செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

அன்சாரிக்கு 490 ஓட்டு - ஜஸ்வந்த் சிங்குக்கு 238 வாக்குகளே!

 Vp Poll Underway Sonia Pm Caste Votes
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்று 2-வது முறையாக துணை ஜனாதிபதியாகியுள்ளார். அவருக்கு 490 ஓட்டுக்கள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் ஜஸ்வந்த் சிங்குக்கு 238 வாக்குகளே கிடைத்தன.

தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்ய இன்று தேர்தல் நடந்தது. இதில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மூத்த பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிட்டனர்.
துணை ஜனாதிபதி தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 63ல் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இரு அவை உறுப்பினர்களும் வாக்களித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே, சரத் பவார் உள்ளிட்ட பலர் வாக்களித்தனர்.
தேர்தலையொட்டி பல மாநில எம்.பி.க்கள் டெல்லிக்கு வந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தம் பதிவான 736 வாக்குகளில் ஹமீத் அன்சாரிக்கு 490 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜஸ்வந்த்சிங்குக்கு 238 வாக்குகளே கிடைத்தன.
2வது முறையாக பதவிக்கு வரும் 2வது துணை குடியரசுத் தலைவர்
இந்திய வரலாற்றில் 1952- ஆம் ஆண்டு முதல் 1962 வரை டாக்டர் ராதாகிருஷ்ணன் 2-முறை துணை ஜனாதிபதியாக இருந்தார். அவரைத் தொடர்ந்து ஹமீத் அன்சாரிதான் 2-வது முறையாக துணை ஜனாதிபதியாகி உள்ளார்.

கருத்துகள் இல்லை: