மின்னம்பலம் - christopher : கட்சி மேலிடம் தன்னை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பதவிக்காக நான் முதுகில் குத்தவோ, மிரட்டவோ மாட்டேன் என்று டி.கே. சிவகுமார் இன்று (மே 16) உறுதியளித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
எனினும் அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதுதொடர்பாக முடிவெடுக்க இருவரையும் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்தது.
அதன்படி சித்தராமையா நேற்று மாலை டெல்லி சென்று காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களை சந்தித்தார். ஆனால் உடல்நிலை காரணமாக சிவக்குமார் டெல்லி செல்லவில்லை.
தொடர்ந்து தனது இல்லத்தில் நேற்று சிகிச்சை பெற்றுக்கொண்ட அவர், பெங்களூரில் இருந்து இன்று காலை விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் அளித்த பேட்டியில், ”இப்போது நாங்கள் 135 தொகுதிகளை வென்றுள்ளோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த கட்சியை (காங்கிரஸ்) கட்டியுள்ளோம். அதில் நானும் ஒரு அங்கம்.
சோனியா காந்தி எங்கள் ரோல் மாடல். காங்கிரஸ் அனைவருக்குமான குடும்பம். நமது அரசியலமைப்புச் சட்டம் மிகவும் முக்கியமானது. எனவே அனைவரின் நலனையும் பாதுகாக்க வேண்டும். ” என்றார்.
தொடர்ந்து அவர், “அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது எங்களின் அடுத்த இலக்கு. எங்களுடையது ஒன்றுபட்ட வீடு. இங்கு யாரையும் பிரிக்க விரும்பவில்லை. நான் ஒரு பொறுப்புள்ள மனிதன். பதவிக்காக கட்சியின் முதுகில் குத்தவும் மாட்டேன், மிரட்டவும் மாட்டேன். நான் தவறான வரலாற்றை நோக்கி செல்ல விரும்பவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக