tamil.oneindia.com - Shyamsundar ; சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் நீண்டகால கூட்டணிகளாக விளங்கும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. திமுகவிடம் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு மற்றும் கூடுதல் தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியில் பங்கு: காங்கிரஸின் பிடிவாதம்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) முக்கிய நிர்வாகிகள், வரும் தேர்தலில் தங்களுக்குக் குறைந்தபட்சம் 40 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த கோரிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், "வெறும் வாக்கு வங்கியாக மட்டும் செயல்பட நாங்கள் விரும்பவில்லை; அதிகார மையத்திலும் எங்களது பங்களிப்பு இருக்க வேண்டும்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.
"ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவின் வெற்றிக்கு நாங்கள் உழைக்கிறோம், ஆனால் ஆட்சியில் எங்களுக்கு இடமில்லை. இது தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது," என்று கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மாற்று வழியா தவெக?
திமுக தரப்பிலிருந்து 'அதிகாரப் பகிர்வு' என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பது காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா டுடே தொலைக்காட்சியின் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது ஸ்டாலின், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இது காங்கிரஸ் நிர்வாகிகளிடையே சலசலப்பை உருவாக்கி இருக்கிறது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என்பது முதல்வரின் கருத்து.. அவர் கட்சியின் கருத்து.. என்று கூறி உள்ளார்.
Recommended For You
ஆட்சியில் பங்கு.. தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது.. இந்தியா டுடே நிகழ்ச்சியில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
இந்த சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) காங்கிரஸிற்கு ஒரு மாற்று வாய்ப்பாகத் தெரிகிறது. திமுக தங்களை மதிக்கத் தவறினால், விஜய்யுடன் கைகோர்ப்பது குறித்தும் கட்சியின் ஒரு பிரிவினர் ஆலோசித்து வருகின்றனர். இது திமுக-காங்கிரஸ் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் மீதான விமர்சனங்கள்
இந்த அரசியல் குழப்பங்களுக்கு ராகுல் காந்தியின் அணுகுமுறையே முக்கிய காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி பிரிவினர் சாடுகின்றனர். டிசம்பர் மாதம் முதல் இந்த சிக்கல் வளர்ந்து வரும் நிலையிலும், ராகுல் காந்தி இதுகுறித்து எந்தவொரு தீர்க்கமான முடிவையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
கனிமொழி கருணாநிதியுடன் நடத்திய சந்திப்பு, நேற்று காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நடத்திய சந்திப்பைத் தவிர்த்து, தமிழக அரசியல் விவகாரங்களில் ராகுல் காந்தி சமீபகாலமாக மௌனம் காத்தே வருகிறார். "ராகுல் காந்தியைத் தொடர்புகொள்வது மிகவும் கடினமாக உள்ளது. அவர் ஒரு தீர்க்கமான முடிவை அறிவிக்காமல் இழுத்தடிப்பது, தமிழக காங்கிரஸில் குழப்பத்தை அதிகரிக்கவே செய்கிறது, ஸ்டாலின் பேசிவிட்டார்... ராகுல் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்" என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திமுகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று மேலிடம் விரும்பினாலும், அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்க முடியாது என்ற நிலையில் காங்கிரஸ் உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற திட்டமிடப்படும் தொகுதிப் பங்கீட்டுக் குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் நேரடித் தலையீடு இருக்குமா அல்லது இதே மௌனம் நீடிக்குமா என்பதே இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி.
இந்த மௌனம் நீடித்தால், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையக்கூடும் அல்லது காங்கிரஸ் ஒரு பலவீனமான நிலையில் தேர்தலைச் சந்திக்க நேரிடும் என்பது மட்டும் உறுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக