திங்கள், 15 ஆகஸ்ட், 2011

ராஜீவ் கொலை விசாரணை:கார்த்திகேயன் கருத்து


- பி.பி.சி
Ravjiv-edited (1)Karthikeyanராஜீவ் காந்தி கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று சிலர் கோரி வருகின்ற நிலையில், அரசும் நீதிமன்றம் அப்படி கருதினால் அதைச் செய்யட்டும் என்று அந்த விசாரணையை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான டி. ஆர். கார்த்திகேயன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் மே மாதம் 21 ஆம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கை விசாரிக்க காவல்துறையின் மூத்த அதிகாரியாக இருந்த டி ஆர் கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகளை நடைபெற்றன.

புலன் விசாரணைகளில் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முதல் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டார்.
வழக்கு விசாரணை பல்வேறு மட்டங்களை கடந்து, இதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அனைவரும் குற்றவாளிகள் என்று கூறப்பட்டு சிறப்பு நீதிமன்றம் ஒன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால ் அதை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு சென்ற போது நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
அதில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட நளினியின் மரண தண்டனை பின்னர் ஆயுட் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற மூன்று பேரின் தண்டணையும் உறுதி செய்யப்பட்டது. அவர்கள ் அளித்த கருணை மனுவும் கடந்த வாரம் இந்தியக் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.
தற்போது இந்த வழக்கின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாக சிலரால் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இந்த வழக்கில், ராஜீவ் காந்தியை கொலை செய்தது யார், ஏன், எப்படி என்கிற விசாரணை பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதை தாங்கள் இந்திய சட்டப்படி விசாரித்து, தடயங்களை சேகரித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்ததாகவும் நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பைக் கொடுத்ததாகவும் தமிழோசையிடம் கார்த்திகேயன் தெரிவித்தார்.
எனினும் மறுவிசாரணை தேவை என்று எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்து தான் கருத்து ஏதும் சொல்லும் நிலையில் இல்லை என்றும், அரசும் நீதிமன்றமும் இது குறித்து முடிவெடுக்கலாம் என்றும், தாங்கள் விசாரணைகளை நடத்தியதைத் தவிர தங்களுக்கு இந்த வழக்கு தொடர்பில் எந்த விதமான விருப்பு வெறுப்புகளும் இல்லை என்றும் கார்த்திகேயன் கூறுகிறார்.

இலங்கையில் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டதே அங்கு நடைபெற்ற போராட்டத்துக்கு காரணம் என்பதை இந்த வழக்கின் விசாரணை தொடர்பில் தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதையும அவர் சுட்டிக்காட்டினார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரும் மேல் முறையீடு செய்தால் அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளே முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக தமது குழு நடத்திய விசாரணைகள் தம்மைப் பொறுத்தவரையில் மறந்து போன விடயம் என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

1 கருத்து:

unmaiyalan சொன்னது…

nalla karuththu