சென்னை : திமுக இளைஞரணியில் ஆரம்பகாலம் முதல் தனக்கு உறுதுணையாகச் செயல்பட்ட ஆவடி நாசரையே அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி அடித்திருப்பதன் மூலம் சீனியர்களுக்கு மறைமுக 'வார்னிங்' கொடுத்திருக்கிறாராம் முதலமைச்சர் ஸ்டாலின்.
சில திமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது வரம்பு மீறிப் பேசி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர். அது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி எதிர்கட்சியினரின் கடும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டது.
தூங்கவிடாமல் செய்த அமைச்சர்கள் : அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துவந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக அப்செட் ஆனாலும், சீனியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறினார். கடந்த ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட இதுதொடர்பாக தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.
என்னை துன்புறுத்துவதுபோல் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் செயல்படக்கூடாது. ஒவ்வொரு நாள் காலை கண் விழிக்கும் போதும் இன்று நம் கட்சியைச் சேர்ந்த யார் என்ன பேசி வைத்துள்ளனர் என்ற பதற்றத்திலேயே எழ வேண்டியுள்ளது. இது சில நேரங்களில் தூங்கவிடாமலும் செய்கிறது என ஸ்டாலின் பேசியிருந்தார்.
பதவி பறிப்பு : ஆனாலும், மூத்த அமைச்சர்கள் பலர் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகால திமுக ஆட்சியில் யாருடைய அமைச்சர் பதவியும் பறிக்கப்படவில்லை. சிலரது இலாகாக்கள் மற்றுமே மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், முதல் முறையாக அமைச்சர் ஆவடி நாசரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி, தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாவது முறை எம்.எல்.ஏ.. முதல்முறை அமைச்சர்!
நெருக்கமானவருக்கே இந்த நிலை : முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன் இளைஞர் அணி ஆரம்பிக்கட்ட காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தவர் நாசர். ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர் நாசர், தனது முன்கோபத்தால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், ஆவின் விவகாரத்தில் தொடர்ச்சியாக பிரச்சனைகள் ஏற்பட்டு வந்ததன் காரணமாகவும் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து தூக்கியடித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பால்வளத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம்.நாசரின் மகன் ஆசிம் ராஜா திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக ஆவடி மாநகரச் செயலாளராக செயல்பட்டு வந்தார். ஆசிம் ராஜா, ஆவடி மாநகராட்சி கவுன்சிலராகவும், பணிக்குழு தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் திமுக மாநகர செயலாளர் பொறுப்பில் இருந்து ஆசிம்ராஜா நீக்கப்பட்டர்.
நாசர் மகன் சர்ச்சை : ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் நாசர் மகன் ஆசிம் ராஜா விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஆவடி மாநகர திமுக செயலாளராக சன்.பிரகாஷ் நியமிக்கப்பட்டார். கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திமுக உட்கட்சி தேர்தலில் ஆசிம் ராஜா ஆவடி மாநகர செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் 5 மாதங்களிலேயே அவரது பதவி பறிக்கப்பட்டது.
மாநகராட்சி பணிக்குழு தலைவராக இருப்பதால், மாநகராட்சி பணிகளுக்கான ஒப்பந்த விவகாரத்தில் ஆசிம்ராஜாவின் தலையீடு அதிகம் உள்ளதாகவும், கட்சி நிர்வாகிகள் மத்தியில் இவர் மீது அதிருப்தி இருப்பதாகவும் கட்சித் தலைமைக்கு புகார்கள் சென்றன. அதன் பேரிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திமுக வட்டாரத்தில் பேசப்பட்டது.
சீனியர்களுக்கு எச்சரிக்கை : இந்நிலையில் தான் ஆவடி நாசரின் அமைச்சர் பதவியையும் பறித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதோடு, ஆவின் நிர்வாகத்தில் குளறுபடிகள் நிகழ்வதாகவும் தொடர்ந்து புகார்கள் கிளம்பிய நிலையில் இந்த ஆக்ஷனை எடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இது ஒருவகையில், திமுக சீனியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கை எனக் கூறப்படுகிறது. திமுக அரசுக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் யாருடைய மகனாக இருந்தாலும், எந்தப் பொறுப்பில் இருந்தாலும், நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறாராம் ஸ்டாலின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக