திங்கள், 29 செப்டம்பர், 2014

பீஹார் முதலமைச்சர் தலித் ! அவரால் கோவிலுக்கு தீட்டாம் ! சிலைகளையும் கோவிலையும் கழுவினார்களாம் ?

மாநிலத்தின் உயர் பதவியில் இருந்தாலும்கூட, சிலர் தன்னை தீண்டத்தகாதவராக இன்னும் கருதும் நிலைமை நீடிப்பதாக பிஹார் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து பிஹார் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோது, "நான் இப்போது முதல்வர் பதவியில் இருக்கிறேன். ஆனாலும் சில ஆதிக்க குணம் படைத்தவர்கள் என்னை தீண்டத்தகாதவராக பார்க்கின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், மதூபானி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு என்னை முக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள அழைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று அங்கிருந்த கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் நான் கலந்து கொண்டேன். ஆனால் அங்கிருந்தவர்கள் நான் பூஜை முடித்து கிளம்பியதும், கடவுகள்களின் சிலைகளை கழுவினர். ஊர்த் தலைவர் ஒருவர் வீட்டுக்கும் செல்ல நேர்ந்தது, அங்கும் தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டது. நான் இன்னும் தீண்டத்தகாதவனாகவே பார்க்கப்படுகிறேன்.
பலர் தங்கள் வேலையை முடித்து கொள்வதற்காக என் காலில் விழுகின்றனர். ஆனால் சமூக சூழல் என்று வரும்போது என்னை அனைவரும் தீண்டத்தகாதவனாகவே பார்க்கின்றனர்.
மகாதலித்களின் நிலைமை இது தான். நாம் இந்த சமூகத்தில் எந்த இடத்தில் வைக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது" என்றார்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பிஹார் முதல்வராக இருந்த நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், அம்மாநில முதல்வராக ஜித்தன் ராம் மாஞ்சி பதவியேற்றார். ஜித்தன் ராம் மாஞ்சிக்கு வயது 68.
மாஞ்சி, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் இருந்தே விவசாய தொழிலாளியாகப் பணியாற்றினார். 7-ம் வகுப்பு வரை பள்ளிக்குச் செல்லாமல் முறைசாரா கல்வி முறையில் பயின்றவர் ஆவார். அதன் பின்னரே முறையாகப் பள்ளிக்குச் சென்று கல்லூரி படிப்பை முடித்தார்.
போலா பஸ்வான் சாஸ்திரி, ராம் சுந்தர் தாஸுக்கு பின்னர் பிஹாரின் தலித் சமூகத்தை சார்ந்த மூன்றாவதுமுதல்வர் மாஞ்சி என்பது குறிப்பிடத்தக்கது. /tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: