திங்கள், 12 செப்டம்பர், 2011

யாழ் திருநெல்வேலி விவசாய கண்காட்சி அழகான பூச்செடிகள்


விவசாயக் கண்காட்சியைப் பார்ப்பதற்காக நேற்றையதினம் திருநெல்வேலி விவசாயப் பயிற்சி நிலையத்திற்குச் சென்றிருந்தோம். அருமையான ஏற்பாடுகள். விவசாயத்தின் மீது, வீட்டுத்தோட்டத்தின் பால் ஆர்வத்தை தூண்டக் கூடிய வகையில் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஏகப்பட்டோர் அந்தக் கண்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். உரைப்பைகளில் மண்ணையிட்டு, தக்காளி, கத் தரி, மிளகாய், உற்பத்தி செய்யப்பட்டிருந்ததை பார்த்த எவரும் மகிழாமல் இருக்க முடியாது. வீட்டுத் தோட்டம் செய்வதற்கு நிலம் போதாது என குறைபடுவோருக்கு இந்த உரைப்பை முறை அவர்களை ஆற்றுப்படுத்தியிருக்கும் என்ற நினைப்பு.

கண்காட்சியின் நுழைவாயில் அதன் இரு மருங்கிலும் வற்றாளைக்கொடியின் இளம் பச்சை அழகு, இவற்றையயல்லாம் ரசித்து-மகிழ்ந்து கொண்டு நகர்ந்த போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிகப்பெரும் மக்கள் கூட்டம். மா, தேசி, பலா, தோடை, மாதுளை, தென்னை இவற்றின் விற்பனை, களைகட்டியிருக்கின்றது என்ற நினைப்பில் அங்கு சென்று பார்த்த போது, கண்டகாட்சி திகைக்க வைத்தது. அந்த றோசாக்கன்று என்ன விலை, இந்த மினி எக்ஸ்சோராவின் விலை குறையாதா? இப்படி ஒவ்வொருவரும் விலை கேட்பதும் ஆர்வத்தோடு வாங்கு வதுமாக இருந்தனர். ஒற்றைப் பூ பூத்த ஒரு சிறிய பூங்கன்றின் விலை நானூறு ரூபாய் என்று கூறினார்கள். அந்தப் பூங்கன்றை வேண்டினால் ஒன்று இரண்டு தினங்கள் மட்டுமே அந்த பூ எங்களோடு உயிர்வாழும். அடுத்த பூ பூப்பதற்குள் அந்த பூஞ்செடியின் ஆயுள் முடிந்து விட்டாலும் அதிசயப்படுவதற்கு இடமில்லை.

நிலைமை இதுவாக இருக்கும் போது முண்டி யடித்து றோஸ் செடியும், மினி எக்ஸ்சோராவும் இதர பூங்கன்றுகளையும் வேண்டுவதை பார்த்த போது யாழ்ப்பாணத்துக் குறோட்டன் கலாசாரத்தை இல்லா தொழிக்கவே முடியாது என்று எண்ணத் தோன்றியது. இந்த வேதனையோடு சுற்றிப்பார்க்கும் பணியில் ஈடுபட்ட வேளை, திருநெல்வேலி விவசாயப் பயிற்சி நிலையத்தின் விற்பனைப் பகுதிக்குச் சென்றோம். அங்கு அரசினால் உறுதிப்படுத்தப்பட்ட கறுத்தக் கொழும்பான் ஒட்டுமாங்கன்றுகள் வைக்கப்பட்டிருந்தன. இரண்டரை வருடத்தில் பலன் தரும் என்று சொன்னார்கள். ஒன்றின் விலை நூற்று ஐம்பது ரூபாய் மட்டுமே. சிறிய மரமாக நின்று காய்க்கும் இயல்பு அதற்குரியது. பெரிய இடம் தேவை என்றும் இல்லை.

ஒரு கறுத்தகொழும்பான் மாம்பழம் ஏழுபத்தைந்து ரூபாய்க்கு விற்பனையாகும் போது நூற்று ஐம்பது ரூபாய் மாங்கன்றை விடுத்து ஒற்றைப் பூவுடன் நிற்கும் மிகச்சிறிய பூஞ்செடியை நானூறு ரூபாய்க்கு வேண்டுவதன் பொருள் என்ன? எதுவுமே புரியவில்லை. இது சிறுகுறிஞ்சா; சலரோக நோயாளிகளுக்கு சிறந்த மூலிகை. அது பசளி; அருமையான கீரைவகை. இப்படியான இடங்களைப்பார்த்து ரசிப்பவர்களுக்குப் பஞ்சம் இருந்ததை பார்த்த போது நம் நெஞ்சம் பதைத்தது. கிருமி நாசினிகளின் அதீத பாவனை-அதனால் புற்றுநோயின் அதிகரித்த தாக்கம் என்ற கொடுமை யிலிருந்து விடுபட, எங்கள் வீட்டுத்தோட்டத்தில் விளைந்த மரக்கறி, இலைவகை, பழவகை என்று இன்புற்று உண்டு நெடுநாள் மகிழ்ந்திருப்போம் என்றால், நாங்களோ றோசாச் செடிக்கு மருந்துக்குளிசை போட்டு மூன்று நேரம் ஓமவாட்டர் பருக்கி எல்லா வற்றையும் இழக்கிறோம்.

கத்தரி காய்த்தால், தோடை பழுத்தால், எலுமிச்சை பூத்தால் இதைவிட அழகு ஏதுமில்லை என்பதை உணர்வது என்னாளோ?

கருத்துகள் இல்லை: