ஞாயிறு, 15 அக்டோபர், 2023

ஹமாஸின் சொர்க்கபுரியாக விளங்கும் சுரங்கப்பாதை.. அப்படி என்ன இருக்கிறது?

      BCC Tanil : கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 7) ஹமாஸ் குழுவின் எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் இயக்கத்தினரால் காசா பகுதிக்குக் கீழே ரகசியமாக பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட சுரங்க அறைகளில் சில பகுதிகளைத் தாக்குவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோனதன் கான்ரிகஸ், இந்த ரகசிய நிலத்தடி அறைகளின் வலைப்பின்னல் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார். “இருபது ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, அவர்கள் காசா நகரத்திலிருந்து தெற்கில் இருக்கும் கான் யூனிஸ் மற்றும் ராஃபா வரை இந்த சுரங்க கட்டமைப்புகளை அமைத்தனர்,” என்றார் அவர்.

மேலும், காசா, இரண்டு அடுக்குகளால் ஆன பகுதி. ஒன்று தரைக்கு மேல் பொது மக்களுக்கானது, மற்றொன்று நிலத்தடியில் ஹமாஸ் குழுவினருக்கானது என்றார்.

எவ்வளவு நீளமானவை இந்தச் சுரங்கங்கள்?

ஹமாஸ் குழுவின் நிலத்தடிச் சுரங்கப்பாதைகளைக் குறிவைத்து தகர்க்கும் இஸ்ரேல்

அவர் மேலும் கூறுகையில், “இந்த சுரங்கப்பாதைகள் இவை காசா குடிமக்களுக்கான பதுங்கு குழிகள் அல்ல என்றும், ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக்குழுவினர் தொடர்ந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசவும், தாக்குதல்களைத் திட்டமிடவும் பயன்படுத்தும் கட்டுமானங்கள்,” என்று கூறினார்.

இஸ்ரேலால் ‘காசா மெட்ரோ’ என்றழைக்கப்படும் இந்த சுரங்க கட்டமைப்பின் பரப்பை மதிப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் இது 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் மட்டுமே கொண்ட ஒரு பகுதியின் அடியில் பரந்திருப்பதாக நம்பப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த ஒரு மோதலைத் தொடர்ந்து, வான்வழித் தாக்குதல்களில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான சுரங்க அறைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறின. ஆனால், ஹமாஸ் தனது சுரங்கப்பாதைகள் 500 கி.மீ. நீளம் கொண்டதாகவும், அவற்றில் 5% மட்டுமே தாக்கப்பட்டதாகவும் கூறியது.

காசா பகுதியில் இருக்கும் இந்த சுரங்க கட்டமைப்புகள் பூமிக்குக் கீழே 100 அடி ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த சுரங்க அறைகள் எப்போது கட்டப்பட்டன? எதற்குப் பயன்பட்டன?

கடந்த 2005ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவிலிருந்து தனது படைகள் மற்றும் குடியேறியவர்களை திரும்பப் பெறுவதற்கு முன்பு காசாவில் சுரங்கப்பாதை கட்டுமானத்தைத் தொடங்கியது.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹமாஸ் அப்பகுதியைக் கைப்பற்றியதும் இந்த சுரங்க அறைகள் மேம்படுத்தப்பட்டன. இதனால் இஸ்ரேலும் எகிப்தும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் அதன் வழியாகச் சென்று வருவதையும் பொருட்களைக் கொண்டு செல்வதையும் கட்டுப்படுத்தின.

இந்த சுரங்கங்களின் செயல்பாடு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், கிட்டத்தட்ட 2,500 சுரங்க கட்டமைப்புகள் ஹமாஸ் மற்றும் பிற குழுக்களால், வணிகப் பொருட்கள், எரிபொருள், மற்றும் ஆயுதங்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டன.

கடந்த 2010ஆம் ஆண்டில் இஸ்ரேல் எல்லைகளைக் கடந்து பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்லப்பட அனுமதித்த பிறகு, கடத்தலுக்கான தேவையும் குறைந்துவிட்டது.

சுரங்கப்பாதைகளில் தண்ணீரைச் செலுத்தியும் அவற்றைத் தகர்த்தும் எகிப்து கடத்தலைக் கட்டுப்படுத்தியது.

தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படும் சுரங்க கட்டமைப்புகள்

இதைத்தொடர்ந்து, ஹமாஸும் பிற குழுக்களும் இஸ்ரேலிய படைகளைத் தாக்குவதற்காக இந்த சுரங்கங்களைத் தோண்டத் தொடங்கின.

ஆயுதமேந்தியப் போராளிகள் 2006ஆம் ஆண்டில், இஸ்ரேலுடனான எல்லைக்கு அடியில் இருந்த ஒரு சுரங்கத்தைப் பயன்படுத்தி இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றனர். மேலும் மற்றொரு வீரரைக் கைப்பற்றி, அவரை ஐந்து ஆண்டுள் சிறைபிடித்து வைத்திருந்தனர்.

மேலும், 2013ஆம் ஆண்டில், இஸ்ரேலிய குடியிருப்புப் பகுதி ஒன்றில் விசித்திரமான ஒலிகள் கேட்டதையடுத்து,

அதைச் சோதித்த இஸ்ரேலிய பாதுகாப்புக் குழுவினர், அங்கு 1.6 கி.மீ. நீளமும், 18 மீட்டர் ஆழமும் கொண்ட சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். அது கான்கிரீட் கூரை மற்றும் கான்கிரீட் சுவர்களைக் கொண்டிருந்தது.

அதற்கு அடுத்த ஆண்டு, காசாவின்மீது ஒரு பெரிய வான் மற்றும் தரைவழித் தாக்குதலை நடத்த, இத்தகைய ‘பயங்கர சுரங்கங்களின்’ மூலம் நடத்தப்படும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதைக் காரணமாகச் சொன்னது இஸ்ரேல்.

போரின்போது 30க்கும் மேற்பட்ட சுரங்கங்களை அழித்ததாக இஸ்ரேல் கூறியது. ஆனால் ஒரு போராளிக் குழுவும் ஒரு சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி நான்கு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றனர்.

அனைத்து வசதிகளையும் கொண்ட சுரங்க கட்டமைப்புகள்

ஹமாஸ் குழுவின் நிலத்தடிச் சுரங்கப்பாதைகளைக் குறிவைத்து தகர்க்கும் இஸ்ரேல்

எல்லைகளைக் கடந்து இஸ்ரேலுக்குள் செல்லும் சுரங்கப் பாதைகள் தற்காலிகமானவை. அவை அவ்வப்போது இஸ்ரேலின் பகுதிகளைக் கைப்பற்றவே கட்டமைக்கப்படுகின்றன.

ஆனால், “காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்கள் அதிக நாட்களுக்குத் தங்கும் வகையிலான வசதிகளோடு கட்டப்பட்டிருக்கின்றன,” என்கிறார் இஸ்ரேலின் ரெய்க்மன் பல்கலைக்கழகத்தில் நிலத்தடிப் போர்முறைகள் குறித்த வல்லுநராக இருக்கும் டாஃப்னே ரீஷ்மண்ட்-பராக்.

“ஹமாஸின் தலைவர்கள் இந்த சுரங்கங்களில் பதுங்கியுள்ளனர். அங்கு அவர்கள் கட்டுப்பாட்டு மையங்களை நிறுவியுள்ளனர்.

அங்கு மின்சாரம், மின்விளக்குகள், மற்றும் தண்டவாளங்கள் உள்ளன. அதற்குள் வசதியாக நிற்கவும் நகரவும் முடியும்,” என்கிறார் ரீஷ்மண்ட்-பராக்.

ஹமாஸ் குழுவினர், சிரியாவின் போராளிக் குழுக்கள், மற்றும் ஐ.எஸ் குழுவினர் ஆகியோரின் முறைகளைப் பார்த்து தங்கள் சுரங்கக் கட்டுமான உத்திகளை மேம்படுத்திக்கொண்டதாக அவர் கூறுகிறார்.

இந்த சுரங்கங்கள் எப்படி கட்டப்பட்டன?

காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்கள் பூமிக்குக் கீழே 100 அடி ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

அவை கண்டறியப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவற்றின் நுழைவாயில்கள் வீடுகள், மசூதிகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுக் கட்டடங்களுக்கு அடியில் அமைந்திருக்கின்றன.

காசாவிற்கு உதவியாக வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை இந்தச் சுரங்கங்களை அமைக்க ஹமாஸ் அமைப்பு மக்களிடமிருந்து பெற்றதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டுகிறது.

முந்தைய போர்களில் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டப் பல்லாயிரக்கணக்கான டன் சிமெண்டை பயன்படுத்தி இந்தச் சுரங்கங்கள் கட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறது.

கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதல்களின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் எல்லை தாண்டிய சுரங்கப்பாதை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலின் கஃபார் ஆசா பகுதிக்கு அருகே ஒரு சுரங்கப்பாதையின் வெளியேறும் வழி கண்டுபிடிக்கப்பட்டதாக சில செய்தியறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அது உறுதி செய்யப்பட்டால், 2021ஆம் ஆண்டின் இறுதியில் இஸ்ரேல் நிறுவி முடித்த, சுரங்கப்பாதைகளைக் கண்டறியும் அதிநவீன சென்சார்கள் பதிக்கப்பட்ட நிலத்தடி கான்கிரீட் தடுப்புக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டிருக்க வேண்டும்.

இது உறுதிசெய்யப்பட்டால், பேரதிர்ச்சியாக இருக்கும் என்று ரீஷ்மண்ட்-பராக் கூறுகிறார். எந்த சுரங்கப்பாதை கண்டறியும் அமைப்பும் முழுமையானது அல்ல என்று அவர் கூறிகிறார்.

“அதனால்தான் சுரங்கப்பாதைகள் பண்டைய காலங்களில் இருந்தே போர்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை முற்றிலுமாகத் தடுக்க வழி இல்லை,” என்கிறார் அவர்.

இந்த சுரங்கங்களை முற்றிலுமாக அழிக்க முடியுமா?

மேலும் பேசிய ரீஷ்மண்ட்-பராக், இந்த சுரங்கங்களை முற்றிலும் அழிப்பது சாத்தியப்படாது என்கிறார்.

“சில பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற மாட்டார்கள். சில சுரங்கங்கள் எங்கிருக்கின்றன என்பதே தெரியாது. மேலும் சில பகுதிகளை அழிப்பது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.

இவற்றை அழிப்பது, இஸ்ரேல் ராணுவம், பணயக் கைதிகள், பாலத்தீன மக்கள் ஆகிய முத்தரப்பிலும் பல மரணங்களை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.

2021ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவிலிருக்கும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தங்கும் மூன்று கட்டடங்களின் அஸ்திவாரம் இடிந்து 42 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் தாக்குதல் நடத்தினால், ஹமாஸ் குழு, பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும், பணயக் கைதிகளை சுரங்கப் பாதைகளுக்குள் அனுப்பி வைக்கும் என்கிறார் அவர்.

கடந்த 2021ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவில் இருக்கும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தங்கும் மூன்று கட்டடங்களின் அஸ்திவாரம் இடிந்து 42 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சுரங்கங்கள் எவ்வளவு ஆபத்தானவை?

மேலும், இந்தச் சுரங்கங்களுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானதாகவும் அமையக்கூடும் என்கிறார் ரீஷ்மண்ட்-பராக்.

ஹமாஸ் குழுவினர், மொத்த சுரங்கப்பாதை வலைப்பின்னலிலும் வெடிகளை வைக்கலாம், என்கிறார் அவர். “அவற்றில் இஸ்ரேலிய ராணுவத்தினரை நுழையவிட்ட பிறகு அதை வெடிக்க வைக்கலாம்.”

இல்லையேல், ஹமாஸ் குழுவினர் பதுங்கியிருந்து இஸ்ரேலியப் படையினரைச் சிறைபிடிக்கலாம் அல்லது இஸ்ரேலிய வீரர்களுக்கு ஆக்சிஜன் இல்லாமல் போகலாம், என்கிறார்.

சுரங்கத்துக்குள் செல்லாமல், கண்ணுக்குத் தெரியாத அவற்றை தரைக்கு மேலிருந்துச் சுற்றி வளைப்பதும் சிக்கலானது என்கிறார் அவர்.

ஆனால், இஸ்ரேல் ராணுவம் வேறு வகையான உத்திகளைப் பின்பற்றலாம், என்கிறார் சூஃபான் பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் இயக்குநரான காலின் க்ளார்க்.

உதாரணத்திற்கு டிரோன்கள் அல்லது ஆளில்லா வாகனங்களை அனுப்பி இந்தச் சுரங்கங்கள் அமைந்துள்ள இடங்களையும், அங்கிருக்கும் வெடிகுண்டுகளையும் கண்டறியலாம், என்கிறார் அவர்.

பூமியைத் துளைத்துச் சென்று பங்கர் சுரங்கங்களைத் தாக்கும் குண்டுகளையும் இஸ்ரேல் பயன்படுத்தாலாம். ஆனால் அவை கட்டுமானங்கள் நிறைந்த காசா பகுதியில் பெருமளவில் சேதத்தை விளைவிக்கும்.

 

கருத்துகள் இல்லை: