tamil.oneindia.com - Vignesh Selvaraj : பவர் ஷேரிங் ஓகே.. ஆனால் ஒரு ‘ட்விஸ்ட்’.. டிகே சிவக்குமார் டிமாண்ட்.. உச்சகட்ட தலைவலியில் காங் தலைமை!
டெல்லி : கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தலைமை தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் சூழலில், 5 ஆண்டு கால ஆட்சியில் ஆளுக்கு 2.5 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருக்கலாம் என்ற யோசனையை தலைமை முன்வைத்தது. இந்த டீலுக்கு டிகே சிவகுமார் ஓகே சொல்லி இருந்தாலும், டிகே சிவக்குமார் ஒரு 'ட்விஸ்ட்'டான டிமாண்டை வைத்துள்ளதால் உச்சகட்ட குழப்பம் நீடிக்கிறது.
கர்நாடகாவின் 224 தொகுதிகளுக்கு மே 10ஆம் தேதி நடந்த தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தலைதூக்கத் தொடங்கியது.
அடுத்த முதல்வர் யார் என்பதைத் தீர்மானிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை ஒப்படைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை சித்தராமையா டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் முகாம் : அதற்கு அடுத்த நாளே மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி கே சிவக்குமாரும் டெல்லி புறப்பட்டுச் சென்றார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, காங்கிரஸ் மத்திய பார்வையாளர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தியை சித்தராமையாவும், டிகே சிவக்குமார் இருவரும் இன்றும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனாலும், கர்நாடகாவின் முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் தலைமை இன்னும் சிக்கலைச் சந்தித்து வருகிறது.
காங்கிரஸ் தலைமை முடிவு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மகத்தான வெற்றிக்கு சித்தராமையா, டிகே சிவக்குமார் இருவரின் பங்கும் மிக அதிகம். எனவே, இந்த விவகாரத்தில் யாருக்கும் அதிருப்தி ஏற்படாத வகையில் சிக்கலை முடிக்க நினைக்கிறது காங்கிரஸ் தலைமை. அதுவே 2024 தேர்தலுக்கும், காங்கிரஸின் எதிர்காலத்திற்கும் நல்லது எனக் கருதுகிறது.
அந்தவகையில், பவர் ஷேரிங் எனும் யோசனையை முன்வைத்தது காங்கிரஸ் தலைமை. முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமாரை முதலமைச்சராக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாகவே இந்தப் பேச்சுகள் தான் நடந்துள்ளன. எனினும், இதனை டிகே சிவக்குமார் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. சித்தராமையா இரண்டு ஆண்டுகள் முதல்வராகவும், அதன் பிறகு டிகே சிவக்குமாருக்கு 3 ஆண்டுகள் முதலமைச்சராக வாய்ப்பு வழங்கப்படும் என்ற டீலை தலைமை முன்வைத்துள்ளது.
பவர் ஷேரிங் : ஆனால், அந்த வாய்ப்பை சிவகுமார் நிராகரித்ததாக கூறப்படுகிறது. இப்போது முதல்வராக பதவியேற்பேன், இல்லையெனில் சாதாரண எம்எல்ஏவாகவே தொடர்வேன் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அவர் கூறியதாக கூறப்படுகிறது. சித்தராமையாவும் தான் முதல்வர் என்ற நிலையில் இருந்து அசையவில்லை.
இந்நிலையில், ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி என்பதோடு, ஒருவர் முதல்வராக இருக்கும்போது மற்றவர் துணை முதலமைச்சராக இருக்கலாம் என்ற யோசனையை காங். தலைமை முன்னெடுத்துள்ளது. காங்கிரஸ் தலைமையின் இந்த 'பவர் ஷேரிங்' டீலுக்கு டிகே சிவக்குமார் ஓகே சொல்லியுள்ளார்.
டிகே சிவக்குமார் டிமாண்ட் : ஆனால், பதவிக்காலத்தின் முதல் பாதியில் முதலமைச்சர் பதவி தனக்கு வேண்டும் என்று டிகே சிவக்குமார் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் மேலிட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, சித்தராமையாவை இதற்கு சம்மதிக்க வைக்க காங்கிரஸ் மேலிடம் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
சித்தராமையா டிகே சிவக்குமாரின் நிபந்தனைக்கு சம்மதிப்பாரா என்பது தெரியவில்லை. முதலமைச்சரை அறிவிப்பதில் காங்கிரஸ் தலைமை அவசரப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருவதால் இன்னும் 48 மணி நேரத்துக்கு அறிவிப்பு எதுவும் வெளியாகாது என்றும் கூறப்படுகிறது.
முடிவு வரும் வரை சித்தராமையாவும், சிவக்குமாரும் டெல்லியிலேயே தங்கியிருப்பார்கள் என்று தெரிகிறது. "கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு அறிக்கைகளையும், கருத்துகளையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு இரு தலைவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்" என்று காங்கிரஸ் மேலிட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக