புதன், 11 பிப்ரவரி, 2026

அதிர்ச்சியில் டெல்லி காங்கிரஸ் - டோனை மாற்றிய ஸ்டாலின்.. சரண்டரான செல்வப்பெருந்தகை.

 tamil.oneindia.com : டோனை மாற்றிய ஸ்டாலின்.. சரண்டரான செல்வப்பெருந்தகை.. அதிர்ச்சியில் டெல்லி காங்கிரஸ்
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தனி டிராக்கில் பயணித்து வருகிறது. சில நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். திமுக விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை (DMK Alliance issue) குழுவை அமைக்க வேண்டும் என்று நேற்று செல்வப்பெருந்தகை டோனை மாற்றியிருந்தார். அதற்கு ஸ்டாலின் அழுத்தமான பதிலடி கொடுத்துள்ள நிலையில் செல்வப்பெருந்தகை ரியாக்ட் செய்துள்ளார்.


தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள் ஆகியவற்றால் களம் பரபரப்பாகியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது. மிகவும் வலுவான கூட்டணியாக கருதப்பட்ட திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் பரபரப்பு நிலவி வருகிறது. பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் திமுகவிற்கு எதிரான கருத்துகளை முன் வைத்து வருகிறார்கள்.
திமுக காங்கிரஸ் கூட்டணி
காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு பிறகு திமுக பேச்சுவார்த்தை குழு அமைக்காததால் தங்களின் தொண்டர்கள் வருத்தத்தில் இருப்பதாக காங்கிரஸ் கூறியது. தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிறிஸ் சோடங்கர், நாங்கள் பேச்சுவார்த்தை குழு தொடங்கி 70 நாட்களாகிவிட்டது என்று நேரடியாக அதிருப்தி தெரிவித்திருந்தார்.
திமுகவுடன் நல் உறவை கடைபிடித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் நேற்று திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் டோனை மாற்றி பேசியிருந்தார். திமுக பேச்சுவார்த்தைக்கு தாமப்படுத்துவதால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். எல்லாருமே வருத்தமாக தான் உள்ளனர். எனவே அவர்கள் விரைந்து குழு அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆட்சியில் பங்கு என்பதையும் முதல்வரிடம் அழுத்தமாக வலியுறுத்துவோம் என கூறியிருந்தனர்.
ஸ்டாலின் பதிலடி
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தோழமை கட்சிகளுடன் வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி திமுக பேச்சுவார்த்தை நடத்தும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து இந்தியா டுடே நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், "திமுக - காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக தான் உள்ளது. ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது" என்று உறுதியாக கூறியுள்ளார்.
ஸ்டாலினின் இந்தக் கருத்து காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. இதுகுறித்து செல்வப்பெருந்தகை, "ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். முதலமைச்சர் அவரின் கருத்தை சொல்லியுள்ளார். கூட்டணிக்கும், மக்களுக்கும் எது நலனோ அதை இரண்டு கட்சிகளின் மேலிடம் இணைந்து எடுக்கும். எங்கள் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. இதில் எந்த சிக்கலும் இருக்காது" என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் அதிர்ச்சி
நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் செல்வப்பெருந்தகை திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பேசியது சர்ச்சையை கிளப்பியது. முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு பதிலடி கொடுத்ததால் அவர் மீண்டும் பழைய டோனுக்கு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகள் டெல்லி காங்கிரஸ் மேலிடத்திற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது

கருத்துகள் இல்லை: