ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளும் எவனையும் (அதாவது அவன் பார்ப்பனரல்லாதவனாய் இருந்தால்) அவனைச் "சூத்திரன்' என்று கூப்பிட உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. ஏனெனில், இந்து மதத்தில் சூத்திரன் என்கின்ற வகுப்பு உண்டு என்பதானது, பார்ப்பனரொழிந்த ஏனையோருக்கு உரித்தானது என்பதும் இந்துவாய் இருக்கும் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும். இந்துக்களுக்குள் எத்தனை உட்பிரிவு சமயக்காரர்கள் இருந்தாலும் – அத்தனை சமயமும் சூத்திரனையும், பிராமணனையும், பஞ்சமனையும் (பறையனையும்) ஒப்புக் கொண்டே இருக்கின்றது.


அன்றியும் இந்த முறையானது, இந்து மத உட்பிரிவுச் சமயங்களாகிய சைவத்தின் சிவபுராணத்திலும், பெரிய புராணத்திலும், 63 நாயன்மார்களிலும் மற்றும் சங்கராச்சாரிகளிலும் இருக்கிறது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்த சைவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே வைணவத்திலும் அவர்களது ஆழ்வாராதிகளிலும், பகவத் பாகவத பக்தர்களிலும், நாலாயிரப் பிரபந்தம், ராமாயணம் முதலிய இதிகாசப் புராணங்களிலும் ஆதாரம் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்த வைணவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இந்து மதத்திற்கு ஆதாரமான வேத சாஸ்திரம், ஸ்மிருதி முதலியவைகளிலும் இருப்பதோடல்லாமல் "பகவான் வாக்கு'களிலும், "ரிஷிகள்' வாக்குகளிலும் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்கின்ற "இந்து' என்பவன் யோக்கியனாகவோ அல்லது அறிவுடையவனாகவோ இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.
ஆகவே, நம்மவர்கள் தங்களுக்குச் சூத்திரப்பட்டமும், தீண்டாதார் – பஞ்சமர் என்கிற பட்டமும் வேறு யாராலோ கொடுக்கப்பட்டதாய் கருதி மற்றவர் பேரில் கோபப்படுவது வடிகட்டின அறிவீனமேயாகும். ஏனெனில், எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் சூத்திரப் பட்டமும், பஞ்சமப் பட்டமும் – தானே எடுத்து தன் தலையில் சூட்டிக்கொண்டு திரிகின்றவனாவானே தவிர வேறில்லை. இந்தியாவில் இந்து மதம் உள்ள வரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போகமாட்டார்கள். அதுபோலவே இந்து மத வேதமும், சாஸ்திரமும், ராமாயணமும், பாரதமும், பெரிய புராணம், சிவபுராணம், திருவிளையாடல் புராணம் முதலியவைகளும் உள்ளவரையிலும் – சூத்திரப் பட்டத்தையும், பஞ்சமப் பட்டத்தையும் ஒழித்து விடுவது என்பது முடியவே முடியாது.
திரு. காந்தி எவ்வளவுதான் மகாத்மாவானாலும், "சாமி' வேதாசலம் எவ்வளவுதான் சுவாமியானாலும், "சுவாமி' சகஜானந்தம் எவ்வளவுதான் சுவாமியானாலும் – எது வரையிலும் தங்களை இந்துக்களென்றோ, சைவர்களென்றோ சொல்லிக் கொள்ளுகின்றார்களோ – அது வரையில் அவர்கள் சூத்திரர்கள் என்பதையும் மூன்றாமவர், பஞ்சமர் (பறையர்) என்பதையும் பிரிவு கவுன்சில் வரையில் ருஜுபிக்க முடியும். அவர்களே அப்படிக் கூப்பிட உலக மக்களுக்கு உரிமையுண்டு. மேல்கண்ட இவர்கள் எதுவரை இந்து மதப் பிரச்சாரமும், சைவப் பிரச்சாரமும் செய்கின்றார்களோ அதுவரை இவர்கள் தங்களுள்பட மக்கள் – சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஆக்கி நிலை நிறுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன்.
சம்பந்தனை ஒப்புக் கொண்ட சைவன், சம்பந்தன் பாடிய "சாமி'களை ஒப்புக்கொண்ட சைவன், சம்பந்தனின் தேவாரங்களையும், சம்பந்தனின் சமயங்களையும் ஒப்புக் கொண்ட சைவன், சம்பந்தனைப் பார்ப்பனன் என்று ஒப்புக் கொண்ட சைவன் ஒருவன், தன்னைச் சூத்திரன் அல்ல என்று சொல்லிக் கொள்ள யோக்கியதை உண்டா என்று நன்றாய் யோசித்துப் பாருங்கள். அதுபோலவே நந்தனை ஒப்புக் கொண்ட ஒருவன், அதுவும் நந்தன் பறையன், அவன் எங்கள் ஜாதி என்று ஒப்புக்கொண்ட ஒருவன், தன்னைப் பறையன் அல்ல என்றும், தான் தீண்டாதவன் அல்ல என்றும் சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். உத்தியோகப் பார்ப்பனனுடனும், எலக்ஷன் பார்ப்பனனுடனும் சண்டை போடுவதற்கு வேண்டுமானால் ஏதாவது தந்திரம் பேசலாம்; “தமிழ் நாட்டில் ஆதியில் ஜாதியில்லை'' என்று சொல்லலாம். சாமர்த்தியமாய் விவகாரம் செய்யலாம். ஆனால், தன்னை இந்து என்றோ, சைவன் என்றோ, வைணவன் என்றோ சொல்லிக் கொண்டு வேறு ஒருவனிடம் விவகாரம் பேசி – தன்னைச் சூத்திர வகுப்பிலிருந்தும், பஞ்சம வகுப்பிலிருந்தும் விலக்கிக் கொள்ள முடியுமா என்று யோசித்துப் பாருங்கள் ("சற்சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வதால் தப்பித்துக் கொள்ள முடியாது).
திரு. காந்தியால் வரும்படியான சுயராஜ்யம் அது எப்படிப்பட்டதானாலும், எவ்வளவு பயனுள்ளதானாலும், பயனற்றதானாலும் – இந்து மதத்தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாக இருக்கும் என்பதில் மாத்திரம் சந்தேகப்பட வேண்டியதில்லை. அதுவும் எப்படிப்பட்ட இந்து மதமென்றால், வர்ணாசிரம தர்மத்தோடு கூடின பரம்பரை ஜாதித் தொழிலையும் வகுப்புப் பழக்க வழக்கங்களையும் நடத்திக் கொடுக்க முயற்சிக்கும்படி கட்டாயப்படுத்தும்படியான, இந்து மதத்தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாய்த்தான் இருக்கும் என்பதில் யாரும் எவ்வித ஆட்சேபனையும் கொள்ள வேண்டியதில்லை.
ஆகவே திரு. காந்தியின் சுயராஜ்ய காலத்தில் யார் யார் இந்துவோ அவர்கள் எல்லோருமே இந்த மூன்று ஜாதியின் கீழ் தான் வரவேண்டும். அதாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் ஆகிய விதியில் தான் வரவேண்டும். அந்தக் காலத்தில் இந்துக்கள் என்பவர்கள் இன்றைய தினம் சுயராஜ்யமில்லாத காலத்தில் அனுபவிக்கும் உரிமையும், பேசும் உரிமையும், எழுதும் உரிமையும், கேட்கும் உரிமையுமிக்க ஒரு நாளும் அனுபவிக்க முடியாது என்பதை கெட்டியாய் மனதில் நிறுத்துங்கள். ஏனெனில், காந்தி சுயராஜ்ய காலத்தில் மத சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும், ஜாதி சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும் பேசுவோர்கள் எல்லாம் சட்டப்படி 124ஏ, 153ஏ என்பது போன்ற துரோக சட்டங்களின் கீழும், துவேஷச் சட்டங்களின் கீழும் குற்றமாகக் கருதித் தண்டிக்கப்பட வேண்டியதாகி விடுவார்கள்.
அன்றியும் ஒரு மனிதன் தான் “இந்து மதத்தை விட்டு வெளியில் போய் விடுகிறேன்'' என்பதும், வெளியில் போவதும் குற்றமானதாகவே கருதப்பட்டாலும் கருதப்படலாம். அதற்காக சட்டமுமியற்றப்படலாம். ஏனெனில், இந்து மதக் கோட்பாட்டின்படி ஒரு மனிதன் பிறவியில் எந்த மதத்தில், எந்த ஜாதியில் பிறந்தானோ, அந்த மதத்தில் அந்த ஜாதியில்தான் சாகின்ற வரையில் இருந்தாக வேண்டும். அதனால்தான் திரு. காந்தியும், “நான் கோரும் சுயராஜ்யம் வந்தால் கிறிஸ்து மதத்திற்குப் பிரச்சாரமாகிய ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் முதலியனவை வைத்து நடத்தும் பாதிரிமார்களையெல்லாம் இந்தியாவை விட்டு விரட்டி விடுவேன்'' என்று துணிந்து சொன்னார். அந்தப்படி அவர் சொன்னதானது, வேண்டுமென்று சொன்னதாக யாரும் நினைத்து விடக் கூடாது. மதம் மாறுவது அவ்வளவு இழிவானதென்றும், பாபமானதென்றும், அதற்கு இடம் கொடுப்பது அவ்வளவு தோஷமானதென்றும் இந்து மத தத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
திரு. காந்தியவர்கள் கிறிஸ்துவர்களைச் சொன்னது போல் மகமதியர்களைச் சொல்லாததற்குக் காரணம், மகமதியர்களிடத்தில் இருக்கும் "முரட்டுத்தனத்தின்' காரணமாக பயமேயொழிய, மற்றபடி முகமதியர்களை மதமாற்றம் செய்ய அனுமதிப்பது குற்றமாகாது என்கின்ற எண்ணத்தாலல்ல. ஆகையால், காந்திய சுயராஜ்யமென்பது, இந்துக்களில் சூத்திரர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும், பஞ்சமர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும் மிகவும் ஆபத்தானது என்பதை யாரும் மறந்து விடாதீர்கள்.
திரு. காந்தியவர்கள் பல தடவை சொல்லியிருக்கும் சமத்துவத்தின் விளக்கத்தையும் நினைப்பூட்டிக் கொள்ளுங்கள். அதாவது, “சமத்துவமென்பது ஆத்துமாவுக்கேயொழிய சரீரத்திற்கல்ல'' என்று சொல்லியிருக்கின்றார். மற்றும் அவர் 191929 இல் “தீண்டாமையொழியாமல் நான் ஒரு நாளும் சுயராஜ்யம் கேட்க மாட்டேன்'' என்றும் சொன்னதோடு, “இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படாததற்கு முன் நான் சுயராஜ்யம் கேட்க மாட்டேன்'' என்றும் சொன்னதோடு, “இவை இரண்டும் ஒழியாததற்கு முன் கிடைக்கும் சுயராஜ்யம் நிலைக்காது'' என்றும், “நிலைத்தாலும் மக்களுக்குள் ரணகளமாகும்படியான கலகம் ஏற்படும்'' என்றும் சொல்லியிருக்கின்றார்.
இப்படிப்பட்ட இவர் இப்போது தைரியமாய், “தீண்டாமை ஒழிய வேண்டியதும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் நாட்டை என் வசம் ஒப்புவித்து விட்டு விலகிக் கொள்ளுங்கள். மற்றவைகளை நான் பார்த்துக் கொள்ளுகின்றேன்'' என்று பிரிட்டிஷாரை கேட்கின்றார். இதன் அருத்தமென்ன என்று யோசித்துப் பாருங்கள். ஆட்சி தனது கைக்கு வந்து விட்டால், பட்டாளம் தனது கையில் ஒப்படைத்து விட்டால், பார்ப்பனர்களையும் பனியாக்களையும் (முதலாளிகளையும்) பட்டாளத்தில் சேர்த்து ராணுவச் சட்டத்தினால் முஸ்லிம்களையும், தீண்டாதார்களையும் அடக்கி ஒடுக்கிவிடலாம் என்கின்ற எண்ணமில்லாமல் வேறு என்ன எண்ணம் இருக்கக்கூடும் என்று யோசித்துப் பாருங்கள்.
ஆகவே, எனதருமைச் சகோதரர்களே! தீண்டப்படாத சகோதரர்களே! தெருவில் நடக்க குளத்தில் தண்ணீர் மொண்டு குடிக்க கண்ணில் தென்பட உரிமை இல்லாத சகோதரர்களே! நீங்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டுமானால் ஒன்று இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்; இரண்டு முகமதியர்களைச் சாருங்கள். இந்த இரண்டு காரியத்தாலும் நாம் உலக மக்களுக்கே சுயமரியாதை கொடுக்கலாம். மற்றபடி நமக்கு வேறு விமோசனமே இல்லை! இல்லை! இல்லை!
நன்றி : தலித் முரசு பிப்ரவரி 2009)


Periyar wrote in his daily Kudiarasu on 31.10.1931

கருத்துகள் இல்லை: