புதன், 29 ஜனவரி, 2014

தேமுதிக, காங்கிரஸ் பின்வாங்கியது ஏன்? : கடைசி கட்ட பரபரப்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக, காங்கிரஸ் ஆகியவை கடைசி நேரத்தில் பின் வாங்கியது ஏன் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிகிறது. இந்த 6 இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 7ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 21ம் தேதி தொடங்கியது. திமுக சார்பில் திருச்சி சிவா, அதிமுக சார்பில் வக்கீல் எஸ்.முத்துக்கருப்பன், முன்னாள் அமைச்சர் ஏ.கே. செல்வராஜ், எல்.சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்தம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன் மற்றும் சுயேச்சைகள் 2 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர்.


வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். இதனால், கடைசி நாளில் காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அக்கட்சியின் வேட்பாளராக ஜி.கே.வாசன் நிறுத்தப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், இரு நாட்களுக்கு முன் ஜி.கே.வாசன் டெல்லி சென்றார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தேமுதிகவின் 21 எம்எல்ஏக்களின் ஆதரவை பெறுவதுடன், தங்கள் கட்சியில் உள்ள 5 எம்எல்ஏக்கள் ஆதரவையும் சேர்த்தால் காங்கிரஸ் வேட்பாளருக்கு 26 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்து விடும். மேலும் தேமுதிக, புதிய தமிழகம் கட்சியில் உள்ள அதிருப்தி எம்எல்ஏ ஆதரவை பெற்றால், திமுக வேட்பாளரை விட ஓட்டு கூடுதலாக பெற்று வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரஸ் கணக்கு போட்டது.

இந்நிலையில், வேட்புமனுதாக்கலில் கடைசி நாளான நேற்று ஜி.கே.வாசன் வேட்புமனு தாக்கல் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் வரவில்லை. இதனால் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. காங்கிரசை ஆதரிக்க முடியாது என்று தேமுதிக கைகழுவிவிட்டதால் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து காங்கிரஸ் பின்வாங்கியதாக தெரிகிறது. அதேநேரத்தில் தேமுதிகவும், திடீரென்று காங்கிரஸ் ஆதரவுடன் போட்டி யிடக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

இது குறித்து தகவல் தெரிவிக்க விஜயகாந்த்தோ, முன்னணித் தலைவர்களோ முன்வரவில்லை. இதனால் கடைசிவரை பரபரப்பு நிலவியது. தேமுதிக அல்லது காங்கிரஸ் சார்பில் மாலை 3 மணிக்குள் யாராவது வந்து மனு தாக்கல் செய்யலாம் என்று தலைமைச் செயலக வாசலில் ஏராளமான பத்திரிகையாளர்களும், உளவுத்துறையினரும் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் பரபரப்பு அடங்கியது.

தேமுதிக சார்பில் விழுப்புரத்தில் வருகிற 2ம் தேதி ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தப்படுகிறது. இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் காங்கிரசுடன் கைகோர்த்தால் வருகிற மக்களவை தேர்தலில் தேமுதிக வெற்றி பெறுவது கடினமாகி விடும். எனவேதான், மாநிலங்களவை தேர்தலில், காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கவோ, காங்கிரஸ் ஆதரவு பெறவோ தேமுதிக  மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. dinakaran.com

கருத்துகள் இல்லை: