வியாழன், 30 ஜனவரி, 2014

அழகிரிக்கு நோட்டீஸ் ! 48 மணிநேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் ?

கட்சியின் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டது ஏன்? என்பது குறித்து 48 மணிநேரத்திற்குள் விளக்கம் அளிக்க மு.க.அழகிரிக்கு தி.மு.க. உயர்மட்டக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக சமீபத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார். அதில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டிற்கும், கொள்கைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது அழகிரி காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும், 3 மாதத்தில் அவர் இறந்து விடுவார் என்று கூறி சென்றதாகவும் கூறினார். இதுகுறித்து பேட்டி அளித்த மு.க.அழகிரி, கருணாநிதி கூறிய கருத்துக்கள் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், இருப்பினும் இதை என்னுடைய பிறந்தநாள் பரிசாக ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தி.மு.க. உயர்மட்டக்குழுவில் இருந்து மு.க.அழகிரிக்கு நேற்று ஒரு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்த கொண்ட உங்களை ஏன் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க கூடாது? என்று அதற்கு விளக்கம் அளிக்க வேண்டி, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 48 மணிநேரத்திற்குள் இந்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. nakkheeran.in

கருத்துகள் இல்லை: