ஞாயிறு, 26 ஜனவரி, 2014

நியாயம் கேட்கச் சென்ற என்னை நீக்கி விட்டனர் !அழகிரி பலப்பரீட்சைக்கு தயாராகிறார்

நியாயம் கேட்கச் சென்ற என்னை, கட்சியை விட்டு நீக்கி விட்டனர்' என, கூறி வரும் அழகிரி, மாவட்ட வாரியாக உள்ள, கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன், தொலைபேசியில் பேசி, ஆதரவு திரட்டி வருகிறார். தன் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லி, இக்கட்டான இந்த நேரத்தில் தன்னை ஆதரிக்க வேண்டும் என, கேட்டு வருகிறார். மதுரையில், 30ம் தேதி நடக்கவுள்ள, தன் பிறந்த நாள் விழாவில், எல்லா மாவட்ட தி.மு.க.,விலும், தனக்கு ஆதரவாளர்கள் இருக்கின்றனர் என்பதை காட்டவும், அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆசைப்படவில்லை: அதற்காக, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, ஈரோடு, கோவை, சென்னையில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன், அவர் பேசியுள்ள தகவல், வெளியாகி உள்ளது. 'கட்சியில் நான் எந்த பதவியும் எதிர்பார்க்க வில்லை; தலைவர் பதவிக்கும் ஆசைப்பட வில்லை. அது எல்லாருக் கும் தெரியும். ஸ்டாலின் அப்படியல்ல; தலைவர் இருக்கும்போதே, தலைவராக ஆசைப்படுகிறார். அதையே, நான் எதிர்க்கி றேன். தலைவருக்கு பிறகு அதை முடிவு செய்யலாம் என, சொல்கிறேன். அதில் என்ன தப்பு?'தலைவருக்கு பின், நான் கட்சித் தலைவராக வேண்டும் என, ஆசைப்படவில்லையே. அப்படியிருக்கும்போது, இப்போதே ஸ்டாலின் என்னை ஓரங்கட்டி விட்டு, தலைவராக ஆசைப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது.

இதை புரிந்து கொள்ளுங்கள்' என, இம்மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது. தி.மு.க.,வில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டு உள்ள, அழகிரி, சென்னையில் தங்கி உள் ளார். இன்று மதுரை செல்ல விருக்கும் அவருக்கு, மிகப் பெரிய வரவேற்பு அளிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரமாண்டமாக...:மதுரையில், தன் ஆதரவாளர்களை சந்தித்துப் பேசும் அவர், 30ம் தேதி பிறந்த நாள் நிகழ்ச்சியை, முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு, பிரமாண்டமாக நடத்துவது குறித்து, ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
இது பற்றி, மதுரையில் உள்ள அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், 'மிகப்பெரிய அளவில், பிறந்த நாள் விழா நடத்தப்பட உள்ளது. :முறை நடந்த பிறந்த நாள் விழாவுக்கு, நிறைய மாவட்டச் செயலர்கள் வரவில்லை; இந்த முறையும் அவர்கள் வரப்போவது இல்லை. ஆனாலும், எல்லா மாவட்டத்திலும் உள்ள தொண்டர்கள் வருவர். அது தான் எங்கள் நோக்கம். அதற்கான ஏற்பாடுகளையே செய்து வருகிறோம்' என்றனர்.

போஸ்டர்கள்: இந்நிலையில், நேற்றுமீண்டும் அழகிரிக்கு ஆதரவாக போஸ்டர்கள், மதுரை நகரில் ஒட்டப் பட்டிருந்தன. இம்முறை கருணாநிதி படம் இல்லை. கட்சி சின்னம், கொடி, கறுப்பு, சிவப்பு பார்டர் ஏதும் இல்லை. அழகிரி போட்டோ மட்டுமே இடம் பெற்றிருந்தது. இதற்கிடையே, மொழிப் போர் தியாகிகள் பொதுக் கூட்டம் தொடர்பாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களில், அழகிரி படம் இடம் பெற்றிருந்தது. ஆனால், இது முன்னரே தயாரான போஸ்டர் என்கின்றனர் கட்சியினர்.

ஆதாரங்களை வெளியிடுவேன் அழகிரி பரபரப்பு பேட்டி: சென்னை, ஈஞ்சம்பாக்கம், பாரதி அவென்யூவில் உள்ள, பண்ணை வீட்டில், அழகிரி, நேற்று காலை அளித்த பேட்டி:
நான் ஹாங்காங் செல்வதற்கு முன், கருணாநிதியை சந்தித்தேன். அப்போது, நீக்கப்பட்டவர்களில் ஒருவரான, கொட்டாம்பட்டி ராஜேந்திரன், தேர்தலில் நடந்த முறைகேடு குறித்து, புகார் மனு கொடுத்தார்.

விசாரணை இல்லை:அந்த மனுவை, நான் கொடுத்தேன். அதை, அமைப்புச் செயலரிடம் கொடுத்து, விசாரிக்கக் கூறினார் கருணாநிதி. விசாரித்தது போல் ஒரு மாயையை ஏற்படுத்தினரே தவிர, விசாரணை நடத்தவில்லை.கொட்டாம்பட்டி
ராஜேந்திரன் தந்த பல ஆதாரங்களை, இப்போது நான் வெளியிட விரும்பவில்லை. மதுரையில், 31ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்து, அந்த ஆதாரங்களை வெளியிடுவேன்.தி.மு.க.,வில், ஜனநாயகம் செத்துவிட்டது. நியாயம் கேட்கப் போன எனக்கு கிடைத்த பரிசாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளேன். கட்சியில் நான், எந்தகுழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை.

போஸ்டர் ஒட்டக்கூடாது என, சட்டம் இருக்கிறதா? என்னை ஆதரித்து போஸ்டர் ஒட்டியது தப்பா? 'சி.எம்.,' என்று போஸ்டர் ஒட்டினரே, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? தலைவர் இருக்கும் போதே, 'வருங்கால தலைவர்' என்று போஸ்டர்கள் ஒட்டவில்லையா? அவர்கள் மீது, சுயமரியாதை உள்ள பொதுச் செயலர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.ஸ்டாலின் தலைமையை ஏற்காமல் இருந்ததால், என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது எனக்குத் தெரியாது.

நியாயம் கேட்டேன்: ஆனால், என் மீது திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தலில், போட்டி வேட்பாளர்களை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை. தி.மு.க., தானாகவே தோல்விஅடையும்.கட்சியின் நிர்வாகிகளுக்காக நியாயம் தான் கேட்கச் சென்றேன். ஆனால், பத்திரிகைகள் வேறு மாதிரி எழுதுகின்றன. அதைப் பற்றி நான் கவலைப்படப் போவது இல்லை.இவ்வாறு, அழகிரி பேட்டி அளித்தார்.

- நமது சிறப்பு நி dinamalar.com

கருத்துகள் இல்லை: