மின்னம்பலம் -Kavi : சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (பிப்ரவரி 11) 10ஆவது நாளாக போராட்டம் நடைபெற்றது.
அரசுத் துறைகளில் உள்ள மற்ற பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். முறையான விடுப்பு வசதிகள், மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும்.
மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களை காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வள்ளுவர் கோட்டம் வந்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அப்போது போலீசார் இந்த இடத்தில் போராட அனுமதி இல்லை கலைந்து செல்லுங்கள் என்று அறிவுறுத்தினர்.
மேலும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கீதா, சீமானிடம் நீங்கள் இங்கு போராடக் கூடாது. உங்களுக்கும் அனுமதி இல்லை… பணியாளர்களுக்கும் இங்கு அனுமதி இல்லை என்று கூறினார்.
இந்நிலையில் சீமான், போராட்டக்காரர்களை நான் சந்திக்கக் கூடாது என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. இது எங்கள் நாடு, கோரிக்கைகளை வைத்து நாங்கள் போராடுகிறோம் என்று கூறினார்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வோம் என்று போலீசார் கூற, சரி கைது செய்யுங்கள் என்று சொல்லி போலீஸ் வேனில் ஏறினார் சீமான்.
இதையடுத்து அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்ற போலீசார் மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விட்டனர். அப்போது போராட்டக்காரர்களை நான் சந்திக்க வேண்டும் என்று சீமான் போலீசாரிடம் அனுமதி கேட்டார்.
இதற்கு போலீசார், நாங்கள் அவர்களை கைது செய்துகொண்டிருக்கிறோம். இப்போது சந்திக்க அனுமதிக்க முடியாது. நாளை வேண்டுமானால் சந்திக்க அனுமதி தருகிறோம் என்று கூறியதால் சீமான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக