வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஆளுநரிடம் திமுக மனு :தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு: அதிமுகவினரின் வெறியாட்டம் எல்லை மீறுகிறது !

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கக் கோரி, திமுக சார்பில் தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் மனு ஒன்று அளிக்கப் பட்டுள்ளது. 18 வருடங்களாக நடைபெற்று வந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது.  ஜெயலலிதாவிற்கு எதிரான இந்தத் திர்ப்பையடுத்து கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக இன்று திமுக சார்பில் தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் மாநகராட்சி முன்னாள் மேயர் மா சுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான திமுகவினர், இன்று ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து இந்த மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த 30ஆம் தேதி சென்னை மாநகராட்சி கூட்டம் நடைபெற்ற போது, திமுக உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹாவுக்கு கண்டனம் தெரிவித்து மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி வருவதால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும், இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் திமுக தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: