hindutamil.in- வே.கோபாலகிருஷ்ணன் : தமிழகத்தில் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அறிவாலயத்தின் மவுனம் மட்டும் கூட்டணிக் கட்சிகளின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. "கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான குழுவை பிப்ரவரி இறுதியில் அமைத்துக் கொள்ளலாம்" என திமுக மேலிடம் எடுத்திருக்கும் முடிவை சற்றும் எதிர்பார்க்காத அதன் தோழமை கட்சிகள், இப்போது உச்சகட்ட கடுப்பில் இருக்கின்றன.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 173 இடங்களில் களம் கண்டது. மீதமுள்ள இடங்கள் காங்கிரஸ் 25, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம்-க்கு தலா 6, முஸ்லீம் லீக், கொமதேக-வுக்கு தலா 3, மநேமக 2, தவாக, பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் எனப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இந்த முறையும் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி அதே பழைய கணக்கிலேயே வண்டியை ஓட்டிவிடலாம் என அறிவாலயம் கணக்குப் போட்டிருந்தது. ஆனால், கள யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது.
இதுகுறித்து பேசும் மதச்சார்பற்ற கூட்டணியின் சீனியர் தலைவர்கள் சிலர், "கூடுதல் இடங்களைக் கேட்டு முதலில் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியது காங்கிரஸ்தான். அவர்களை வழிக்குக் கொண்டு வரும் ‘அசைன்மென்ட்’ கனிமொழி, சபரீசனிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பணிகள் சுமூகமாக நகர்வதால் திமுக நிம்மதியடையும் முன்பே, மற்ற கூட்டணிக் கட்சிகள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கிவிட்டன.
மநேமக கடந்த முறை 2 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்தமுறை 5 தொகுதிகளைக் கேட்டு அடம்பிடிக்கிறது. விசிக 8 தொகுதிகள் வேண்டும் என மல்லுக்கட்டுகிறது. பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவரும் திமுகவின் முயற்சிக்கு திருமாவளவன் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்திருப்பது அறிவாலயத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
"கடந்த முறை 6 இடங்கள் கொடுத்தோம், அதில் இரண்டில் தோல்வி.. இப்போது எப்படி கூடுதலாகக் கேட்க முடியும்?" என்பது திமுகவின் வாதம். இதில் சிறுத்தைகள் கடும் அப்செட். இதேபோல் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே இந்த முறை 'இரட்டை இலக்கத்தில்' தொகுதிகள் வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியுள்ளன. கமல்ஹாசனின் மநீம 3 சீட்கள், டார்ச்லைட் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என உறுதியாக நிற்கிறது. வேல்முருகனின் தவாக 2 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. பிரேமலதாவோ, இரட்டை இலக்கத் தொகுதிகள் வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறார்.
இதற்கிடையில் 3-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'விரைவில் குழு அமைக்கப்படும்' என்றார். இதனால் இருக்கு.. இல்லை என தெரிந்துவிடும் என கூட்டணி கட்சிகள் தயாராக இருந்தன. ஆனால் மீண்டும் திமுக தரப்பில் இழுத்தடிப்பது எங்களை எரிச்சலடைய வைத்துள்ளது. கார்த்தி சிதம்பரம், "ராகுல் - கனிமொழி பேச்சுவார்த்தை முடிந்து 9 நாட்கள் ஆகியும் திமுக குழு அமைக்கவில்லை," என வெளிப்படையாகவே சாடினார். மாணிக்கம் தாகூரோ, "காங்கிரஸ் குழு அமைத்து 36 நாட்களாகிவிட்டது. கூட்டணி தர்மப்படி காங்கிரஸை மதிக்க வேண்டும்," எனத் தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார். ஆனாலும் திமுக கண்டுகொள்ளவில்லை" என்றனர்.
ஆனால் ஸ்டாலின் இந்தத் தாமதத்திற்குப் பின்னால் ஒரு அரசியல் கணக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள் அறிவாலய சீனியர்கள். தொடர்ந்து பேசிய அவர்கள், "சமீபத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அமைச்சர்களுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின் தனது வியூகத்தைப் பகிர்ந்தார். அதில் அவர், "இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அதற்குள் அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதிலும், மக்கள் கூட்டங்களை நடத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இப்போதே கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்துவிட்டால், ஊடகங்கள் முழுவதும் அதுகுறித்த செய்திகளே ஆக்கிரமிக்கும். 'மீண்டும் ஸ்டாலின்' என்ற பிம்பத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரசு நிகழ்வுகள் கவனம் பெறாமல் போய்விடும்.
எனவே பிப்ரவரி இறுதியில் குழு அமைப்பதை பார்த்துக்கொள்ளலாம்' என்றார். அதனால்தான் இன்னும் குழு அமைக்கவில்லை" என்றனர். முதல்வரின் இந்த 'கூல்' முடிவால், உடனடியாகப் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்த்துத் தவம் கிடக்கும் கூட்டணிக் கட்சியினர் பெரும் அப்செட்டில் உள்ளனர்.
இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் கேட்டபோது, "நாங்கள் வேண்டும் என்றெல்லாம் தாமதம் செய்யவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் எனத் தலைவர் ஏற்கனவே சொல்லிவிட்டார். அதன் அடிப்படையில் விரைவில் குழு அமைக்கப்படும்" எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக