ராதா மனோகர் : பராசக்தி - மிக ஆபத்தான ஒரு விளையாட்டில் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்!
தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்திய துணைக்கண்டத்திற்கே திருப்பு முனையாக அமைந்த ஒரு வரலாற்றை திரைப்படமாக தயாரிப்பதற்கு மிக பெரிய துணிச்சல் வேண்டும்!
இந்தி திணிப்புக்கு எதிராக அன்று தமிழகம் போர்க்கொடி தூக்கியது சாதாரண விடயம் அல்ல!
இந்தி பேசாத மாநிலங்களில் இந்திக்கு எதிரான உணர்வோ எதிர்ப்போ பெரிதாக எழுந்திராத ஒரு நிலையில் தமிழகத்தில் அன்று மொழிப்போர் வெடித்ததே ஒரு அசாதாரண நிகழ்வுதான்.
அந்த ஆதிக்க மொழி வெறி, மொழி திணிப்பு போன்றவை இன்றும் கூட தலைதூக்கி கொண்டிருக்கும் காலகட்டத்தில்,
இந்த எரியும் பிரச்னையை திரைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.
இது தடைகளை தாண்டி திரைக்கு வந்ததே பெரிய சாதனைதான்!
ஒரு சாதாரண திரைப்படத்தை விமர்சிப்பது போல் இந்த புதிய பராசக்தியை என்னால் விமர்சிக்க முடியாமல் இருக்கிறது.
இதற்கு காதல் காட்சிகளே தேவை இல்லை .
சண்டை காட்சிகள் கொஞ்சம் அதிகமோ என்றெல்லாம் கூறலாம்
ஆனால் பராசக்தியை என்னால் வெறும் திரைப்படமாக காண முடியவில்லை.
இரத்தமும் சதையுமாக நம் கண்முன்னால் வாழ்ந்தவர்கள் கொடுத்த விலைதான் இன்று தமிழகம் கண்டிருக்கும் இமாலய எழுச்சி என்ற எண்ணம் ஒவ்வொரு பிரேமிலும் உணர கூடியதாக இருக்கிறது.
வரலாற்றை நன்றாக தெரிந்தவர்கள் கண்கலங்காமல் பராசக்தியை பார்க்கவே முடியாது.
மேலும் இந்த படம் வெறும் வரலாற்றை மட்டும் பேசுகிறது என்று கருத முடியாது!
வரலாற்றை திரைப்படங்கள் நாடகங்கள் பாடல்கள் மூலம் நகர்த்திய வரலாறு திராவிட இயக்கத்திற்கு உண்டு.
இன்று இந்த புதிய பராசக்தியும் அதே பாதையில் அடுத்த கட்டத்திற்கு மக்களை முன்னோக்கி நகர்த்தியுள்ளது!
அந்த வகையில் இந்த புதிய பராசக்தி ஒரு சமூக அரசியல் நடவடிக்கை என்று கூட கருதலாம்!
இது தமிழகத்தை தாண்டி இந்தி பேசாத ஏனைய மாநிலங்களுக்கும் இரு மொழி கொள்கையின் முக்கியத்துவத்தை கற்பிக்கும் என்று கருதுகிறேன்.
அது மட்டுமல்ல இதற்காக தமிழகம் கொடுத்த விலையையும் அவர்களுக்கு தெரியப்படுத்தும்.
ஆதிக்க இந்திக்கு எதிராக போராடும் துணிவையும் அந்த மாநிலங்களுக்கு கொடுக்கவும் பராசக்தி பயன்படும்/
காட்சிகளை அந்த ஆண்டிற்கே எடுத்து சென்றதில் படக்குழுவினர் இமாலய வெற்றி பெற்றுள்ளனர்.
நடிகர்கள் துணை நடிகர்கள் எல்லோருமே அந்த காலத்து மனிதர்கள் போலவே காட்சி அளிக்கிறார்கள்.
இதன் பின்னணியில் கடும் உழைப்பு இருப்பது தெரிகிறது.
இறுதி காட்சியில் வரும் மொழிப்போர் தியாகிகளின் படங்களும் அவர்களை பற்றி சிறு குறிப்புக்களும் இது கதை அல்ல .. நிஜம் என்ற உணர்வை தருகிறது!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக