செவ்வாய், 23 ஏப்ரல், 2024

பெண்கள், இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஓட்டு யாருக்கு அதிகம்? மெகா சர்வே ரிசல்ட்!

minnambalam.com - vivekanandhan :  மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகளின்படி, 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் தமிழ்நாடு முழுக்க திமுக கூட்டணி 45.3% வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 28.3% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடமும், பாஜக கூட்டணி19.9% வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடமும், நாம் தமிழர் கட்சி 5.5% வாக்குகளைப் பெற்று நான்காம் இடமும் பெறுகின்றன.
தமிழ்நாட்டில் பெண்களின் வாக்கு யாருக்கு செல்கிறது, இளைஞர்களின் வாக்கு யாருக்கு செல்கிறது, அரசு ஊழியர்களின் வாக்குகள் யாருக்குச் செல்கிறது, கிராம மக்களின் வாக்குகள் யாருக்கு, நகர்ப்புற மக்களின் வாக்குகள் யாருக்கு என்று கருத்துக்கணிப்பில் கிடைத்த பல்வேறு முடிவுகளைப் பார்ப்போம்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாக்குகள்
வழக்கமாக திமுகவிற்கு நகர்ப்புற வாக்குகள் அதிகமாகக் கிடைக்கும். இந்த முறை திமுகவிற்கு கிராமப் புற வாக்குகளிலும் முன்னேற்றம் இருக்கிறது.



அதிமுகவின் வாக்குகளைப் பொறுத்தவரை வழக்கமாக கிராமங்களில் அதன் செல்வாக்கு அதிகம் இருக்கும். இந்த முறையும் அதிமுக பெறும் வாக்குகளில் கிராமங்களில் இருந்து கிடைக்கும் வாக்குகள் அதிகமாக இருக்கிறது.

பாஜக பெறும் வாக்குகளில், மாநகராட்சிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் உள்ளன. பாஜக பெற்ற வாக்குகளில் அதிகம் இந்த பகுதிகளைச் சுற்றி பெற்றிருக்கிறது.

அதேசமயம் கிராமங்களில் தாமரை சின்னத்தின் பாப்புலாரிட்டி சற்று அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிகிறது. பாஜகவிற்கு ஓட்டு என்று சொல்வதை விட தாமரை கட்சிக்கு ஓட்டு போடுவேன் என்று ’தாமரை கட்சி’ எனும் சொல்லாடல் மக்கள் மத்தியில் பரவலாக புழக்கத்திற்கு வந்திருப்பதை கருத்துக்கணிப்பில் அறிய முடிகிறது.

நாம் தமிழர் கட்சி பெறும் வாக்குகளில் மாநகராட்சி பகுதிகளிலிருந்து கிடைக்கும் வாக்குகள் அதிகமாக இருக்கிறது. கிராமங்களில் வாக்குகள் குறைவாக இருக்கிறது.

பெண்களின் வாக்குகள்

2011, 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களின் வாக்குகள் என்பது பெருமளவிற்கு அதிமுகவிற்கே சென்றது. வழக்கமாக பெண்களின் வாக்குகளை அதிகம் பெறும் கட்சியாக அதிமுக பார்க்கப்பட்டு வந்தது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு முதல்முறையாக இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதத்தில் பெண்களின் வாக்கு எண்ணிக்கை முன்னேற்றத்தைக் காண்கிறது. திமுகவின் வாக்குகளைப் பொறுத்தவரை முன்பு 70% ஆண்களின் வாக்குகள், 30% பெண்களின் வாக்குகள் என்று இருந்தது இப்போது மாறியுள்ளது. திமுகவில் பெண்களின் வாக்குகள் 20% அதிகமாகி 50% சதவீதமாக முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் ஆண்களின் வாக்குகள் 20% குறைந்து 50% சதவீதமாக சரிந்துள்ளது. திமுகவிலிருந்து மாறும் 20% ஆண்களின் வாக்குகள் பெரும்பாலும் நாம் தமிழர் மற்றும் பாஜகவிற்கு செல்கின்றன.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான இலவசப் பேருந்து, மகளிர் உரிமைத் தொகை, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை போன்றவை பெண்களின் வாக்குகளை திமுகவிற்கு கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் வாக்குகள்

எப்படி பெண்களின் வாக்குகள் இந்த தேர்தலில் மாறுகிறதோ, அதேபோல் அரசு ஊழியர்களின் வாக்குகளும் மாற்றம் காண்கிறது. வழக்கமாக திமுகவிற்கு விழும் அரசு ஊழியர்களின் வாக்குகளில் இந்த முறை 30% சதவீதம் குறைந்திருக்கிறது. திமுக இழக்கும் இந்த 30% சதவீத அரசு ஊழியர் வாக்குகளில் 25% அதிமுகவிற்குப் போகிறது. 5% பாஜகவிற்குப் போகிறது.

அதேபோல் காவல்துறையினரின் வாக்குகளில் இதுவரை திமுகவிற்கு வந்து கொண்டிருந்த 25% சதவீத வாக்குகள் தற்போது குறைந்து, அந்த வாக்குகள் அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் சரிபாதியாகச் செல்கிறது.

இளைஞர்களின் வாக்குகள்

தனது கட்சியின் மொத்த வாக்குகளில் 18-21 வயது இளைஞர்களின் வாக்குகளை அதிக விகிதத்தில் கொண்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது. நாம் தமிழர் கட்சிக்கு மற்ற வயதினரின் வாக்குகளைக் காட்டிலும் இளைஞர்களின் வாக்கு 7% அதிகமாக இருக்கிறது. இன்னொரு புறம் கடலோரப் பகுதிகளிலும் நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவு அதிகம் இருக்கிறது.

கட்சியின் மொத்த வாக்குகளில் இளைஞர்களின் வாக்குகளை அதிகம் கொண்ட இரண்டாவது கட்சியாக பாஜக இருக்கிறது.

மூன்றாவது இடத்தில் திமுகவும், நான்காவது இடத்தில் அதிமுகவும் வருகின்றன.

ஆக மொத்தத்தில், இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது அரசியலில் பல மாற்றங்களை தமிழ்நாட்டில் கொண்டுவந்திருக்கிறது. எல்லா சவால்களையும் வென்று இந்தியா கூட்டணியே தமிழ்நாட்டில் வெற்றிக் கொடியை நாட்டுகிறது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்கு சதவீதத்தில் முன்னேற்றம் கண்டாலும் வெற்றி எதுவும் பெற முடியாமல் பின்னடைவை சந்திக்கிறது. அதிமுக தனது வாக்கு சதவீதத்தினை தக்க வைக்கிறது.

கருத்துகள் இல்லை: