ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

தற்போது சூடான செய்தி புலிகளின் தமிழ் தேசியக் கூட்டைமப்பு மீதான தாக்குதல்கள் ஆகும். என்ன புலிதானே இலங்கையில் இல்லாமல் போய்விட்டதே யாரைச் சொல்கின்றீர்கள் என்று கேட்பது எனக்கு கேட்கின்றது. எல்லாம் புலம்பெயர் நாடுகளில் உள்ள நாடு கடந்த புலிகளை கூறுகின்றோம். இலங்கையில் புலிகளின் பிரசன்னம் இருந்த காலத்தில் புலிகளின் சொல் கேட்டு நடந்தவர்கள் தற்போது தம் இஷ்டத்திற்கு? நடக்க முற்படுகின்றனர் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தர் பிரிவு மீதான பிரதான குற்றச்சாட்டு. இதன் தொடர்சியாக இந்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றனர். இதுவரை காலமும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்க ஏற்ப நடந்தவர்கள் புலிகளின் பரம வைரியான இந்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றனர் என்ற சந்தேகம் புலிகளை ரொம்பவும் சினம் கொள்ள வைத்துள்ளது.

புலிகளைப் பொறுத்தவரை அவர்களின் முதல்எதிரி மாற்றுக் கருத்தாளர்கள். இரண்டாம் எதிரி இந்தியா. மூன்றாம் எதிரி இலங்கை அரசாங்கம். இக் கொள்கைப் பிடிப்பு புலிகளிடம் அவர்களின் ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்து வருகின்றது. புலிகளின் தீவிர ஆதரவாளர்களிடம் வேணும் என்றால் இன்றும் பேசிப் பாருங்கள் இது புரியும். அண்மைக் காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள மாற்றுக் கருத்தினரோடும் அளவளாவத் தொடங்கி விட்டனர். போருக்கு பின் இந்தியாவோடு உறவு கொண்டு நாடு திரும்பி அரசியல் செய்யத் தொடங்கி விட்டனர். இதன் தொடர்சியாக இலங்கை அரசாங்கத்துடன் நட்பு? பாராட்ட முயல்கின்றனர்.

பொறுக்குமா புலி? உறுமத் தொடங்கி விட்டது. தமிழ் தேசியத் கூட்டமைப்பு (சம்பந்தர் பிரிவு) புலம்பெயர் புலிகளை சமாதானம் செய்யப் பார்த்தார்கள். வரும் டாலர்கள் நின்று விடும் என்ற கவலை சுரேஷ{க்கு. புலம் பெயர் புலிகளுக்கும் வேறு வழியில்லை இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டால் வேறு யாரையும் தொடர்பில் வைத்திருக்க முடியாது. என்ன கருணாஅம்மானையா தமக்காக வேலை செய்ய கேட்க முடியும்?;. சம்மந்தருக்கும் தெரியும் வெளிநாட்டுப் புலிகள் உறுமினாலும் மீண்டும் தங்களிடம் தான் வரவேண்டும் என்று. புலிகளை பிளவுபடுத்தி கருணாவை வெளியே எடுத்தது தாம்தான் என்று ஆதாரத்துடன் ரணில் விக்கரமசிங்க கூறிய பின்பும் ரணில் விக்கிரமசிங்காவின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவை தமது தேசியத் தலைவராக ஏற்றுக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவு அளித்தது போல் புலம்பெயர் புலிகளுக்கு இலங்கையில் தங்களை விட்டால் யாரும் இல்லை என்பது தமிழ் தேசியக் குட்டமைப்பு (சம்மந்தர் பிரிவுக்கு) நன்றாகத் தெரியும்.

புலிகளால் நேரடியாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட புலி உறுப்பினர்களான குதிரை கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றவர்களை ஓரம் கட்டிவிட்டு ஏனையோருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனங்களை வழங்க தமிழ் தேசிக் கூட்டமைப்பு முன்வந்துள்ளது. மேலும் சில மாற்றுக் கருத்தாளர்களின் பெயர்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதும் புலிப்பினாமிகளை சினம் கொள்ள வைத்துள்ளது. நேற்று வரை டக்ளசுடன் தோன்றிய சூசைதாசனுக்கு இடம் கொடுத்தது.

இவைகளின் தொடர்சியாக புலிகள் தற்போது உறும ஆரம்பித்துள்ளனர். எப்போது கடித்து குதறுவார்கள் என்று தெரியாது. புலிகளுடன் இணைந்து கலந்த போது சுரேஷ் பிரேமசந்திரனுக்கு ‘புலி வெல்லும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் புலி கொல்லும் என்ற நம்பிக்கை இருந்தது’. புலி தன்னையும் கொல்லும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு தான் அவர்களுடன் சேர்ந்து கைகட்டி, வாய்பொத்தி சேவகம் செய்து மேலும் சொத்து சேர்த்த உலகம் சுற்றிய சாணக்கியன் இவர். இவரைவிட ஒரு படி மேலே போய் தன் தலைவர் அமிர்தலிங்கத்தை கொன்றவர்களை வாழ்த்தி வணங்கி சேவகம் செய்த சம்பந்தர் இன்னொரு சாணக்கியர். கூடவே செல்வம் அடைக்கலநாதன்.

இந்திய அரசின் வேண்டுதலின்படி மகிந்த அரசு தங்களை அரசியல் செய்ய அனுமதிப்பார்கள் என்ற உறுதியைப் பெற்ற பின்பே மே 18இற்கு பிறகு ஒவ்வொருவராக இலங்கை திரும்பி தேர்தல் அரசியல் செய்கின்றனர். நாற்காலிக் கனவுகள் மட்டும் மறையவில்லை. அது ஒன்றே இவர்களின் ‘தமிழ் தேசியம்’ ‘சுயநிர்ணய உரிமை’. கூடவே இந்திய அரசின் எதிர்ப்பு வாதமும் இல்லை. இதனை சுரேஷ், சம்மந்தர், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களால் செய்ய முடியாது. அப்படி ஒரு உறவு இந்தியாவுடன் இவர்களுக்கு. இந்தியாவை அனுசரித்துப் போய் அரசியல் தீர்வைப் பெறுதல் என்பதனை தமிழ் மக்கள் நம்பும்படியாக காட்டி பாராளுமன்ற ஆசனத்தையும் தக்க வைக்க வேண்டும் என்பதே இவர்களின் திட்டம்.

மற்றபடி இந்திய அரசின் அனுசரணையுடன் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர தீர்வு எல்லாம் வெறும் கோஷம். இந்தியாவின் அனுசரணை வேண்டுமாயின் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு சேவகம் செய்திருப்பார்களா? புலிகளின் முதல் எதிரி இந்திய அரசு என்பதும் ராஜீவ் காந்தியைக் கொன்ற மகாத்மாக்கள் புலிகள் என்றும் பத்தமநாபாவை இந்திய மண்ணில் வைத்துக் கொலை செய்தவர்கள் புலிகள் என்பதுவும் தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு (சம்மந்தர் பிரிவு) இற்கு தெரியாதா? பாராளுமன்றத்திற்கு டக்ளஸ் உம் வரக்கூடாது, வரதராஜப்பெருமாளும் வரக்கூடாது. இவர்கள் இருவரும் தாம் இருக்கும் இடத்தில் இருந்தால் தமது சித்து அரசியல் விளையாட்டைச் செய்ய முடியாது. மீறிச்செய்ய முற்பட்டாலும் அது எடுபடாது அது அம்பலப்பட்டு போய்விடும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

யார் குற்றினாலும் அரிசியானால் சரி என்று ‘தேமே’ என்று இருக்கலாம் என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூதாதையர்களின் 60 வருடகால அரசியல் பாதை தமது அரிச்சுவடாக கொண்டு இவர்களும் செயற்படுவது யார் குற்றினாலும் அரிசியானால் சரி என்ற நம்பிக்கையை பிழைக்க வைக்கின்றது. கடந்த பாராளுமன்ற காலகட்டத்தில் இவர்களால் ஒரு துரும்பை கூட தமிழ் பேசும் மக்களுக்காக எடுத்து போட முடியவில்லை. சரி இவர்களும் முயற்சிக்கவில்லை. முயற்சித்தவர்களையும், முடிந்த முயற்சிகளையும் புலிகளுடன் சேர்ந்து இல்லாமல் செய்தவர்கள் இவர்கள். கூடவே தமது நண்பன் ஐதேக சேர்ந்து கொழுத்தியவர்கள் இவர்கள்.

நடைபெறப் போகும் தேர்தலில் புலிகளைத் தவிர்த்தல் என்ற ஒரு நடைமுறையை வரவேற்றாலும் இதன் உண்மையான உள்நோக்கம் நாற்காலிகளைப் பிடிக்கவே. வெற்று பிரபாகரன் கோஷம் இனி எடுபடாது என்பதே காரணம் ஆகும். ஆயுதம் தூக்கியவர்களுடன் உறவு என்பதுவும் உதவாது என்பதே பிரதான காரணங்கள் ஆகும். கூடவே எதற்கும் இலங்கை அரசை எதிர்த்தல் என்ற ‘எதிர்ப்பு அரசியலை’ மட்டும் நடத்துவது ‘சோறு ஆக்க’ உதவாது. தமிழ் பேசும் மக்களை குறும் தேசிய இனவாதத்திற்குள் வைத்திருப்பது நாற்காலிகளைப் பிடிக்க இலகுவான குறுக்கவழி என்பதை இவர்கள் தமது மூதாதையரைப் போல் நம்புகின்றனர். அதன்படி செயல்படுகின்றனர். இனியும் அவ்வாறே செயற்படப் போகின்றனர்.

ரிஎன்ஏ இன்னும் தன்னை பலவழிகளில் மாற்றிக் கொள்ள வேண்டும். அவை எவை எவையென பட்டியல் இட்டால் முடிவில்லாமல் எழுதிக் கொண்டே போகலாம். சூசைதாசன் போன்றவர்களை உள்வாங்கியது மன்னார் வாக்கு வங்கிகளுக்காக என்று மட்டும் இல்லாமல் அவரின் நீண்ட அரசியல் அனுபவம், பொருளாதாரம் பற்றிய அறிவு ஆற்றல் அரசியல் தீர்வுத் திட்டத்திற்கான பேச்சுவார்த்தையில் உதவும் என்ற கோதாவில் அமையுமானால் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதேபோலவே கிழக்கு மாகாணத்தில் இரா துரைரத்தினத்தை உள்வாங்குதல் என்ற அணுகுமுறையும் இதயசுத்தியுடன் இருந்திருக்குமானால் அதனை சீர்தூக்கி ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டிய ஒன்றாக அமைய வேண்டும். ஆனால் கிழக்கு மாகாணத்தில் மக்கள் ஆதரவு பெற்ற துரைரத்தினத்தை பாவித்து கொண்டு வாக்குகளைப் பெறுதல், பின்பு தூக்கி வீசல் என்ற ‘பாவித்தல்’ என்ற அணுகுமுறையாக இருப்பின் அது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல.

இந்தப் பொறிக்குள் சிக்காமல் தப்பியது இரா. துரைரத்தினத்திற்கும் நல்லது. தமிழ் பேசும் மக்களுக்கும் நல்லது. ஏற்பட்டிருக்கும் நிலமைகளை சரியாகப் பயன்படுத்தி அவர் தொடர்ந்தும் மக்களுக்கு நல்ல சேவை செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு நிறையவே உண்டு. துரைரத்தினத்தின் பலம் கிழக்கு மக்களுக்கு தெரியும். தனித்து நின்றும், ஐக்கியப்பட்டு நின்றும் சாதிக்கும் பலம் அது. ஏதும் இல்லாத வளமற்ற வறுமை நிலையில் நல்ல கொள்கை, கோட்பாடு, வேலைத்திட்டங்களுடாக ஸ்தாபனத்தை இன்றுவரை வெற்றியை நோக்கி பற்பல இழப்புக்களுக்கு மத்தியிலும் முன்நோக்கியே நகர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர் ஜனநாயக முற்போக்கு சக்திகள். இதில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இதுவரை சிறப்பாகத் தான் செயற்பட்டு வருகின்றது. இனியும் ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகளுடன் ஐக்கியப்பட்டு பலமாக முன்னோக்கி நகர்ந்தே செல்லும் என்பதில் பலருக்கும் நம்பிக்கை நிறையவே உண்டு.
(சாகரன்) (மாசி 26, 2010)

0 கருத்துரைகள்:

கருத்துகள் இல்லை: