சனி, 14 மார்ச், 2026

ஹெர்மன் குல்கே (1938-2026) : தென்னிந்திய வரலாற்றைத் தெளிவுபடுத்திய வரலாற்றறிஞர் - Prof.Hermann Kulke

May be an image of monument and temple

 Ravi Kumar   : ஹெர்மன் குல்கே மறைந்தார் என்ற செய்தியை நண்பர் நரேந்திரன் நேற்றிரவு பகிர்ந்திருந்தார். அதைப் படித்ததும் துணுக்குற்றேன். அவரது எழுத்துகளைப் படித்திருக்கிறேன் என்றபோதிலும் அவரை நெருக்கமாகப் பின் தொடர்ந்ததில்லை. அவரது புகைப்படத்தைப் பார்த்தபோது அவர் முதியவர் என்ற உணர்வு வந்ததில்லை. இப்போது தேடிப் பார்க்கும்போதுதான் அவர் 1938 இல் பிறந்தவர் என்ற விவரம் தெரிந்தது. நிறைவாழ்வு வாழ்ந்தவர்தான் என்றபோதிலும் அவரது மறைவு துயரமளித்தது. இந்தியாவை அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவைப் பற்றி ஆய்வு செய்யும் அயல்நாட்டு அறிஞர்களின் மறைவு ஒவ்வொன்றுமே துயரமளிப்பதுதான். ஏனென்றால் அவர்களது இடங்களை இட்டு நிரப்ப எவரும் வருவார்கள் என்ற நம்பிக்கை இப்போது இல்லை. 


ஜெர்மனியில் பிறந்த வரலாற்றாய்வாளர் மற்றும் இந்தியவியல் அறிஞரான ஹெர்மன் குல்கே (Hermann Kulke) இந்திய வரலாறு, குறிப்பாக தென் இந்திய வரலாறு மற்றும் மதச் சடங்குகள் சார்ந்த அரசியல் அமைப்புகள் குறித்து குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டவர். அவர் ஜெர்மனியின் ஃப்ரைபர்க் (Freiburg) பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் (சமஸ்கிருதம்) மற்றும் வரலாறு ஆகியவற்றைப் பயின்றார். அங்கு அவர் செய்த முனைவர் பட்ட ஆய்வு “சிதம்பர மஹாத்மியம்” (Cidambaram Mahatmya) என்ற நூலை மையமாகக் கொண்டது. இந்த நூல், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோயில் நகரமான சிதம்பரம் பற்றிய சமய–பாரம்பரியக் கதைகளையும் மரபுகளையும் உள்ளடக்கியதாகும்.
குல்கேயின் இரண்டாவது முக்கியமான ஆய்வுநூல் ஒடிசாவின் கஜபதி அரசாட்சி (Gajapati kingship of Orissa) பற்றியது. ஒடிசாவின் சமய–அரசியல் மரபுகள் குறித்த ஆய்வுகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டார். ஜெர்மன் ஆராய்ச்சி கவுன்சில் (German Research Council) முன்னெடுத்த ஒடிசா ஆராய்ச்சித் திட்டத்தில் அவர்  பங்கேற்றதுடன், “The Cult of Jagannath and the Regional Tradition of Orissa” (1978) என்ற முக்கிய நூலின் இணைத் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் 1999 முதல் 2005 வரை நடைபெற்ற இரண்டாவது ஒடிசா ஆராய்ச்சி திட்டத்தையும் ஒருங்கிணைத்தார்.
சிதம்பரத்திலிருந்து ஒடிசாவுக்கு அவரது கவனம் எப்படி மாறியது என்பதை அவர் நேர்காணல் ஒன்றில் பதிவு செய்துள்ளார்: 
“ நான் ஜெர்மனியில் உள்ள ஃப்ரீபர்க்கில் இந்தியவியல் பயின்றேன், பன்னிரண்டாம் நூற்றாண்டின் சமஸ்கிருத நூலான சிதம்பர மகாத்மியம் குறித்து முனைவர் பட்டம் பெற்றேன். இது சிவ நடராஜரின் கோயில் நகரமான சிதம்பரத்தின் புராண மற்றும் அரை வரலாற்றுக் கதைகளைப் பற்றியது. இந்த ஆய்வு எனது எதிர்கால ஆய்வுகளுக்கான ஒரு வகையான துவக்கமாக இருந்தது, ஏனெனில் இது மதம் மற்றும் அதன் நிறுவனங்கள், கோயில் நகரங்கள் மற்றும் அவற்றின் வழிபாட்டு முறைகள் போன்றவற்றை மட்டுமல்லாமல், பிராந்திய கலாச்சாரம் மற்றும் பிராந்திய அரசு உருவாக்கத்தின் செயல்முறைகளிலும் செல்வாக்கு செலுத்தியது . மதமும் அரசியல் வரலாறும் கலந்த  இந்த கூட்டிணைவு வரலாறு மீதான எனது பொதுவான விருப்பத்துடன் ஒத்துப்போனது. ஆனால் கோயில் நகரங்கள் (தீர்த்தங்கள்) மற்றும் புனித யாத்திரைத் தலங்கள் பற்றிய ஆய்வு அப்போதுவரை  ஜெர்மனியில் இந்தியவியலின் பொதுவான துறையாக மாறவில்லை. எனவே, ஃப்ரீபர்க்கில் உள்ள இந்தியவியல் துறையிலும், ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிறுவனத்திலும் உள்ள சில சக ஊழியர்கள், ஒடிசாவின் கோயில் நகரங்கள் குறித்த ஆராய்ச்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற எனது பரிந்துரையை அங்கீகரித்தனர்.
புவனேஸ்வர் மற்றும் பூரியையும், லிங்கராஜா மற்றும் ஜகன்னாதர் கோயில்களின் சைவ மற்றும் வைணவ வழிபாட்டு முறைகளையும் ஒப்பிடுவதே எங்களது ஆரம்ப யோசனையாக இருந்தது. ஆனால் 1969 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பூரியில் டாக்டர் கயா சரண் திரிபாதியுடன் (பின்னர் அலிப்பூரில் உள்ள பி.எல். இந்தியவியல் நிறுவனத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குநராக இருந்தவர்) ஒரு வெளிப்படையான, வெற்றிகரமான முன்னோடித் திட்டத்திற்குப் பிறகு, நாங்கள் இறுதியாக ஜெகந்நாதரின் வழிபாட்டு முறை குறித்த ஒரு திட்டத்திற்காக ஜெர்மன் ஆராய்ச்சி கவுன்சிலிடம் விண்ணப்பிக்க முடிவு செய்தோம். அதன் ஆய்வு பல எதிர்பாராத நன்மைகளை வழங்கியது. பூரியின் ஒரு முக்கிய ஈர்ப்பு, பழங்குடி வம்சாவளியின் தெளிவாகத் தெரியும் அறிகுறிகளுடன் கூடிய ஒரு நினைவுச்சின்ன மர தெய்வம் (தாரு மூர்த்தி) மூலம் கிருஷ்ணரின் அவதாரமாக ஜெகந்நாதரை வழிபடுவது போல் தோன்றுவது முரண்பாடாகத் தெரிகிறது. ஜெகந்நாதரின் மத மற்றும் சின்னமான தனித்துவத்தின் தனித்துவம் கஜபதி அரசாட்சி சித்தாந்தத்தால் மேம்படுத்தப்படுகிறது. ஜெகந்நாதர் 'ஒடியப் பேரரசின் ராஜா' (ஒடிசா-ராஜ்ய-ராஜா) என்று வணங்கப்படுகிறார், அவருடைய மேலாதிக்கத்தின் கீழ் (சாம்ராஜ்ய) ஒடிசாவின் மகாராஜாக்கள் 'கஜபதிகள்' (யானைகளின் இறைவன்) ஆக ஆட்சி செய்தனர். அவர்கள் ஜெகந்நாதரின் மகன்கள் (புத்திரர்) மற்றும் பிரதிநிதிகள் (ரௌத) என்று புகழப்பட்டனர்.” 
இந்திய வரலாற்றியல் (Indian historiography), இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் நடுத்தரகால அரசமைப்புகளின் உருவாக்கம் (medieval state formation), அங்க்கோர் (Angkor) பகுதியின் தேவராஜா (Devaraja) வழிபாட்டு மரபு போன்ற பல்வேறு துறைகளிலும் குல்கே ஆய்வுகளை மேற்கொண்டார். இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் அரசாட்சி, சமய வழிபாடுகள் ஆகியவற்றுக்கு இடையேயான உறவை ஆராய்ந்து “Kings and Cults in India and Indonesia” என்னும் நூலை வெளியிட்டார். மேலும் “The State in India, 1000–1700” என்ற நூலைத் தொகுத்து வெளியிட்டதுடன், ஜெர்மன் மொழியில் இந்திய வரலாற்றைப் பற்றிய ஒரு விரிவான நூலையும் 2005 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
பதினொன்றாம் நூற்றாண்டில் நடைபெற்ற சோழர் கடற்படைப் படையெடுப்புகள் குறித்த ஆய்வுத் தொகுப்பை இணைத் தொகுப்பாசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். Nagapattinam to Suvarnadwipa : reflections on the Chola naval expeditions to Southeast
Asia (2009) என்ற அந்த நூல் சோழர்களின் கடல்வழிப் படையெடுப்புகள், வாணிபம் குறித்த அரிய தகவல்களைத் தருகிறது. 
“ கிபி ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே வணிக நடவடிக்கைகள் அதிகரித்தன. அப்போது நிலவிய அமைதியான சூழல் வங்கக் கடலுக்கு அப்பால் இந்தியப் பண்பாடு அமைதியாகப் பரவுவதற்கு வழி வகுத்தது. கிபி பத்தாம் நூற்றாண்டு வரையிலான ஆயிரம் ஆண்டுகளில் இது நடந்தது. அப்போது நடந்த இந்திய பண்பாட்டுப் பரவலுக்கு நிகராக உலக வரலாற்றில் வேறு எதையும் சொல்ல முடியாது. இந்து மதமும் பௌத்தமும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் தனது செல்வாக்கை ஆழமாகப் பதித்தன. அமராவதியின் பௌத்த கலைகளில் காணப்படும் தென்னிந்திய செல்வாக்கும்; இந்தோனேசியாவின் தொடக்க கால கல்வெட்டுகளில் காணப்படும் பல்லவ கிரந்த செல்வாக்கும், பல்லவர்கள் மற்றும் சோழர்களின் கலை கட்டடக்கலை ஆகியவை தென்னாசியாவில் ஏற்படுத்திய தாக்கத்துக்குச் சான்றுகளாக உள்ளன”என்று குல்கே அந்த நூலின் தொகுப்புரையில் குறிப்பிட்டுள்ளார். ‘ஆசிய நாடுகளின் வரலாற்றில் சோழர்களின் கடல் வழிப் படையெடுப்புகளின் செல்வாக்கைப்’ பற்றி அந்த நூலில் அவர் எழுதியுள்ள கட்டுரை குறிப்பிடத்தக்கதாகும். சோழர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் இந்தத் தொகுப்பில் உள்ள கராஷிமா, சுப்பராயலு முதலானவர்களின் கட்டுரைகளைப் படிக்க வேண்டும். 
1988 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் கீல் (Kiel) பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட புதிய ஆசிய வரலாற்றுப் பேராசிரியர் பதவிக்கு (Chair of Asian History) ஹெர்மன் குல்கே அழைக்கப்பட்டுப் பணியாற்றினார். இந்தியாவில் உத்கல் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கொல்கத்தாவிலுள்ள ஆசியாடிக் சொஸைட்டி ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராக அவர் இருந்துள்ளார். 
இந்திய சமய–அரசியல் மரபுகள், மாநில உருவாக்கம் மற்றும் பிராந்திய வரலாற்று மரபுகள் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட முக்கிய ஐரோப்பிய இந்தியவியல் அறிஞர்களில் ஹெர்மன் குல்கே முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
இந்திய அரசு அவருக்கு பத்மஶ்ரீ விருதளித்து சிறப்பித்துள்ளது. அவர் கடந்த 10.03.2026 அன்று தனது 88 ஆவது வயதில் காலமானார். அவருக்கு என் அஞ்சலி !

கருத்துகள் இல்லை: