ஞாயிறு, 9 அக்டோபர், 2011

திருச்சி தி.மு.க. பக்கம் வெற்றிக்காற்று வீசலாம்’ என்கிறதாம் சர்வே

திருச்சி ஜெயிக்கலேன்னா திரும்பி வரக்கூடாது!

''கார்டனில் கூட சரஸ்வதி பூஜையும் விஜயதசமிவைபவமும் விமரிசையாக நடந்தது. ஆனால், முதல்வர் முகத்தில்தான் லேசான வருத்த ரேகைகள்!'' என்று அவல் பொரியில் இருந்தே மேட்டரை ஆரம்பித்தார்!
''திருச்சி இடைத்தேர்தலை வைத்துதான் இந்த வருத்த ரேகைகளாம்! சில நாட்களுக்கு முன்பு, முதல்வரின் டேபிளில் தனியார் ஏஜென்சி எடுத்த சர்வே முடிவுகள், உளவுத் துறையினர் எடுத்த சர்வே விவரங்கள் எல்லாம் வைக்கப்பட்டதாம். இரண்டையும் ஆர்வமாகத் திருப்பி இருக்கிறார். பொதுவாகக் கிடைத்த ஒரு தகவல் - திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் வேலை செய்யும் மந்திரிகள் பலரது நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்பதுதானாம். பெரும்படையாக அமைச்சர்களில் முக்கியமானவர்கள் திருச்சியில் முகாம் போட்டிருக்கிறார்கள். 'வெள்ளை வேட்டி மடிப்பு கலையாமல் காரில் வலம் வருவது, ஒருசிலர் வாக்காளர்களின் கால்களில் விழுவது போல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதோடு சரி! மற்றபடி, தீவிரமாக இன்னும் பிரசாரத்தில் இறங்கவில்லை’ என்கிறதாம் அந்த அறிக்கை. இதைப் படித்ததும், முக்கிய அமைச்சர்களை அழைத்து வறுத்தெடுத்தாராம் முதல்வர். 'நீங்கள் நுனிப்புல்தான் மேய்கிறீர்கள். இன்னும் ராஜதந்திரமாகச் செயல்படவே ஆரம்பிக்கவில்லை’ என்று கோபப்பட்டாராம். 'திருச்சித் தேர்தலில் ஜெயிக்கலேன்னா, நீங்க திரும்பி சென்னைக்கே வர வேண்டாம் என்று அம்மா சொல்லிட்டாங்க’ என்று மேல்மட்டத்தில் வலம் வருபவர்கள் ரகசியத்தை அவிழ்க்க... கேள்விப்பட்டு, மந்திரிகள் அனைவரும் கதற ஆரம்பித்து​விட்டனராம்!''

''ஏதோ சர்வே முடிவுகள் என்றீரே... அது என்ன?''
''கூட்டிக் கழித்துப்பார்த்தால், 'தேர்தல் கூட்டணிக் கணக்குப்படியும் நேர்மையாக வாக்குப்பதிவு நடந்தாலும், தி.மு.க. பக்கம் வெற்றிக்காற்று வீசலாம்’ என்கிறதாம் சர்வே. 'மாநிலத்தில் ஆளும் கட்சி. இங்கேயும் அதே கட்சி எம்.எல்.ஏ. இருந்தால், நன்றாக இருக்கும் என்கிற கோணத்தில் மக்கள் பார்த்தால் மட்டுமே அ.தி.மு.க-வுக்குச் சாதகம் ஆகலாம்’ என்கிறதாம் அந்த சர்வே. இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்கள், கடைசி நேரத்தில் செய்யப்போகும் பிரசார யுக்திக்கும் பலன் இருக்கும்.''

''இப்படி மையமாக ரிசல்ட் வந்தால், முதல்வருக்கு கோபம் வரத்தானே செய்யும்?''
''இடைத்தேர்தல் வியூகம் பற்றி முக்கியமான ஆலோசனைகள் நடப்பது, திருச்சியில் இருக்கும் ஒரு ஹோட்டலில். புது பஸ்ஸ்டாண்டுக்கு அருகில்தான் அது உள்ளது. இந்த ஹோட்டலில்தான் ஓ.பன்னீர்ச்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர் மந்திரிகள் தங்கி இருக்கிறார்கள். இந்த ஹோட்டலின் உரிமையாளர், தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் நெருங்கிய உறவினர். அதாவது ஆளும் கட்சிக்கு எதிராக நிற்கும் வேட்பாளருக்கு உறவினர். காஞ்சனா ஹோட்டல் அபகரிப்பு புகாரில் நேருவுடன் அந்த ஹோட்டலின் உரிமையாளர் பெயரும் உண்டு. மு.க.ஸ்டாலின் எப்போது திருச்சி வந்தாலும் அந்த ஹோட்டலில் இருந்துதான் சாப்பாடு போகும். இப்படிப்பட்ட ஹோட்டலில் இவர்கள் தங்கலாமா என்று ஆளும்கட்சியினரே பொரும ஆரம்பித்துள்ளனர். அ.தி.மு.க. அமைச்சர்கள் சிலருக்குக்கூட இந்த ஹோட்டலில் இருந்து சாப்பாடு போவதாக உள்ளூர் கட்சிப் பிரமுகர்கள் பொருமுகிறார்கள். 'தி.மு.க-வின் நம்பிக்கையைப் பெற்ற ஹோட்டலில் அ.தி.மு.க-வின் சீனியர் அமைச்சர்கள் தங்கித் தேர்தல் ஆலோசனை நடத்து​வது எந்தவகையில் நியாயம்? விஷயம் லீக் ஆகாதா? திருச்சியில் வேறு ஹோட்டலே இல்லையா?' என்றும் வினா எழுப்புகிறார்கள்.''

''முக்கிய முடிவுகள் உடனுக்குடன் தி.மு.க-வுக்குப் போகும் என்று சந்தேகப்படுகிறார்களா?''
''அப்படித்தான் வைத்துக்கொள்ளும்! அ.தி.மு.க. அமைச்சர்களில் பலரும் ஜெயலலிதா பலமுறை சொல்லியும் இன்னும் காரை விட்டு இறங்கி வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று ஓட்டு சேகரிப்​பதில் இறங்கவில்லையாம். காரில் இருந்தபடியே பூத் வாசலில் நிற்பவர்களிடம் சிறிது பேசிவிட்டு, விருட்டென்று கிளம்பி விடுகிறார்களாம். பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுப்பதை மட்டுமே வேலையாக செய்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா, இது சம்பந்தமாகவும் சில அமைச்சர்களுக்கு டோஸ் விட்டதாகவும் சொல்கிறார்கள்.
'கடந்த தேர்தலில் நேரு தோற்றது சுமார் 7 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்தான். இதே தொகுதியில் அதற்கு முந்தைய முறை தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் நின்ற செந்தூரேஸ்வரன் வாங்கிய ஓட்டுகள் சுமார் 13 ஆயிரம். இந்தத் தேர்தலில் அந்த ஓட்டுகள் நமக்கு எப்படி விழும்? அதைக் கவர நாம் என்ன செய்துள்ளோம்? நமது விசுவாசிகளைக் கருவியாக வைத்து இந்த வாக்கு வங்கியை இதுவரை ஏன் உடைக்கவில்லை? அதேபோல், முஸ்லிம்கள் சுமார் 25 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில், நேரு மீது புகார் சொல்லும் பிட் நோட்டீஸ்களை அதிகமாக விநியோகம் செய்தது முஸ்லிம்கள்தான். தேர்தல் நாளன்றும் வாக்காளர்களை ஓட்டுப்போட அழைத்துவந்ததும் இவர்கள்தான். இப்படி பம்பரமாக வேலை பார்த்த முஸ்லிம் அமைப்பினர், இந்த முறை நம் கூட்டணியில் இல்லை. அந்த 25 ஆயிரம் வாக்குகளைக் கவர என்ன உருப்படியான நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?’ என்றும் முதல்வர் கேட்டதாகச் சொல்கிறார்கள். அதோடு, இந்தத் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் கிறிஸ்துவர்களும் இருக்கிறார்களாம். இந்த சிறுபான்மையினர் ஓட்டுகளைக் கவரும் ஐடியா எதையும் இதுவரை எந்த அமைச்சரும் பேச முன்வராததும் ஜெயலலிதாவுக்கு எரிச்சலாம்...''

''ரொம்பக் கஷ்டம்தான்...''

''இதையும் கேளும்! உள்ளாட்சித் தேர்தலில் ஸீட் தரப்பட்டதில் அ.தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரனுக்கும் தொகுதி எம்.பி-யான குமாருக்கும் பனிப்போர். மனோகரன் வீடுகூட மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, பரபரப்பானது. கட்சியின் சீனியரான பரஞ்சோதி ஜெயித்தால், முக்கிய பதவியில் அமர்வார் என்பதால், பரஞ்சோதியை பிடிக்காத கட்சிப் பிரமுகர்கள் பலரும் மெத்தனமாக வேலை செய்து வருவதும் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 'இதைத் தெரிந்துகொண்டு அமைச்சர்கள் அதட்டி வேலை வாங்காதது ஏன்?’ என்றும் முதல்வர் வருந்தியதாகச் சொல்கிறார்கள்.

முதல்வர் கேட்ட இன்னொரு கேள்வி - 'தொகுதியில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக ஓட்டுகள் உள்ளனவே... அவர்களின் ஓட்டு யாருக்குப் போகும்?' என்பதாம். வழக்கம்போலவே சரியான பதில் சொல்லமுடியவில்லையாம் அமைச்சர்களால்! பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் அமைப்பினர் இங்கே ரகசிய பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் பிரசாரத்தில் ஒரு செய்தியை லீக் செய்கிறார்களாம். 'அக்டோபர் 30 வரைக்கும் ஜான்பாண்டியனைச் செயல்பட விடாமல் போலீஸ் முடக்கி விட்டது’ என்பதுதான் அது. இப்படி ஒரு தகவலே பல அமைச்சர்களுக்குத் தெரியவில்லையாம். காங்கிரஸ் கட்சிக்கென்று சில ஆயிரம் ஓட்டுகள் இங்கே உள்ளன. யாருக்குப் போடுவது என்று இதுவரை அவர்கள் வாய் திறக்கவில்லை. தொகுதியில் உள்ள கோஷ்டிகளை வைத்து அந்த ஓட்டுகளை அ.தி.மு.க. பக்கம் கவரவும் எந்த நடவடிக்கையும் அமைச்சர்கள் எடுக்காததும் ஜெயலலிதாவுக்கு வருத்தமாம்.''

''தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகள் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேல் என்கிறார்களே? அவை யாருக்கு விழும்?''
''இதே கவலைதான் ஜெயலலிதாவுக்கு. அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு தரப்பிலும் முத்தரையர், ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் நிற்கிறார்கள். முக்குலத்தோரை ஒருங்கிணைக்கும் வகையில் சசிகலாவின் அண்ணி இளவரசியின் இரண்டாவது மருமகன் ராஜராஜனை பிரசாரத்தில் இறக்கியிருக்கிறார்கள். சிங்கப்பூரில் ஹோட்டல் பிசினஸ் நடத்திவருகிற இவர், இப்போது திருச்சியில் முகாம் அடித்துள்ளார். அமைச்சர்கள் தரும் பணத்தை வைத்து இவர்தான் தேர்தல் பணிக்குப் பிரித்துத் தருகிறாராம். தாடியுடன் வலம்வரும் இவரைச் சுற்றிலும் முக்குலத்தோர் இளைஞர் பட்டாளம் இருக்கிறது. இது மட்டும்தான் அ.தி.மு.க-வுக்கு நம்பிக்கை தருகிறது.''

''திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க. பலம் எப்படி?''
''சிறைக்குள் இருக்கும் நேருவை இங்கே மீண்டும் நிறுத்தியதற்கு பதிலாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவரை நிறுத்த எதிர்க் கோஷ்டியினர் தயாரானார்கள். அதை மு.க.ஸ்டாலின் ஏற்கவில்லை. இந்தத் தேர்தலில் நேரு ஒருவேளை ஜெயித்தால், அவரின் ஆதிக்கம் இன்னும் பல ஆண்டுகளுக்கு கொடிகட்டி பறக்கும் என்பதைக் கணித்து, அவரின் எதிர்க் கோஷ்டியினர் கொஞ்சம் அடக்கி வாசிப்பதும் தெரிகிறது. ஸ்டாலின் வருகை, கருணாநிதியின் பொதுக்கூட்டம், ஜெயலலிதாவின் பிரசாரம் இதை எல்லாம் வைத்து நிலைமை எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்!'' என்று மொத்தமும் இடைத்தேர்தல் தகவலாகவே கொட்டிவிட்டுப் பறந்தார் கழுகார்!

படங்கள்: சு.குமரேசன், என்.விவேக்

கருத்துகள் இல்லை: