செவ்வாய், 9 மே, 2023

இம்ரான் கான் கைது! நாடு முழுவதும் அதிகரிக்கும் பதற்றம்!.. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

zeenews.india.com  - Vidya Gopalakrishnan  :  பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளதாக டான் நாளிதழ் தெரிவித்துள்ளது.
தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் வழக்கறிஞர் பைசல் சவுத்ரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிடிஐ தலைவர் ஃபவாத் சவுத்ரி ஒரு ட்வீட்டில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ரேஞ்சர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்
மற்றும் வழக்கறிஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று கூறினார்.
அல்காதிர் அறக்கட்டளை வழக்கில் ஆஜரான பிறகு, PTI தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகவும்,


ஏன், எந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை விளக்க 15 நிமிடங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இஸ்லாமாபாத் காவல்துறைத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் செயலாளருக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமீர் பரூக் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமை நீதிபதி அமீர் பரூக் கூறுகையில், தான் இந்த விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பதாக இஸ்லாமாபாத் காவல்துறை தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால், பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை நீதிமன்றத்தில் அழைப்பதாக எச்சரித்ததாகவும் கூறினார்.

நாட்டின் கருவூல முறைகேடு வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவத்துடன் முரண்பட்டவர். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் கடந்த காலங்களில் முன்வைத்துள்ளார். தனக்கு எதிரான படுகொலை முயற்சியில் ராணுவ அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் குற்றம் சாட்டினார். நேற்று, பாகிஸ்தான் ராணுவம், இம்ரான் கான் மீது, எந்த ஆதாரமும் இல்லாமல், பணியில் இருக்கும் மூத்த ராணுவ அதிகாரி மீது மிகவும் பொறுப்பற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தியதாக குற்றம் சாட்டியது.

தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) என்ற கட்சியை தொடங்கிய இம்ரான்கான் 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் வென்று பிரதமரானார். பாகிஸ்தானில் எப்போதும் அரசியல் நிலைத்தன்மை என்பது கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. அங்கே எப்போதும் ஜனநாயகம் நீடித்ததில்லை. அரசுக்கும் ராணுவத்திற்கு முரண்ட்பாடு ஏற்படும் போது, ஆட்சி கவிழ்ப்பு நடந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றும். இதற்கு இம்ரான்கானும் விதிவிலக்கும் அல்ல. இம்ரான்கானுக்கு எதிராக தொடர்ந்து ஆட்சியை கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெற்று வந்தன.

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான இம்ரான் கான் அரசு பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டன. ஒருவழியாக பதவியில் இருந்து இம்ரான்கான் வெளியேற்றப்பட்ட நிலையில், அவரை கைது செய்து சிறையில் அடைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாகிஸ்தானில் வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து எந்தப் பரிசும் பெறப்பட்டாலும் அது அரசின் கருவூலத்தில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். ஆனால், இம்ரான் கான் தான் பதவியில் இருந்த போது பெற்ற பரிசுகளை அரசு கருவூலத்தில் வைப்பதற்கு பதிலாக விற்று பணம் சம்பாதித்தார் இம்ரான் கான் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

அரசின் கருவூல விதி 1974 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. பிரதமருக்கு மட்டுமின்றி, அரசியல் சாசன பதவிகளில் அமரும் ஒவ்வொருவருக்கும் இந்த விதி பொருந்தும். ஆனால், 2018-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இம்ரான் கான் எந்த விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

பிரதமராக பதவியில் இருந்த போது பெறப்பட்ட பரிசுகளை, இம்ரான் கான் சட்டவிரோதமாக விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதியப்பட்ட நிலையில், விசாரணைக்கு அவர் பல நாட்கள் ஆஜராகவில்லை. இந்நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கைதை எதிர்த்து அவரது கட்சியினர் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இம்ரான் கான் கைதுக்கு கண்டனம் தெரிவித்து கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தானில் அசாதாரண நிலை உருவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: