனில், இளைஞர்களின் விருப்பமான இணையத்தை, அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும்.
அதை தவிர்த்து, இணைய சமநிலைக்கு மாறுபாடான நிலைப்பாட்டை எடுக்கும் நோக்கில், ஆலோசனை நடவடிக்கையை, 'டிராய்' துவக்கியுள்ளது. இதன் உள்ளர்த்தம் என்னவெனில், இப்போது இலவசமாக இருக்கும் இணையத்தை, தொழிலதிபர்கள் கைக்கு மாற்றிவிடுவது தான்.விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து, தொழிலதிபர்களுக்கு வழங்க, இந்த அரசு முடிவு செய்துள்ளது போல, இணையத்தையும், தொழிலதிபர்களுக்கு தாரைவார்க்க நினைக்கிறது. இதை எதிர்த்து நான், பார்லிமென்டில் பேச முற்பட்ட போது, குறைந்த நேரமே ஒதுக்கினர்.எந்த காரணத் தைக் கொண்டும், இணைய சமநிலை சீர்கெட நான் அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு, ராகுல் பேசினார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய தகவல், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும் போது
, ''முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்தது. 125 கோடி இந்தியர்களுக்கும், இணையம் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். ஆலோசனை நடவடிக்கையை தான், 'டிராய்' மேற்கொண்டது. இறுதி முடிவு, அரசின் கையில் தான் உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும், இணைய சமநிலை பாதிக்கப்படாது,'' என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை: