புதன், 6 ஆகஸ்ட், 2014

Chennai அரசு மருத்துவமனையில் ஆயிரம் சிறு நீரக அறுவை சிகிச்சை!சாதனை !

சென்னை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆயிரம் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். மாற்று சிறுநீரகஅறுவை சிகிச்சை உலக உடல் உறுப்புகள் தானம் செய்யும் தினம் இன்று (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் விமலா, சிறுநீரக இயல் துறை தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- சிறுநீரகம் செயல் இழந்த நோயாளிகளுக்கு அவர்களுடைய நெருங்கிய உறவினரிடமிருந்து தானம் பெற்றும் மூளைச்சாவு ஏற்பட்ட நபரிடம் இருந்து தானம் பெற்றும் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கடந்த 1987-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. பணம் புடிங்கி தனியார் மருத்துவ மனைகளுக்கு எல்லாம் இது ஒரு சாட்டை அடி! வாழ்க பணியாளர்கள் அனைவரும்


முதல் முறையாக கடந்த 1996-ம் ஆண்டு மூளைச்சாவு ஏற்பட்ட நபரிடமிருந்து சிறுநீரகம் பெற்று மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுவரை ஆயிரத்து 143 மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் உறவினர்களிடமிருந்து தானமாக பெறப்பட்டது ஆயிரத்து 3-ம், மூளைச்சாவு நபர்களிடமிருந்து தானமாக பெறப்பட்டு 140 மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைகளும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு மருத்துவமனை சாதனை

இந்தியாவிலேயே மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சையை இலவசமாக ஏழை நோயாளிகளுக்கு வழங்கிய முதல் மாநிலம் என்று சொன்னால் அந்த பெருமை தமிழ்நாட்டையே சாரும். மேலும் இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான முற்றிலும் இலவசமான மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ள மருத்துவமனை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைதான்.

இதனால் தமிழகம் மொத்த இந்தியாவிற்கும் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் ராஜீவ்காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரே மாதத்தில் அதிகபட்சமாக 11 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் உறவினர்கள் தானமாக கொடுத்த 7 சிறுநீரகங்களும், மூளைச்சாவு அடைந்தவர்கள் மூலம் பெறப்பட்ட 4 சிறுநீரகங்களும் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலவச மருந்துகள்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் செய்யவேண்டிய அனைத்து பரிசோதனைகள், சிறுநீரகம் பொருத்தும் அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப்பின் வாழ்நாள் முழுவதுமான மருத்துவ பராமரிப்பு அனைத்தும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.

மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் புதிதாக பொருத்தப்பட்ட சிறுநீரகம் உடலில் பொருந்தி நல்ல முறையில் இயங்குவதற்காக ‘இம்முனோசுப்ரஸ்ஸிவ்’, சைக்ளோஸ்போரின் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறைக்கு மேலும் புத்துணர்வை தருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆயிரமாவதுஅறுவை சிகிச்சை

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையை பொருத்தமட்டில் உறவினர்களிடமிருந்து தானமாக பெற்று ஆயிரமாவது மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை கடந்த 1-ந்தேதி திருவாரூர் மாவட்டம் ராஜமன்னார்குடி அருகேயுள்ள கன்டிதம்பேட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (வயது 39) என்பவருக்கு நடைபெற்றது. கலையரசனுக்கு அவருடைய மனைவி இளவரசி (27) தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக கொடுத்திருந்தார்.

கலையரசன்-இளவரசி தம்பதியருக்கு சரண்யா (7) என்ற பெண் குழந்தையும், சத்யபிரியன் (4) என்ற மகனும் உள்ளனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட கலையரசன் மற்றும் அவருக்கு சிறுநீரகம் தானமாக கொடுத்த இளவரசி ஆகிய 2 பேரும் தற்போது நலமாக உள்ளனர்.

தானம் செய்யவேண்டும்

இதுகுறித்து இளவரசி நிருபர்களிடம் கூறுகையில், என்னுடைய கணவர் சிங்கப்பூரில் தோட்ட வேலை செய்து வந்தார். அப்போது அவர் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தோம். 4 மாதங்களில் மட்டும் அவருக்கு 38 முறை ‘டயாலிசிஸ்’ சிகிச்சை கொடுக்கப்பட்டது. என்னுடைய சிறுநீரகத்தை டாக்டர்கள் வெற்றிக்கரமாக கணவருக்கு பொருத்தினர். தற்போது நாங்கள் 2 பேருமே எப்போதும் போன்ற இயல்பான நிலையில் உள்ளோம். சிறுநீரகம் தானம் கொடுப்பது பற்றி யாருமே பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தாங்களாகவே முன்வந்து தானம் செய்யவேண்டும் என்றார். dailythanthi.com

கருத்துகள் இல்லை: