செவ்வாய், 23 நவம்பர், 2010

K.Balachandar:சும்மா ஏன் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்...

அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல்

       சுப்ரமணியபுரம் படத்தின் வெற்றியை அடுத்து சசிக்குமார் இயக்கிவரும் படம் 'ஈசன்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் வித்யாசமான முறையில் நடைபெற்றது. இந்தி, மலையாளம், கன்னடம், தமிழ் என இந்திய இயக்குனர்கள் விழா மேடையில் சங்கமித்து 'ஈசன்' படம் வெற்றியடைய வாழ்த்தினார்கள். தமிழ் சினிமா மீது பிற மொழி இயக்குனர்கள் வைத்திருக்கும் மதிப்பை நம்மால் உணர முடிந்தது.

 

என்னை விழா மேடையில் ஏற்றக்கூடாது என்று சத்தியம் வாங்கிவிட்டு விழாவுக்கு வந்து விழாவை ரசிகர்களோடு ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் இயக்குனர் பாலசந்தர். விழாவில் பேசிய இந்தி இயக்குனர் அனுராக் கஷ்யப், நான் அமீரின் பருத்திவீரன் படம் பார்த்து வியந்து போனேன். பாலா, அமீர் போன்ற இயக்குனர்கள் இருக்கும் மேடையில் நான் இருப்பதை மிகவும் பெருமையாய் கருதுகிறேன். 'நான் கடவுள்' படம் பார்த்து பிரமித்த நான், அந்த படம் எடுக்கப்பட்ட காசி மலைக்கு சென்றேன். எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த மலையில் கேமராவை எங்கே வைத்திருப்பார்கள் என்று! அது மட்டும் இல்லை சசிக்குமாரின் சுப்ரமணியபுரம் படம் பார்த்து அதன் பாதிப்பில் இந்தியில் ஒரு படம் எடுத்துவருகிறேன் என்றார். 

அமீர் பேசும் போது... பாலசந்தர் சார் கீழே அமர்ந்திருப்பதும், நாங்கள் மேலே அமர்ந்திருப்பதும் எங்களுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது, நான் கேட்டதற்கு அவர் சத்தியம் வாங்கி விட்டதாக சொன்னார்கள். சத்தியம் வாங்குவதே அதை முறியடிக்கத் தானே என்று சொல்லி, 'டேய் சசி... வாடா...' என்று சசியை அழைத்து மேடையின் கீழே இறங்கினார் அமீர். சசிக்குமாரும், அமீரும் பாலசந்தரை மேடைக்கு அழைத்து வந்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து பேசிய அமீர், சசிக்குமாரும் சமுத்திரக்கனியும் செய்த மிகப்பெரும் விஷயம் அபிநயா என்ற பேசமுடியாத பெண்னை நடிக்க வைத்து இருப்பதுதான். இந்த விஷயம் எனக்கு தோணாமப் போச்சேன்னு நான் ரொம்ப வெட்கப் படுகிறேன். (இதை எல்லாம் கைகட்டியபடி மேடையின் கீழே நின்று கேட்டு கொண்டு இருந்தார் சசிக்குமார்.) 

அடுத்து பாலா பேசினார்.  பதினைந்து வருடத்திற்கு முன்பு பாலசந்தர் சார் ஒரு பேட்டியில் சொன்னது எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கிறது... 'நமக்கு முன்பு இருந்தவர்களிடமும் சரி, நமக்கு பின்னால் வருகிறவர்களிடமும் சரி, அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு மாணவ பக்குவத்தில் இருந்தால்தான் நாம் எந்த விஷயத்திலும் சாதிக்க முடியும்' என்று சொல்லி இருந்தார். 'பாருங்க சசிக்குமார் நான் பேசுவது எப்படி என்பதைக் கூட கைகட்டி நின்று கற்றுக்கொள்கிறான் என்று சசிக்குமாரை பார்த்து சிரித்தார் பாலா. 

பாலச்சந்தர் பேசுகையில், அமீர்... நீ எனக்கு செய்தது மிகப் பெரிய துரோகம். வாங்கிய சத்தியத்தை நீ காப்பாற்றவில்லை. நான் எந்த விழாவுக்கு வந்தாலும் என்னை மேடையேற்றி விடுகிறார்கள் ஏதாவது பேசியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு நான் ஆளாகிவிடுகிறேன். என்னைக் கொண்டாடுவதை நான் விரும்பவில்லை... நான் ரஜினியை அறிமுகப்படுத்தினேன், கமலை அறிமுகப்படுத்தினேன்... அதெல்லாம் முடிந்து போன கதை. ரஜினி, கமல் எங்கோ உச்சத்திற்கு போய் விட்டார்கள். சும்மா ஏன் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்... அது கடந்தகாலம், இப்போது நாம் பார்க்க வேண்டியது நிகழ்காலம். என்னை பாராட்டுவதை விட இப்போது உங்களை பாராட்டுவது தான் நியாயமாக இருக்கும். அதுவே சினிமாவிற்கு ஆரோக்கியம் என்று வெளிப்படையாக பேசினார் பாலசந்தர். 

இறுதியாக சசிக்குமார் பேசுகையில்,  நான் தேசிய விருது வாங்கியதை எனக்கு ஏன் சொல்லவில்லை என்று அமீர் என்மீது கோபம் கொண்டார். தேசிய விருது வாங்கியவுடன் நான் வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் சொன்னது இந்த விருதை என் குருநாதர்கள் பாலாவிற்கும் அமீருக்கும் சமர்பிக்கிறேன் என்பதுதான். ஷூட்டிங் இருக்கும் நேரத்திலும் எனக்காக அமீரும் பாலாவும் இங்கு வந்திருக்கிறார்களே அதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரும் விருதாக கருதுகிறேன் என்றார் சசி.

கருத்துகள் இல்லை: