திங்கள், 8 ஆகஸ்ட், 2011

ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா?: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு!

ருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இருந்தது போல் கிருஷ்ணகிரி அருகேயுள்ள பழமை மிக்க கற்கோவில்களில் தங்க புதையல் இருப்பதாக ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் உள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொல் பொருள் துறையினர் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.

தங்க புதையல். கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பூட்டி கிடந்த அறைகளை கோர்ட்டு உத்தரவின் பேரில் அதிகாரிகள் கடந்த மாதம் திறந்து பார்த்தனர். அப்போது அறைகள் முழுவதும் குவியல், குவியலாக தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் தமிழகத்தில் உள்ள மிகப்பழமையான கோவில்களிலும் அரசர் காலத்தில் புதைக்கப்பட்ட நகைகள், தங்க புதையல்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
இதை நிரூபிக்கும் விதமாக கிருஷ்ணகிரி அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, தற்போது மலை உச்சியில் மண்ணில் பாதி புதைந்து மீதி வெளியே தெரியும் அளவிற்கு உள்ள கற்கோவில்களில் தங்க நகைககள் புதைந்து கிடப்பதாக ஆங்கிலேயர்கள் எழுதி வைத்த குறிப்புகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குந்தாணி மலை. கிருஷ்ணகிரி அருகேயுள்ள நெடுசாலை, தேவர்குந்தாணி, வேப்பனப்பள்ளி, பேரிகை போன்ற பகுதிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குந்தாணி ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த பகுதியாகும். தேவர்குந்தாணியை தலைநகராக கொண்டு குந்தாணி மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். மேலும் கர்நாடகா மன்னர் ஒய்சால வம்சத்தை சேர்ந்த ராமநாத அரசரின் ஆளுகை கோலார் முதல் திருச்சி ஸ்ரீரங்கம் வரை இருந்தது. அவர்களும் குந்தாணியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர்.
இத்தனை வரலாற்று சிறப்புமிக்க தலைநகராக இருந்த குந்தாணியில் உள்ள மலைகளில் அப்போது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கற்கோவில்கள் தற்போது அழியும் நிலையில் மண்ணில் புதைந்துள்ளன. குந்தாணியை சுற்றி உள்ள 6 மலைகளில் மன்னர்கள் 6 விதமான கோவில்களை கட்டினார்கள்.
மலை உச்சியில் அமைக்கப்பட்ட அந்த கோவில்கள் முற்றிலும் கற்களால் கட்டப்பட்டுள்ளது. குந்தாணி மலைகளில் சென்றாயசாமி, அனுமான், நந்திகேஸ்வரா, குநந்தாணியம்மா, வீரேஸ்வரா, குந்தீஸ்வரா ஆகிய 6 சாமிகளுக்கும் கோவில்கள் மிக பிரமாண்டமாக எழுப்பப்பட்டது. இந்த கோவில்கள் தற்போதும் மலை உச்சியில் காணப்படுகின்றன. ஆனால் கோவிலில் பெரும் பகுதி மண்ணில் புதைந்தும், மீதிப்பகுதி மட்டும் வெளியில் தெரிந்த வண்ணமும் உள்ளது.
குளத்தில் தங்க புதையல்?
குந்தாணி மலைப்பகுதியின் வடக்கு திசையில் `பைரேகவுனி செருவி’ என்ற குளமும், `நீர்தெப்ப ஜுனை’ என்ற குளமும் உள்ளது. `நீர்தெப்ப ஜுனை’ என்ற குளத்தில் கோவில் நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஆங்கிலேயர்கள் தங்களது குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் கோவிலின் நகைகள் குளத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆங்கிலேயர் குறிப்பேட்டு தகவல் குறித்து அறிந்த தொல்பொருள் ஆய்வுத் துறையினர் மற்றும் அருங்காட்சியகத் துறை அதிகாரிகள் அந்த குறிப்புகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் சென்னையில் இருந்து தொல்பொருள் ஆய்வுத் துறையினர் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வெட்டு தகவல்கள்
இதேபோல் குந்தீஸ்வரா கோவில் சுவற்றில் மிகப்பழமையான கல்வெட்டு குறிப்புகளும் ஏராளமாக உள்ளன. கல்வெட்டு குறிப்பிலும் தங்க புதையல் குறித்து எழுதப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கருதுகிறார்கள். எனவே கல்வெட்டுகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: