ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

தேர்தல் ஆணையத்தை உரிய நேரத்தில் கேள்வி கேட்பேன்: கருணாநிதி

விழுப்புரம், ஏப். 9: தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. அதை கேட்க வேண்டிய நேரத்தில் கேட்பேன் என்று விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கூறினார்.

புதுச்சேரி: "வரும் காலத்திலாவது, தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் அதிகாரங்கள் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு சிந்தித்து செயல்பட வேண்டும்' என்று, தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.

புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தேர்தல் கமிஷன் எங்களை கண்காணித்து வருகிறது. தேர்தல் கமிஷன் கண்காணிக்கக் கூடாது என்றோ, தேவையற்றது என்றோ, அதை எதிர்த்தோ எதுவும் கூற விரும்பவில்லை. விழுப்புரத்தில் கூட்டம் முடிந்த பின், அரசு விருந்தினர் மாளிகையிலோ அல்லது அரசுக்கு சொந்தமான மண்டபத்திலோ நான் தங்குவதற்கு அனுமதி இல்லை. எங்குதான் தங்கினேன் என்று கேட்பீர்கள். விழுப்புரத்தில் தி.மு.க., அலுவலகத்தில் உள்ள அறையில் தங்கிவிட்டு புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்தேன். தேர்தல் கமிஷனின் பெரிய அதிகாரியான சேஷன் என்ற பெரியவர், தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில், நியாயமாக நடக்க முற்பட்டதால், அவரை போலீசாரை கொண்டு துரத்தினர். அவர் விமான நிலையத்தில் ஒளிந்து கொண்டார். பின், காரில் ஏறி வேக வேகமாக தாஜ் கோரமண்டல் ஓட்டலுக்குள் சென்றார். பெரிய கும்பல் சுற்றி வளைத்து ஓட்டலை அடித்து நொறுக்கியது. இது, மறந்து போன செய்தியாக இருக்கலாம். ஆனால், நடந்த செய்தி. இதை எதற்காக சொல்கிறேன் என்றால், தேர்தல் கமிஷன் என்றால் அப்படித் தான் அடிக்க வேண்டும், நொறுக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லிக் கொடுப்பதற்காக அல்ல.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய வீரர்களுக்கு இந்திய அரசு சார்பில் பரிசு வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஏதாவது பரிசை தமிழகம் சார்பில் அளிக்க வேண்டும் என விரும்பினேன். தமிழக வீரர் அஸ்வினுக்கு 1 கோடி ரூபாய், அந்த குழுவுக்கு 3 கோடி ரூபாய் என, மொத்தம் 4 கோடி பரிசு அறிவித்தேன். தேர்தலுக்கு பின் விதிக்கப்பட்ட முறைப்படி, தமிழக அரசின் தலைமைச் செயலர் வழியாக தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டனர். ஆனால், முதல்வர் பரிசு வழங்கும் காட்சியை படமாக எடுக்கக் கூடாது என்று நிபந்தனை வைக்கப்பட்டது. பரிசு வழங்குவதை அடுத்த மாதம் 13ம் தேதிக்குப் பிறகு ஒத்தி வைத்துள்ளேன். 6 கோடி மக்களில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழகத்தில் ஆட்சி நடத்துபவருக்கு இதுதான் நிலை. தேர்தல் கமிஷன் விதிகளை மீற விரும்பவில்லை. குற்றம்சாட்டி எனது தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. அடுத்தடுத்த தேர்தலிலாவது, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் எத்தனை அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் அதிகாரங்கள் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு சிந்தித்து செயல்பட வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கருத்துகள் இல்லை: