திங்கள், 21 ஏப்ரல், 2025

திருமாவளவன் : நாம் திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? எந்த முடிவும் எம்மால் முடியும்

 மின்னம்பலம் - ஆரணி : “இன்று காலை ஆங்கில நாளேட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பேட்டியில், ‘பாமக…. திமுக கூட்டணிக்கு வரக்கூடும், விசிகவோ, அதிமுக கூட்டணிக்கு சென்றுவிடும் என்று சில பேச்சுக்கள் எழுந்துள்ளது.
அதனால் தான் ராமதாஸ், அன்புமணி இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறதே?’ என்ற கேள்விக்கு, ‘இந்த ஊகங்களை புறக்கணித்து விடுங்கள்.


திமுக கூட்டணி வலுவாகவும், உறுதியாகவும் உள்ளது’ என்று பதிலளித்திருந்தார்.
இந்த பேட்டியை காலையில் படித்துக் கொண்டிருக்கும்போதுதான் 9.42 மணிக்கு திருமாவளவன் ஃபேஸ்புக் நேரலை வீடியோவில் தோன்றி சில விஷயங்களைப் பேசினார்.
அப்போது அவர், ‘மதச்சார்பற்ற திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாம் உறுதியாக இருப்பதால்…
நாம் ஏதோ திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோம், அவர்களை நம்பிக் கிடக்கிறோம் என்ற தோற்றத்தை சிலர் உருவாக்குகிறார்கள்.
 தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் கம்ப சித்திரம் அல்ல… அவர்களுக்கு திமுக கூட்டணியை பலவீனப்படுத்த ஒரே துருப்புச் சீட்டு விசிகதான். யார் என்ன சொன்னாலும் அதற்கு எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில் அதற்குள் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது’ என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து விசிக வட்டாரங்களில் பேசியபோது, ‘நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திருமா, பாஜகவுடன் கூட்டணி வைப்பதை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். இன்று தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும் என கூறுகிறார். இதற்குப் பின்னால் திமுக தலைமைக்கு சில அழுத்தங்களை திருமா வைத்திருக்கிறார்.

அதாவது அதிமுக-பாஜக கூட்டணி அமைந்த பிறகு திமுக தலைமைக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. இனிமேல் தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு வேறு ஆப்ஷன் ஏதும் இல்லை. அதிமுகவோடு பாஜக சேர்ந்துவிட்டதால், அங்கே செல்ல முடியாது. இதற்காக விஜய்யிடமும் அவர்களால் போக முடியாது. எனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக சீட்டுகள் வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் நிர்பந்தம் செய்ய முடியாது என்ற பேச்சுகள் திமுக தலைமையில் நடந்து வந்திருக்கின்றன. இதை அறிந்துதான் திருமா உஷாராகி நேற்று அதிமுகவுக்கு வேண்டுகோள் விடுத்தார். இன்றைக்கு திமுகவுக்கு மெசேஜ் சொல்லியிருக்கிறார். thiruma vedio dmk alliance shocking

விசிக மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இதை வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்க வைக்க வேண்டுமென்றால் 2 சீட்டுகளில் வெற்றி பெற்று 6% வாக்குகள் வாங்கிட வேண்டும், அல்லது ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் போனாலும் 8% வாக்குகள் பெற வேண்டும் அல்லது குறைந்தது 7 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும்.

இந்த மூன்று வாய்ப்புகளில் மூன்றாவது வாய்ப்பான குறைந்தது 7 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. அப்படியென்றால் 2021 இல் போட்டியிட்ட 6 இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். 7 இடங்களில் வெல்ல வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 10 இடங்களிலாவது போட்டியிட வேண்டும். மக்கள் நலக் கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்டது விசிக. எனவே அதிமுக -பாஜக கூட்டணி அமைந்ததால் கூட்டணிக் கட்சிகளை பழைய கணக்கை கொடுத்தே அடக்கி விடலாம் என திமுக கருதிவிட கூடாது என்பதால் தான் இப்படிப்பட்ட எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறார் திருமா என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப். thiruma vedio dmk alliance shocking

கருத்துகள் இல்லை: