திங்கள், 11 ஏப்ரல், 2011

யாழில் படையினர் நிலைகொண்டுள்ள தனியார் வீடுகள் விரைவில் விடுவிக்கப்படும் : இராணுவத் தளபதி

யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத் துருப்பினர் விரைவில் அரசாங்கக் காணிகளுக்கு மாற்றப்படுவர் எனவும் இதன் மூலம் இராணுவத்தினர் வசமுள்ள தனியாருக்குச் சொந்தமான வீடுகள் விடுவிக்கப்பட முடியும் எனவும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். புதுவருட காலத்தில் தமது குடும்பங்களிடமிருந்து பிரிந்திருக்கும் படைச் சிப்பாய்களுக்கு தனது புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதற்காக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். அங்கு பலாலியில் படையினர் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பலாலி விமானத் தளத்தில் வந்திறங்கிய இராணுவத் தளபதியை பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க வரவேற்றார். இராணுவத் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் சிலரும் இராணுவத் தளபதியுடன் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தனர் சமாதான காலத்தில் சேவையாற்றுவதால் நல்லொழுக்கத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை படையினரிடம் வலியுறுத்திய இராணுவத் தளபதி, பெற்ற புகழை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.  அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இராணுவம் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும் எதிர்காலத்தில் இத்தகைய பங்களிப்பை தொடர்ந்து வழங்கும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: