![]() |
தினமலர் : அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி சகோதரர்களான பாஸ்கர் சாவானி மற்றும் அருண் சாவானி ஆகியோருக்கு, பல மில்லியன் டாலர் மோசடி வழக்குகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
‘சாவானி குரூப்’ (Savani Group) என்ற பெயரில் இவர்கள் நடத்திய வணிக நெட்வொர்க் மூலம் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்:
இச்சகோதரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:
விசா மோசடி: இந்தியாவிலிருந்து H-1B விசா மூலம் பணியாளர்களை வரவழைத்து, அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் ஒரு பகுதியைத் சட்டவிரோதமாகத் திரும்பப் பெற்றுள்ளனர்.
மருத்துவக் காப்பீடு மோசடி: தகுதியற்ற மருத்துவர்களைக் கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்ததுடன், போலி பல் மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
நிதி மோசடி: இதன் மூலம் அமெரிக்காவின் ‘மெடிகேட்’ (Medicaid) திட்டத்தில் சுமார் 30 மில்லியன் டாலர் மோசடி செய்துள்ளனர்.
வரி ஏய்ப்பு: பாரிய அளவில் வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி (Money Laundering) செய்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடுமையான தண்டனை:
இந்த வழக்குகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பாஸ்கர் சாவானிக்கு 420 ஆண்டுகளும், அருண் சாவானிக்கு 415 ஆண்டுகளும் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க சட்டத்தின்படி, ஒவ்வொரு குற்றத்திற்கும் தனித்தனியாக வழங்கப்படும் தண்டனைகளைக் கூட்டும்போது இவ்வளவு நீண்ட காலச் சிறைத்தண்டனை சாத்தியமாகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக