வியாழன், 7 ஆகஸ்ட், 2014

விமானத்தை கடத்தினால் சுட்டு வீழ்த்த சட்டத்தில் திருத்தம்!! பேச்சே கிடையாது!

டெல்லி: விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகைசெய்யும் புதிய மசோதா தயார்நிலையில் உள்ளது. கடத்தப்படும் விமானத்தை சுட்டு வீழ்த்த பாதுகாப்பு படையினருக்கு இம்மசோதா அதிகாரம் அளிக்கிறது. விமான கடத்தல் தடுப்பு சட்டம், 1982ம் ஆண்டு இயற்றப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்யப்பட்டு, புதிய மசோதா, கடந்த 2010ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு, ராஜ்யசபாவில் அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அப்போதிருந்து மசோதா நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தற்போதைய நரேந்திர மோடி அரசு, அந்த மசோதாவில் பல்வேறு நாடுகளின் விமான கடத்தல் தடுப்பு சட்டங்களில் உள்ள முக்கிய அம்சங்களை சேர்த்து, அம்மசோதாவை வலிமையானதாக மாற்றி உள்ளது. இந்த மசோதா, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக தயார்நிலையில் உள்ளது. மசோதாவில், கடுமையான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, உயிரிழப்பை ஏற்படுத்தும் விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். அதுபோல், விமான கடத்தல் பற்றி புரளி கிளப்பி விடுகிறவர்களுக்கும் தண்டனை விதிக்க மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்காவில் அல்-கொய்தா தீவிரவாதிகள், விமானங்களை கடத்திச் சென்று, அவற்றை , இரட்டை கோபுர கட்டிடம் மீது மோதினர். அதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, கடத்தப்படும் விமானங்களை சுட்டு வீழ்த்த பாதுகாப்பு படையினருக்கு இம்மசோதா அதிகாரம் அளிக்கிறது. ஒரு விமானம், அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்துவார்கள். மேலும், கடத்தப்பட்ட விமானத்தை இந்திய விமானப்படை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கடத்தல் அபாயம் உள்ள விமானத்தை புறப்படாமல் நிறுத்திவைப்பதற்கும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் அளிக்கப்படும். இந்த மசோதாவில், ‘கடத்தல்' என்பதற்கு புதிய பொருள் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பறந்து கொண்டிருக்கும் விமானத்துக்கு மட்டுமே ‘கடத்தல்' என்ற வார்த்தை பொருந்தும் என்பதல்ல. ஒரு விமானம், புறப்படுவதற்கு முந்தைய 3 மணி நேரம் வரையும், தரை இறங்கிய பிறகு 24 மணி நேரம் வரையும், அந்த விமானம், கடத்தல்காரர்களின் பிடிக்குள் வந்தால், அதுவும் ‘கடத்தல்' என கருதப்படும். ‘ஆந்த்ராக்ஸ்' கிருமி போன்ற உயிரியல் ஆயுதங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலும் கடத்தலாக கருதப்படும். மத்திய விமான துறை அமைச்சர் அசோக் ராஜு இத்தகவலை உறுதி செய்தார்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: