ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

குற்றச்சாட்டுகளுடன் என்னிடம் வராதீர்கள்-அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை

குற்றச்சாட்டுகளுடன் என்னிடம் வராதீர்கள், உரிய அதிகாரிகளை அணுகுங்கள்-அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை

டெல்லி: குற்றச்சாட்டுக்கள், குறைகள் இருந்தால் அதற்குரிய அதிகாரிகளை அணுகி தீர்வு காணுங்கள். மாறாக என்னிடம் அவற்றைக் கொண்டு வர வேண்டாம் என்று கடும் எரிச்சலுடன் அன்னா ஹஸாரேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

ஆகஸ்ட் 16ம்தேதி தான் தொடங்கவுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டுள்ளதால் அதிருப்தி அடைந்த அன்னா ஹஸாரே இதுகுறித்து பிரதமருக்கு காட்டமான கடிதம் எழுதியிருந்தார். வழக்கமாக எந்தப் பிரச்சினைக்கும் உடனடியாக பதில் தரும் வழக்கமில்லாத பிரதமர் மன்மோகன் சிங் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஹஸாரேவுக்கு ஒரு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உங்களது போராட்டக்குரிய அனுமதி, ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்காவில் 3 நாட்களுக்கு மட்டுமே உண்ணாவிரதம் இருக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நீங்கள் என்னிடம் குறை கூறி கடிதம் எழுதியுள்ளீர்கள். இவை அனைத்தையும் அந்த முடிவுகளை எடுத்த அதிகாரிகள் மற்றும் அமைப்பை நேரில் அணுகியோ அல்லது பிற முறைகளிலோ தெரிவித்து நிவர்த்தி காண முயலுங்கள். மாறாக, என்னிடம் இந்தப் பிரச்சினையை எழுப்புவதில் அர்ததம் இல்லை.

இந்த விவகாரத்தில் எனக்கோ அல்லது எனது அலுவலகத்திற்கோ எந்தத் தொடர்பும் இல்லை. இதில் நானோ அல்லது எனது அலுவலகமோ சற்றும் சம்பந்தப்பட்டவர்கள் இல்லை. இதில் நாங்கள் தலையிடவும் முடியாது என்று கூறியுள்ளார் பிரதமர்.

லோக்பால் வரைவு மசோதா தொடர்பாக தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு முற்றிலும் நிராகரித்து விட்டதாக அன்னா ஹஸாரே குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து ஆகஸ்ட் 16ம் தேதி முதல் ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்காவில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.

ஆனால் இந்தப் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 3 நாள் மட்டுமே போராட்டம் நடத்தப்பட வேண்டும். அளவுக்கு அதிகமாகஆட்களைச் சேர்க்கக் கூடாது. வாகனங்களும் கூட குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும். அதிக அளவில் ஒலிபெருக்கிகளை உபயோகிக்க கூடாது. யாரையும் தூண்டும் வகையில் பேசக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் கடுப்பான அன்னா ஹஸாரே பிரதமருக்கு கடும் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். அதில், உங்களது அரசு எங்களது அமைதி வழிப் போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது என்று கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். அதற்குத்தான் தற்போது பிரதமர் இப்படி ஒரு பதிலை எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை: