திங்கள், 22 ஏப்ரல், 2024

மோடியின் மதவெறி பேச்சு : நாட்டின் தங்கத்தை எல்லாம் முஸ்லீம்களுக்கு தருவோம் என்கிறது காங்கிரஸ்!

 tamil.oneindia.com  - Vigneshkumar : டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி பேசியது இணையத்தில் தீயாகப் பரவி வரும் நிலையில், இதை திமுகவின் சரவணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நமது நாட்டில் இந்த முறை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.
DMK and Congress targets Modi for his Speech on Muslims in Rajasthan Rally
நாகாலாந்து, மணிப்பூரில் ஓரிரு இடங்களில் வன்முறை அரங்கேறிய நிலையில், அதைத் தவிர பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது.



லோக்சபா தேர்தல்: இதற்கிடையே அடுத்த கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேசியளவில் பார்க்கும் போது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. இதனால் பிரச்சாரம் எல்லா இடங்களிலும் அனல் பறக்கிறது.

இரண்டாம் கட்ட தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் நடக்கும் நிலையில், ராஜஸ்தானிலும் நடக்கிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாக மோதும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. அங்கிருந்து மொத்தம் 25 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்வாவார்கள். இதற்கிடையே அங்கு இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசியது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள் என்று மோடி பேசியிருந்தார்.

மோடி பேச்சு: பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, ​​தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா..

பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது.

திமுக விமர்சனம்: பிரதமர் மோடியின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டானது. எதிர்க்கட்சிகள் பலரும் பிரதமர் மோடி எதற்காக இப்படிப் பேசுகிறார் என்று விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே திமுகவின் பேச்சாளர் சரவணன் பிரதமர் மோடியின் இந்த பேச்சை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தோல்வி பயத்தில் மோடி அவர்கள் பிதற்ற ஆரம்பித்துவிட்டார்.. இஸ்லாமியர்களைக் கேவலம் ஓட்டுக்காக இப்படிப் பேசலாமா? நெஞ்சம் பதைபதைக்கிறது!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் பதிலடி: பிரதமர் மோடியின் கருத்துக்குக் காங்கிரஸின் ஊடகத்துறைத் தலைவர் பவன் கெராவும் பதிலளித்துள்ளார். பிரதமர் மீண்டும் பொய் கூறுகிறார் என்று அவர் சாடியுள்ளார். பிரதமரால் தவறுதலாகக் கூட உண்மையைச் சொல்ல முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷும் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த 2006இல் நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் "எஸ்சி, எஸ்டி பிரிவினர், ஒபிசி பிரிவினர், பெண்கள், சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர், வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்றே மன்மோகன் சிங் கூறியதாகவும் காங்கிரஸ் கட்சியினர் விளக்கமளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: