tamil.oneindia.com - Vignesh Selvaraj : வட்டியும் முதலுமா திருப்பி கொடுப்போம்.. முதல்வர் ஸ்டாலினை எச்சரித்த அமர் பிரசாத் ரெட்டி: இன்றே கைது!
சென்னை: எங்கள் கொடியை தொட்டால் உங்கள் கொடி இனி தமிழகத்தில் பறக்காது என முதலமைச்சர் ஸ்டாலினை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் எச்சரித்த அமர் பிரசாத் ரெட்டி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பனையூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. அவரது வீட்டுக்கு அருகில், சுமார் 50 அடி உயரமுள்ள பாஜக கொடி கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாஜகவினர் அந்த 50 அடி உயரத்திலுள்ள பாஜக கொடிக்கம்பத்தை, அண்ணாமலையின் வீட்டு அருகே நட்டு வைத்திருந்தனர்.
ஆனால், நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்காமல் இந்த கொடிக்கம்பத்தை நட்டு வைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அந்த பகுதியிலுள்ள சில அமைப்புகளும், பொதுமக்களில் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று இஸ்லாமியர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக போலீசார் ஜேசிபி வாகனத்தை வரவழைத்தனர்.
இதனால் ஆவேசமான பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால், போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானது. இந்த கைகலப்பில் பாஜக நிர்வாகி ஒருவரின் மண்டை உடைந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கொடிக்கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி வாகனத்தை பாஜகவினர் கற்களை கொண்டு தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.
பாஜகவினர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜே.சி.பி இயந்திரத்தை உடைத்த நிலையில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதோடு, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"எங்கள் கொடியை தொட்டால் உங்கள் கொடி இனி தமிழகத்தில் பறக்காது என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்." என்று முதலமைச்சர் ஸ்டாலினை குறிப்பிட்டு எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் ஆவேசமாகப் பதிவிட்டிருந்தார் அமர் பிரசாத் ரெட்டி.
தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக கொடி கம்பத்தை அகற்றி கோழைத்தனத்தில் ஈடுபடும் ஜனநாயக விரோத பாசிச தமிழக அரசு. வட்டியுடன் திருப்பிச் செலுத்துவோம் என்றும் அமர் பிரசாத் ரெட்டி பதிவிட்டிருந்தார். தள்ளு முள்ளு ஏற்பட்டதில் பாஜக நிர்வாகி ஒருவர் காயமடைந்த நிலையில், பாசிச திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் காவல்துறையின் இந்த முறைகேடுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்றும் அமர் பிரசாத் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் தான், அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து அமர் பிரசாத் ரெட்டி பதிவிட்டு வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பது பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக