புதன், 8 ஆகஸ்ட், 2012

விரைவில் சிதறப் போகிறது விஜயகாந்த் கட்சி ?.. ஏற்பாடுகள் தயார்??

வெங்காயத்தையும், பழைய சோற்றையும் தின்று பழகிய இந்த விஜயகாந்த், எதற்கும் பயப்பட மாட்டான். என்னை பிடித்து சிறையில் அடைத்தாலும் அதைப் பற்றி கவலைப்படுபவன் அல்ல. கொசுக் கடிக்கெல்லாம் பயப்பட மாட்டேன். அங்கேயே படுத்துவிட தயாராக இருக்கிறேன்” என்று வீர முழக்கம் இட்டிருந்தார் விஜயகாந்த் .
ஆனால், அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களில் பலர் வெங்காயம் சாப்பிட ரெடியாக இல்லை என்பதுதான் சிக்கல்!
தேமுதிகவை முற்றிலும் சீர்குலைத்து கட்சியைப் பாதியாக உடைத்து பலரை வெளியே இழுக்க முக்கியக் கட்சியின் தரப்பிலிருந்து ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு விட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது. விரைவில் தேமுதிகவிலிருந்து சில முக்கியத் தலைகள் வெளியேறுவார்கள் என்றும் இந்த பரபரப்புச் செய்தி தெரிவிக்கிறது.
ஒரே ஒரு எம்.எல்.ஏவை மட்டும் தேமுதிக வைத்திருந்துபோது கூட கட்சி படு கட்டுக்கோப்புடன் இருந்தது. அடுத்தடுத்து வாக்கு வங்கியை கூட்டிக் கொண்டே போனது. இதனால் அக்கட்சியைக் கூட்டணி சேர்க்க அதிமுக ஓடோடி வந்தது. ஆனால் தற்போது 29 எம்.எல்.ஏக்கள் கையில் இருந்தும் கூட கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியாமல் அக்கட்சித் தலைமை கடுமையாக தடுமாறி வருவதாக கூறப்படுகிறது.
அதற்குப் பல காரணங்கள்...
- அதிமுகவுடன் கூட்டணி வைத்து அது ஆட்சியையும் பிடித்து விட்டது. இதுவரை தேர்தலுக்காகப் போட்டியிட்டும், கட்சிக்காக செலவழித்தும் இழந்ததை எப்படியாவது மீட்டு விடலாம் என்று 99 சதவீத தேமுதிகவினர் நினைத்திருந்தனர். ஆனால் அவர்களின் நினைப்பில் மண்ணைப் போட்டு விட்டார் விஜயகாந்த். சட்டசபையில் வைத்து பகிரங்கமாக அதிமுகவினரை நோக்கி கையை முறுக்கி, உதட்டைக் கடித்து, கோபமாகப் பேசி எல்லாவற்றையும் முறித்துப் போட்டு விட்டார் விஜயகாந்த்.

- சாதாரண காண்டிராக்ட் முதல் பல்வேறு வழிகளில் காசு பார்த்து விடலாம் என்று நினைத்திருந்த தேமுதிகவினருக்கு, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.
- தேமுதிகவைப் பொறுத்தவதரை அவரது மச்சான் சுதீஷைத் தாண்டி எதுவும் செய்ய முடியாத நிலை இருப்பதால் பல முக்கியத் தலைவர்கள் கூட புகைச்சலில் உள்ளனராம்.
இப்படி பல காரணங்களைச் சொல்கிறார்கள். இதுபோக கட்சியின் இலக்கு என்ன என்பதே பலருக்கு இன்னும் புரியாமல் உள்ளதாம். எதற்காக அதிமுகவைப் பகைத்தோம், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமல் விழிக்கும் பலர் கட்சியை விட்டு அடுத்தடுத்து இடத்தை மாற்ற ஆரம்பித்துள்ளனர்.
விஜயகாந்த்தால் வெகுவாக பாராட்டப்பட்ட ரெஜீனா பாப்பா முதலில் தனது மாநில மகளிர் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதை அப்போது தேமுதிக தலைமை சீரியஸாக பார்க்கவில்லை. அடுத்து திண்டுக்கல் முத்துவேல்ராஜா, சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்ட வேல்முருகன் என அடுத்தடுத்து வெளியே கிளம்ப ஆரம்பித்தபோதுதான் தேமுதிக தலைக்கு லேசாக உறைக்க ஆரம்பித்தது.
இதில் உச்சமானது விஜயகாந்த் ரசிகர் மன்றத்தை முதன் முதலில் உருவாக்கிய மதுரையைச் சேர்ந்த முத்து என்பவர் போனபோதுதான் விஜயகாந்த்துக்கே சற்று அதிர்ச்சியாகி விட்டதாம்.
அதேபோல கடலூர் மாவட்டத்தில் முக்கியமானவரான ஏ.ஜி சம்பத் திமுக என்ற பெரும் கட்சியிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்தவர். ஆனால் விஜயகாந்த் கட்சியை நடத்துவதைப் பார்த்து கடுப்பாகிப் போன அவர் மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கே போய் விட்டாராம்.
இந்த நிலையில் தேமுதிக வக்கீல் அணித் தலைவரான மணிமாறனும் விலகி அதிமுகவில் இணையப் போவதாக பரபரப்புச் செய்திகள் கூறுகின்றன. மணிமாறன் விஜயகாந்த்துக்கு மிக முக்கியமானவர். காரணம், இவர் கடுமையாக போராடி, வாதாடித்தான் டெல்லி வரை சென்று கட்சிக்கு முரசு சின்னம் நிரந்தரமாக முக்கியக் காரணம். ஆனால் இவரே இப்போது அப்செட்டாகி கட்சியிலிருந்து கிளம்ப முடிவு செய்து விட்டாராம்.
இந்த நிலையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் 10 பேர் வரை வெளியே கிளம்ப தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர முக்கியத் தலைவர்கள் சிலரும் கூட ஒரு முக்கியக் கட்சியால் வளைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இவர்கள் அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு விரைவில் வெளியேற ஆயத்தமாகி வருவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இப்படி தேமுதிகவை கலகலக்கச் செய்ய முக்கிய கட்சி முயல்வதற்கு இரண்டு காரணங்களை முக்கியமாகச் சொல்கிறார்கள்.
1. விஜயகாந்த்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறி போக வேண்டும், தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க வேண்டும்.
2. லோக்சபா தேர்தல் சமயமாக பார்த்து கட்சியை உடைத்து, அக்கட்சியின் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். அப்படி நடந்தால் மறுபடியும் தனித் தனி சின்னத்தில் தேமுதிக நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அது தனக்கு பெரும் சாதகமாக அமையும் என அந்தக் கட்சி நினைக்கிறதாம்.
இதுகுறித்து தேமுதிகவினர் வட்டாரத்தில் விசாரித்தபோது, கட்சித் தலைமையின் செயல்பாடுகள் யாருக்குமே புரியவில்லை, பிடிபடவில்லை. கட்சியினருக்கு வழி காட்ட நல்ல 2ம் கட்டத் தலைவர்கள் இல்லை. எல்லாவற்றுக்குமே நாங்கள் சுதீப்பையோ அல்லது விஜயகாந்த்தையோதான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. பண்ருட்டியாரை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை. அனுபவம் வாய்ந்த வேறு நல்ல தலைவர்களும் எங்களிடம் இல்லை.
பலர் அதிருப்தியுடன் இருப்பது உண்மைதான். குறிப்பாக மணிமாறன் விலகப் போவது கூட உண்மைதான். எது நடந்தாலும் அதை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் நாங்கள் உள்ளோம், பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று கூறுகிறார்கள்.
மக்களும் காத்திருக்கிறார்கள், என்னதான் நடக்கப் போகிறது என்பதைப் பார்க்க

கருத்துகள் இல்லை: