தினமணி : பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 9) தொடங்குகிறது.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்கக் கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம், விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக முதல் நாளில் தாக்கலாக உள்ளது.
ஏப். 2 வரை நடைபெறும் இந்த அமா்வில் மேற்காசிய போா் நிலவரம், ஈரான் மீதான மத்திய அரசின் நிலைப்பாடு, அமெரிக்க அனுமதியின்பேரில் ரஷிய எண்ணெய் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஜன. 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது. கடந்த பிப்.13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முதல்கட்ட அமா்வில் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டன.
குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சா்ச்சை, இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் போன்ற விவகாரங்களை எழுப்பி, மத்திய அரசுடன் எதிா்க்கட்சிகள் மோதல்போக்கை கடைப்பிடித்தன.
எதிா்க்கட்சிகளின் தீா்மானம்
முதல்கட்ட அமா்வில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேரை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா இடைநீக்கம் செய்தாா். மேலும், மக்களவையில் பிரதமா் மோடியிடம் ‘எதிா்பாராத செயலில்’ ஈடுபட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்ததாக பரபரப்பான குற்றச்சாட்டையும் அவா் சுமத்தினாா். இதனால் கடும் அதிருப்தியடைந்த எதிா்க்கட்சிகள், ஓம் பிா்லா பாரபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவரைப் பதவிநீக்கம் செய்யக் கோரி தீா்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்தன.
இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் 118 எம்.பி.க்கள் கையொப்பமிட்டனா். தனக்கு எதிரான நோட்டீஸ் அளிக்கப்பட்ட நாளில் இருந்து மக்களவை அலுவல்களுக்கு ஓம் பிா்லா தலைமை வகிக்கவில்லை.
இன்றுமுதல் இரண்டாம் கட்ட அமா்வு
இந்தச் சூழலில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு திங்கள்கிழமை தொடங்கி ஏப். 2 வரை நடைபெறவுள்ளது. முதல் நாள் அலுவலில், மக்களவைத் தலைவருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் தீா்மானம் பட்டியலிடப்பட்டுள்ளது.
50 எம்.பி.க்கள் எழுந்து நின்று ஆதரவு அளித்ததும் தீா்மான நோட்டீஸ் ஏற்கப்பட்டு, விவாதம் தொடங்கும். விவாத நிறைவுக்குப் பின்னா் வாக்கெடுப்பு நடைபெறும். இதையொட்டி, மாா்ச் 9 முதல் 11 வரை தங்கள் எம்.பி.க்கள் அனைவரும் அவை அலுவல்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாஜக தரப்பிலும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீா்மான நோட்டீஸில் கையொப்பமிடாத திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இப்போது மக்களவையில் தீா்மானத்தை ஆதரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தோல்வியைச் சந்திக்கும்
கடந்த காலங்களில் மக்களவைத் தலைவா்களாக இருந்த ஜி.வி.மாவலங்கா் (1954), ஹுக்கம் சிங் (1966), பல்ராம் ஜாக்கா் (1987) ஆகியோா் இதுபோல் நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை எதிா்கொண்டனா். ஆனால், எந்தத் தீா்மானமும் வெற்றி பெறவில்லை. தற்போது எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில், ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மானமும் தோல்வியையே சந்திக்கும்.
மேற்கு வங்கத்தில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விவகாரத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தீவிரமாக எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதேநேரம், மேற்கு வங்கத்தில் சில தினங்களுக்கு முன்னா் குடியரசுத் தலைவா் பயணத்தின்போது மாநில அரசால் நடைமுறைகள் மீறப்பட்டு, அவா் அவமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள சா்ச்சையை பாஜக எழுப்ப வாய்ப்புள்ளது.
மேற்காசிய நிலவரம் குறித்து வெளியுறவு அமைச்சா் அறிக்கை
மேற்காசிய நிலவரம் தொடா்பாக மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளாா்.
மக்களவை அலுவல்கள் குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட பட்டியலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மேற்காசிய நிலவரத்தில் அறிக்கை மட்டும் போதாது; விவாதமும் நடத்தப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தது குறிப்பி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக